தத்தம் இயல்புக்குத் தக்கபடி ஒத்துயிர்கள் ஊக்கி உஞற்றும் - உறுதி, தருமதீபிகை 494

நேரிசை வெண்பா

தத்தம் இயல்புக்குத் தக்கபடி தாமமைந்தே
ஒத்துயிர்கள் ஊக்கி உஞற்றுமால் - மெத்தியபுன்
பூனை எலிமேல் புலிமான்மேல் பொங்கியெழும்
யானைமேல் செல்லும் அரி. 494

- உறுதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தம்முடைய இயல்புக்குத் தக்கபடியே ஒவ்வொருவரும் கருமங்களைச் செய்து வருகின்றனர்; பூனை எலியை நாடுகின்றது . புலி மானைத் தேடுகின்றது; சிங்கம் யானையை அவாவி அடலோடு செல்லுகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர். இது இயல்பின் அளவே செயல் என்கின்றது. உயிரோடு இயற்கையாய் இயங்கி வருவது இயல்பு என வந்தது.

உருவங்கள் ஒரு நிலையில் ஒத்திருந்தாலும் பல படிகளில் பேதமாய் மக்கள் பிரிந்திருக்கின்றனர். பிறப்பு, இருப்பு, பழக்கம், வழக்கம், அறிவு, ஆற்றல் முதலிய பிரிவுகளால் சீவர்கள் பலவாறு மாறுபட்டுள்ளனர். மாறுபாடுகள் யாவும் வேறுபாடுகளை விளக்கிக் கூறுபாடுகளாய்க் குலாவி நிற்கின்றன.

வலியவன், மெலியவன், பெரியவன், சிறியவன், அறிஞன், மூடன், செல்வன், ஏழை, வீரன், கோழை என இன்னவாறு பின்னங்களும் பிரிவுகளும் யாண்டும் கூறப்படுகின்றன.

முன் செய்துள்ள கருமங்கள் மருமங்களாய் மருவியுள்ளமையால் அவ்வுரிமைகளோடே யாவரும் பிறந்திருக்கின்றனர். பழகியுள்ள அந்தப் பழைய வாசனையின்படியே விளைவுகளும் நிலைமைகளும் சீவ கோடிகளிடம் விளைந்து நிற்கின்றன.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கறங்கென வினையின் ஓடிக்
..கதியொரு நான்கின் உள்ளும்
பிறந்துநாம் பெற்ற பெற்ற
..பிறவிகள் பேசல் ஆகா:
இறந்தன இறந்து போக
..எய்துவ(து) எய்திப் பின்னும்
பிறந்திட இறந்த தெல்லாம்
..இதுவுமவ் இயல்பிற் றேயாம் – யசோதர காவியம்

நேரிசை வெண்பா

இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப்
பிறந்த பிறப்பால் அறிக; - பிறந்திருந்து
செய்யும் வினையால் அறிக இனிப்பிறந்(து)
எய்தும் வினையின் பயன். 156 – அறநெறிச்சாரம்

பிறவிகளின் நிலைமைகளை இவை உணர்த்தியுள்ளன. அனுமான அறிவால் விளைவுகளை யூகித்துக் கொள்கின்றோம். பலவகையான வினைகளின் வழியே வெளிவந்துள்ளமையால் விசித்திர வேறுபாடுகளில் மனிதர் விரிந்து நிற்கின்றனர்.

தம்மிடம் இயல்பாய் அமைந்துள்ள சுபாவங்களின்படியே சீவர்கள் தொழில் முறைகளில் இறங்கி எவ்வழியும் முயன்று வருகின்றனர். முயற்சியின் வழியே உயர்ச்சிகள் ஒளிர்கின்றன.

மனிதர்களுடைய தரங்களை இணைத்து எண்ணிக் கொள்ள பூனை, புலி, சிங்கங்களை இங்கே உவமையாக எடுத்துக் காட்டியது.

எலியை எதிர்நோக்கிப் பூனை பிடிப்பது போல் சிலர் சிறிய பயனையே கருதிக் கைக்கொண்டு களித்து நிற்கின்றனர். உயர்ந்த மனித உருவங்களில் தோன்றியிருந்தாலும் பலர் உள்ளங்கள் இழிந்து எள்ளல்கள் மலிந்துள்ளனர்.

நரி, நாய், பூனை, பன்றி முதலிய இழிந்த மிருகங்களின் இயல்புகள் பல மனிதனிடம் நன்கு படிந்திருக்கின்றன. நய வஞ்சகமும் ஏமாற்றும் உள்ளவர்களைக் குள்ள நரிகள் என்று உலகம் சொல்லி வருகின்றது. அதிக சபலமும் வீண் பிடிவாதமும் உள்ளவர்களைக் குரங்குப் பிறவி என்.று கூறுகின்றது. மடமையும் முரட்டுத்தனமும் உடையவரை மாட்டுப்பிறவி என்று சாட்டுகின்றது. ஒரு நிலையில் நில்லாமல் இருதலை மணியம் செய்கின்றவரை வெளவால் என்று வையம் வைகின்றது. பிறர் உள்ளம் நோகப் பேசுகின்றவரைக் கொள்ளித்தேள் என்று சொல்லுகின்றது. கடும் தீம்பு புரிகின்றவரைக் கொடும் பாம்பு என்று குறிக்கின்றது. இவ்வாறே பொல்லாத சுபாவங்கள் பொருந்தியுள்ள மனிதர் இங்கே திரிந்து வருகின்றனர்.

மனிதனிலே பேய், நாய், பன்றி, கழுதை, மாடு, குரங்கு. மனிதனிலே மனிதன், மனிதனிலே தெய்வம் என்று மருமமாய் மருவியுள்ளமையைக் கருமங்களிலே காணலாகும்.

