‘யூனியன்’

‘யூனியன்’
முதலாளி வர்க்கங்களின் ஆதிக்கப் போக்குக்கு எதிராக தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளுக்காக அத்தொழிலாளர்களால் தொடங்கி கையாளப்படவேண்டிய ஓர் அஹிம்சாயுதம்.
எனினும், அதே தொழிலாள வர்க்கம், அதனை சில சமயங்களில் கண்மூடித்தனமாக வறட்டுக் காரியங்களுக்கும் வன்நிகழ்வுகளுக்கும் சாதகமாக்கிக் கொள்ளும் பொருட்டு சுயநல ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வதுதான் அறிவீனக் கொடுமை.

‘யூனியன்’
அதிகாரிகளின் முரட்டு நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி இடுவது மட்டுமல்ல. ஊழியர்களின் பிற்போக்கான பிடிவாத செயல்களுக்கு காற்புள்ளி போடுவதும் அதுவே.

‘யூனியன்’
பல இடங்களில் கண்ணீரை துடைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி, இறுதியில் இரத்தங்களை உறிஞ்சியிருக்க்கின்றன.

யூனியனால் தற்காலிகத்தை நிரந்தரமாக்கவும் முடியும். நிரந்தரத்தை நிர்முலமாக்கவும் முடியும்

நிர்வாக வர்க்கங்கள் தாமாக மூடிய ‘கேட்’-களை விட, யூனியனால் மூடப்பட்ட ‘கேட்’-களே நாட்டில் அதிகம். ‘கேட்’-டுக்கு உள்ளிருப்பவர்கள் வேறு தொழில்…. முதலீடு பற்றி விவாதிக்கிறார்கள். ‘கேட்’-டுக்கு வெளியே இருப்பவர்கள் வேறு வழியின்றி கூக்குரலிடுகிறார்கள்

வீட்டில் அனுபவிக்கவேண்டிய பட்டினிக் கொடுமையை உண்ணாவிரதம் என்ற பெயரில் வீதியில் அமர்ந்து அனுசரிக்கிறார்கள்.

கறுப்புக் கொடியின் கண்டனப் போராட்டங்கள் கண்ணீர்ப் போராட்டங்களாகவும் சிவப்புக்கொடியின் மறியல் போராட்டங்கள் இரத்தப் போராட்டங்களாகவும் மாறிவிடுகின்றன

போராட்டத்தின் ஒருமித்தக் கருத்துக்கு நேர்மாறானவர்கள் கால்வாசிப் பேராவது சங்கத்தில் இருப்பார்கள்.

அதனால் அவர்களை மிதவாதிகள் என்று சொல்லலாகாது. தைரியமற்றவர்களும் பயந்தசுபாவிகளுமே அவர்கள்.

நடுதலிலிருந்து வேர் தளிர்க்கும்வரை சிரத்தையாய் நீரிறைக்கப்பட்டு… பூக்கும் பருவத்திலும் காய்க்கும் பருவத்திலும் கவனிப்பாரற்று விடப்படும் தாவரங்கள் போல் பயனற்றுப் போய்விடுகின்றன பல யூனியன்கள்

ஏகாதிப்பத்திய வர்க்கப் போக்குக்கு சிம்ம சொப்பனம் யூனியன் என்றால், யூனியன் நடவடிக்கைக்கு எதிரான புதிர் ஏகாதிபத்தியம்.


***********************************

எழுதியவர் : யேசுராஜ் (11-Oct-19, 11:51 am)
சேர்த்தது : யேசுராஜ்
பார்வை : 68

சிறந்த கட்டுரைகள்

மேலே