மருத்துவ வெண்பா - தேன் - பாடல் 3
வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.
நேரிசை வெண்பா
பித்தமுடன் வாந்தி பிரியாத தொந்தகபம்
எத்திவரும் வாய்வும் இறங்கிப்போம் – மெத்தவுமே
ஊணிலுறும் ரத்தமதை உற்றபடி சுத்திசெய்யும்
தேனின் பொதுக்குணமே செப்பு!
குணம்:
பித்தம், வாந்தி, தீராத நீண்டநாள் இருமல், வாய்வு ஆகியவை நீங்கும். உடலில் ஊறும் ரத்தத்தை தகுந்தபடி மிகவும் சுத்தம் செய்யும் தன்மையுடையது தேனின் பொதுக் குணமாகும்.
தேனினத்தில் கொம்புத் தேன், மலைத் தேன், மரப்பொந்துத் தேன், மனைத் தேன், புற்றுத் தேன், புதிய தேன், பழைய தேன் என ஏழு இனங்கள் முக்கியமாகக் கூறப்பட்டுள்ளன.