திருவொற்றியூர்க் கோவில் எதிரேயுள்ள சாலை அருகில் ஒரு யோக சித்தர் அமர்ந்திருந்தார். அவ்வழியே செல்லுகின்ற மக்களைக் குறித்து அவர் சுட்டிச் சொல்வது விசித்திரமாயிருந்தது. வட்டிகளை விழைந்து கொள்ளும் பெருஞ்செல்வர்களைக் கண்டால் கரடிகள் போகின்றன என்பார். கற்றபடி ஒழுக்கம் இல்லாத கல்விமான்களைக் காணின் குங்குமம்.சுமந்த கழுதைகள் செல்லுகின்றன என்பார். நெறிகேடான தூர்த்தர்களைப் பார்த்தால் நாய்கள் நடக்கின்றன என்பார். பேராசையாளரை நோக்கினால் பேய்கள் போகின்றன என்பார். இன்னவாறே பன்றி, எருமை, ஓநாய், கழுகு எனப் பலவாறு சொல்வி வந்தவர் ஒருநாள் மாத்திரம் ’ஒரு மனிதன் போகின்றான்; ஒரு மனிதன் போகின்றான்’ என்று இரு முறை மகிழ்ந்து பேசினார். வடலூர் இராமலிங்க சுவாமிகளைக் கண்ட போதுதான் இந்த வார்த்தைகள் அவருடைய வாயிலிருந்து வெளி வந்தன. பித்தனைப் போல் நெடுங்காலம் பிதற்றி வந்த அந்த ஞான சித்தர் அதிசயமாக அன்று கூறிய உரை மனித உலகத்தை நன்கு காட்டி நின்றது.

நேரிசை வெண்பா

நரிநாய் கழுதையென நாளும் நவின்ற
பெரியார் ஒருநாள் பிறிதாய் - அரிய
ஒருமனிதன் என்ற உரையால் உலகின்
மருமநிலை கண்டேன் மகிழ்ந்து.

குண சீலர்களான அரிய மனிதர்களைக் காண்பது மிகவும் அருமை என்பதை இதனால் அறிந்து கொள்கின்றோம். இனிய மனித வடிவங்களில் மருவியிருந்தாலும் கொடிய இயல்புகளை உடையவர் மனுடராகார் என்றமையால் புனிதமான மனிதர் நீர்மைகளின் சீர்மைகள் நிலை தெரிய வந்தன.

அரி யானை மேல் செல்லும். என்றது மேன்மையான கம்பீர மனிதரது பான்மை காண வந்தது. அரி – சிங்கம்; காட்டு விலங்குகளுள் தலைசிறந்துள்ள அது நாட்டு மக்களுள் உயர்ந்துள்ளவர்க்கு ஒப்பாய் நேர்ந்தது. அதனை மிருகேந்திரன் என்பது போல்.அரசனை நரேந்திரன் என்கின்றோம். பான்மை உயர மேன்மை உயர்கிறது.

சிறந்த கருமங்களைக் கருதி முயன்று உயர்ந்த தருமங்களைப் புரிந்து நிற்கும் உறுதியாளர் ’அரியேறு’ என யாண்டும் மேன்மை பெற்று விளங்குகின்றார்.

புருடார்த்தம் என்பது அரிய முத்தி நிலையைக் குறித்துள்ளது. அதனை உறுதியாக அடைகின்றவன் எவனோ அவனே உண்மையான புருடன். உற்ற உயர் பெயருக்கு உரிமை ஆகின்றான்.

விரைந்து அழிந்து படுகின்ற இழிந்த போகங்களை நச்சி நிற்கும் அளவும் மனிதன் கொச்சையாய் இழிந்து நிற்கின்றான்; அழியாத நித்திய முத்தியை அடைய நேர்ந்தபோது அவன் அதிசய மகானாய்த் துதி செய்யப் பெறுகின்றான். அற்பங்களை இகழ்ந்து தள்ளி விட்டு உன்னத பதவியை உன்னி எழுவது உத்தம நிலையாய் உயர்ந்து திகழ்கின்றது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

கொல்சின யானை பார்க்கும்
..கூருகிர்த் தறுகண் ஆளி
இல்எலி பார்த்து நோக்கி
..இறப்பின்கீழ் இருத்தல் உண்டே?
பல்வினை வெள்ளம் நீந்திப்
..பகாஇன்பம் பருகின் அல்லால்
நல்வினை விளையுள் என்னும்
..நஞ்சினுட் குளித்தல் உண்டே? 2985 துறவு வலியுறுத்தல், முத்தி இலம்பகம், சீவகசிந்தாமணி

யாளி யானையை உணவாகப் பார்க்குமே அன்றி எலியைப் பார்த்து நில்லாது; அது போல் அறிவுடையோர் மேலான பேரின்ப நிலையைக் கருதுவதல்லது சிற்றின்பத்தை இச்சித்து நில்லார் எனச் சீவக மன்னன் இவ்வாறு கூறியுள்ளான். தன்னுடைய அரச போகங்களை நஞ்சு என்று வெறுத்துப் பரம பதத்தை அவ்வுத்தம வீரன் உறுதியாகக் கருதியுள்ளமையை இவ்வுரைகளால் உணர்ந்து கொள்கின்றோம். உரிமையாக அடைய வேண்டியதை விரைந்து அடைந்து கொள்வதே உயர்ந்த பிறவிப் பேறாம் என்பதை வேந்தன் உணர்ந்து பேசியிருக்கிறான்.

தெளிந்த ஞானக்காட்சி எழுந்தபொழுது சிறந்த தெய்வத் தேசகள் ஒளி வீசி நிற்கின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Oct-19, 11:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

சிறந்த கட்டுரைகள்

மேலே