எண்ணியதை இனிது முடிக்கின் புண்ணியமாகிப் பொலியும் - உறுதி, தருமதீபிகை 492

நேரிசை வெண்பா

எண்ணியதைச் சாதித்(து) இனிது முடிக்கினது
புண்ணிய மாகிப் பொலியுமால் - எண்ணம்
உயிரின் மணமாய் ஒளிசெயலால் என்றும்
பயில்க உறுதி படிந்து. 492

- உறுதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தான் கருதிய நல்ல கருமத்தை உறுதியாய்ச் செய்து முடித்தால் அது அரிய புண்ணியமாய்ப் பெரிய மகிமை தருகின்றது, எண்ணம் உயிரின் மணமாய் ஒளி புரிகின்றது; அதனைப் புனிதமாகப் பயின்று இனிது உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உள்ளத்தின் தகுதி அளவே மனிதன் உயர்ந்து வருகின்றான் என்பதை முன்னம் அறிந்தோம்; இதில், உள்ளியதை அடைத்து கொள்ளும் திறனை உணர்ந்து கொள்கின்றோம்.

நல்ல எண்ணமும் நல்ல செயலும் மனிதனை நல்லவனாக்கி யாண்டும் நன்மை புரிந்து வருகின்றன. எண்ணங்கள் காரிய சித்திகளை அடையும் பொழுதுதான் அவை சீரிய உருவங்களாய்ச் சிறந்து திகழ்கின்றன.

சிலர் எண்ணுகின்றனர்; எண்ணியபடியே செயல் ஆற்ற முடியாமல் இடையே உடைந்து போகின்றனர். அவ்வுடைவுக்குக் காரணம் உள்ளத்தில் உறுதியான திண்மை யின்மையேயாம்.

என்ன இடையூறு நேர்ந்தாலும் யாதும் தளராமல் ஓயாது முயன்று கருதியதைக் கைக்கொள்பவரே உறுதியாளராய் உயர்ந்து விளங்குகின்றனர். யாண்டும் மூண்டு முடிவு காண்பதே ஆண் தகைமையாம். மனவுறுதியில் மகிமைகள் பல விளைகின்றன.

செயலில் பயன் கண்டு உயர்ந்தவனைக் கரும வீரன் என்று எவரும் புகழுகின்றனர். அங்ஙனம் காணாது சோர்ந்தவனைக் கையாலாகாத பேடி என. வையம் வைகின்றது.

Words are women, deeds are men. - Herbert

வார்த்தைகள் பெண்கள், செயல்கள் ஆண்கள்' என ஹெர்பர்ட் என்பவர் இங்ஙனம் கூறியிருக்கிறார், வினையாண்மை புரிந்து வீறு. கொண்டு நிற்பது ஆண்மை; அவ்வாறின்றி வீணே பேசித் திரிவது பெண்மை என்னும் இதில் திண்மையின் உண்மையை உணர்ந்து கொள்கின்றோம்

Words are the daughters of earth and deeds are the sons of heaven. - William Jones

’செயல்கள் தேவ குமாரர்கள்; வார்த்தைகள் வையச் சிறுமிகள்’ என வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இவ்வண்ணம் சொல்லியிருக்கிறார், ஊன்றிய உறுதி உன்னத நிலையை அடைகிறது.

எண்ணுதல், பேசுதல்களினும் எண்ணியதைத் திண்ணிதாகச் செய்து முடிப்பதே யாண்டும் உயர்ந்த புருடத்தன்மையாம்.

எண்ணியதைச் சாதித்(து) இனிது முடிக்கினது
புண்ணியமா கிப்பொலி யும்.

என்றது மனத் திட்பத்தின் மாட்சி தெரிய வந்தது.

காரிய நிகழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் அவ்வளவையும் கடந்து சாதனையாய்த் தொடர்ந்து கருதிய உரிமையை உறுதியாய்ப் பெறுதல் சாதித்தல் ஆகும்.

அருச்சுனன், துருபன், பகீரதன் முதலானவர்கள் எண்ணியதைச் சாதித்துக் கொண்டமையால் திண்ணிய வீரராய் உயர்ந்து புண்ணிய நீரராய் இன்றும் பொலிந்து விளங்குகின்றனர்.

நல்ல கருமங்களிலிருந்து தருமங்கள் விளைகின்றன: அவ்விளைவுகளை நன்கு பேணி வருபவர் நலம் பல பெறுகின்றனர்.

எண்ணம் உயிரின் மணம். நல்ல பூவிலிருந்து இனிய வாசனை வீசுதல் போல், உயர்ந்த உயிரிலிருந்து சிறந்த எண்ணங்கள் எழுகின்றன. அந்த அரிய எண்ணங்களை வீணாக்காமல் பயனும் நயனும் பொருந்தப் புனிதமாகப் பேணியருள்பவர் மனித சமுதாயத்துக்கு மாண்பு புரிகின்றனர். புனித நினைவுகள் புண்ணியங்களாகின்றன.

மலர், காய், கனி என மானிடன் மருங்கு நினைவு, சொல், செயல்கள் நிலவியுள்ளன.

உன் உள்ளத்தில் தோன்றுகின்ற நல்ல கருத்துக்களைத் திருத்தமாக விருத்தி செய்து செவ்விய பலனை எய்து என்று கவிராஜ பண்டிதர் வலியுறுத்துகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-19, 10:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 167

மேலே