பிள்ளைகளும் கண்டிப்பும்

"அடி மறந்திடும் சொல்லு மறக்காது" என்பது நம் முதியோர் பழமொழி. அதை நாம் ஏன் தவறாக புரிந்துகொண்டோம்? "அடி மறந்திடும்" அப்படியானால் நாம் என்ன காரணத்திற்காக பிள்ளைக்கு அடிக்கின்றோமோ அதை அவர்கள் மறந்துவிடுவார்கள் தானே! "சொல்லு மறக்காது" எனவே நாம் அவர்கள் தவறு விடும்போதோ அல்லது ஒரு பிழையைச் செய்யும்போதோ விளக்கிச்சொன்னால் அவர்கள் மனதில் மறக்காமல் பதிந்துவிடும் என்பதுதானே அர்த்தம்.

நம்மில் பலர் "எத்தனை முறை சொன்னாலும் கேட்டக மாட்டேன் என்கிறான் நல்ல அடிபோட்ட பின்புதான் வழிக்கு வந்திருக்கிறான்” என்று சொல்வார்கள். உண்மையில் அது முற்றிலும் தவறு என்பதே எனது விவாதம். ஏனெனில் பிள்ளைகள் சிறு பிள்ளைகளாக அதாவது தம்மால் எதிர்க்க முடியாத வயது வரைக்கும் தான் அவர்கள் அடி நோகுமே என்று பயப்படுவார்கள். ஆதலால் அவர்கள் அடிக்கு பயந்து நாம் சொல்வதை செய்வார்கள். ஆனால் அறிவுபுர்வமாக விளங்கிகொண்டு அதை செய்யாமல் விடுகிறார்கள் என்ற தவறான எண்ணத்தை ஏன் பலரால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு முறை பிளைவிடும்போதும் ஏன்? எதற்கு? பிழை செய்யக்கூடாது என விளக்கிச்சொல்லுவீர்களானால் அவர்கள் மனதில் நாளடைவில் நிலையாக பதிந்து விடும் . வாழ்வில் என்றுமே மறக்க மாட்டார்கள். பிள்ளைகளின் கிரகிக்கும் தன்மையைக்கூட இதன்முலம் வளர்த்துக்கொள்ளலாம். சிறு வயதிலிருந்தே இதை கடைப்பிடித்தால் வளர்ந்து பெரியவர்களானாலும் நாம் சொல்வதைக்காது கொடுத்து கேட்கும் திறன் அவர்களிடம் வளரும்.
அப்படியானால் பிள்ளைகளை எப்படி கண்டிப்பது என்ற பிரச்சனை இங்கு எழுகின்றது.
இதோ பரீட்ச்சார்த்தமான ஒரு வழிமுறை!

சிறு வயதிலிருந்தே அதாவது குழந்தை அடம்பிடிக்கும் வயதிலிருந்தே கண்டிக்கும் முறையை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். தனிப்பட்ட ஓரிடத்தில் அமைதியாக இருக்கும் படி விடலாம்.எழும்பாமல் இருந்த இடத்திலேயே இருக்கச்செய்தல். இதன் மூலம் நாம் சிந்திப்பதற்கு வாய்ப்புக்கொடுப்பதுடன் அவ்விடயம் மனதில் பதிந்து விடுவதற்கும் போதியளவு நேரம் கொடுக்கப்படுகின்றது. விளையாட்டுப்பொருட்களின்றியும் ஒருவருடனும் பேசாதும் இருப்பது எவ்வளவு கடினமென்பதையும் அவர்கள் சிறுவயதுமுதலே உணர்ந்து கொள்வார்கள்.
அதற்காக நீண்ட நேரம் இருத்திவிடக்கூடாது. அரை மணித்தியாலம் போதுமானது. இரண்டு தொடக்கம் மூன்று வயதுப்பிள்ளைக்கு ஐந்து நிமிடங்கள் காணும். விரும்பத்தகாத ஒன்றைக்கேட்டு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த முறைமையை கையாளுதல் மிகச்சிறந்தது. பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அடிபட்டுக்கொண்டால் கூட இந்த வழியைக்கையாளலாம்.
இங்கு ஒன்றை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும் அதாவது தண்டனை முடிந்த அடுத்த கணமே அவர்களை அணைத்து தேற்றுவது மிக முக்கியம். அப்பொழுது அவர்களுக்கு பெற்றோர்கள் மேலிருக்கும் அன்பு இன்னும் ஒரு படி உயருமே தவிர குறைந்து போகாது.
அத்துடன் ஏன் பிள்ளையை இருக்கச்செய்தேன் அல்லது குறிப்பிட்ட இடத்தில் தனியே நிற்கச்செய்தேன் என்பதை மீண்டும் ஒரு முறை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சோர்ந்து போகாது மீண்டும் மீண்டும் இந்த வழியை கையாளுங்கள் வெற்றி பெறுவீர்கள்.

எழுதியவர் : யோகராணி கணேசன் (11-Oct-19, 3:21 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 198

சிறந்த கட்டுரைகள்

மேலே