பாலப் பருவம் படியாதிருந்தால் ஞாலத்து இருகால் விலங்காய் நிற்பாய் - மறதி, தருமதீபிகை 484

நேரிசை வெண்பா

பாலப் பருவம் படியா(து) இருந்தமையால்
வாலப் பருவம் வளரவே - ஞாலத்(து)
இருகால் விலங்காய் இழிமரமாய் நின்றாய்
ஒருகால் உணர்க உடன். 484

- மறதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இளமையில் படியாமல் மறந்து இருந்தமையால் பின்பு இருகால் மிருகமாய் இழிந்த மரமாய்ப் பெருகி நின்று பிழைபட நேர்ந்தாய். இதனை உடனே உணர்ந்து திருந்துக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதன் பல பருவங்களையுடையவன். உருவ நிலையில் ஒருவனாய்த் தோன்றினும் பருவ வரவுகளால் பிரிவினைகளும் பெயர்களும் மருவியுள்ளன. பிள்ளை, குழந்தை, மதலை, பாலன், சிறுவன், குமரன், காளை, மீளி, விருத்தன், கிழவன் என இவ்வாறு மனிதன் வெவ்வேறு நிலைகளில் விளங்கி நிற்கின்றான். கால வேற்றுமைகளால் பல வகையான கோலங்கள் தோற்றுகின்றன.

ஐந்து வயதிலிருந்தே நெஞ்சில் நினைவுகள் நிலை பெறுகின்றன. அறிந்து கொள்ள வேண்டியவைகளை அறிய உரிய பருவமாய் அது மருவியுள்ளமையால் பள்ளிப் பருவம் என உலகம் அதனைப் பாராட்டி வருகிறது. பாலன் படிக்கப் போகின்றான். அந்தச் சிறுவன் அறிவு பெருகி வரப் பெற்றோர்கள் வழி கோலி விடுகின்றனர். அந்த வழியே விழி திறந்து நோக்கி அவன் ஒளி பெற்று வருகின்றான். உள்ளத்தில் உறைந்து கிடக்கின்ற அறிவு மெல்ல மெல்ல விரிந்து அவனுக்கு மேன்மை புரிந்து வருகின்றது.

அங்ஙனம் கல்லாது நின்றவன் கல்லாய் இழிந்து புல்லாயிழிகின்றான். படியாதவனுக்கு மடையன், மூடன் என்னும் இழி பெயர்கள் உரிமையாகின்றன. ஆகவே அவனது பரிதாப நிலைகள் அறியலாகும். உயர்ந்த மனிதப் பிறவியில் பிறந்திருந்தும் உரிய பருவத்தில் படியாமல் மறந்து போனமையால் இழிந்து பட நேர்கின்றான் கலையறிவு கழிய நிலை இழிவாயது.

பாலப் பருவம் கல்விக்கு உரிமையான காலமாதலால் அதனைப் பயன் படுத்தாமல் பழுதுபட விட்டவன் இழுதையாய் இழிந்தே போகின்றான். உரிய பருவம் நழுவவே பெரிய இழிவும் நெடிய பழியும் நிலையாய்த் தொடர்ந்தன.

கல்வியின் செவ்வி கருதி ’இளமையில் கல்’ என்று ஒளவையார் இவ்வாறு சொல்வியருளியது. படிப்புக்கு உரிய பருவத்தைப் பயனுறத் தழுவிக் கொண்டவன் பெரிய மதிமானாய்ப் பெரு மகிமையுறுகின்றான்; தழுவாது அயர்ந்து நின்றவன் இழிமடையனாய்ப் பழியடைகின்றான்.

Time is not on our side unless we grasp it.

"உற்ற காலத்தை உரிமையாய்ப் பற்றிக் கொண்டால் ஒழிய அது நமக்குப் பலன் தராது’ என்னும் இது இங்கே நன்கு சிந்திக்கத் தக்கது.

கடவுளைப் போல் காலம் எல்லார்க்கும் பொதுவாயுள்ளது; அந்தப் பொழுதைக் கிழமையோடு தழுவி நின்றவன் விழுமிய பயன்களை அடைந்து கொள்கின்றான்.

இளமைப் பருவத்தில் கல்லாமல் பொழுதைப் பழுதே கழித்து வந்தவன் பின்பு பொல்லாதவனாய்ப் புலையுறுகின்றான்.

‘இருகால் விலங்கு; இழி மரம்’ என்றது. பருவ காலத்தில் படியாமையால் விளையும் பழி நிலைகளை விழி தெரிய விளக்கியது. கல்வி மனிதனைத் தெய்வம் ஆக்குகின்றது; கல்லாமை அவனை மிருகம் ஆக்கி விடுகின்றது.

கல்லாமையால் நேரும் பொல்லாமைகளைக் கருதியே ’கல்லாத மூடரைக் காணவும் ஆகாதே' (திருமந்திரம்) என்று திருமூலர் இவ்வளவு கோபமாய் வெறுத்துக் கூறியிருக்கிறார், ’எல்லாரும் கற்றக் கொள்ள வேண்டும்’ என்னும் ஆத்திரத்தால் இவ்வாறு வார்த்தைகள் வெளி வந்துள்ளன.

’முகத்தில் இரண்டு கண்கள் இருந்தாலும் கல்லாதவர் குருடரே; பொல்லாத மிருகங்களே’ என வள்ளுவர் உள்ளம் நொந்து உரைத்திருக்கிறார். கல்வி கண்ணினும் இனியது.

தக்க கல்வியை இழந்தமையால் மக்கள் உருவினரேனும் மாக்கள் என நின்றனர். விதி நலங்களை விலகினவர் விலங்குகள் ஆயினர். இனிய கலை குறையக் கொடிய நிலை பெருகியது.

உணர்வு நலம் சுரந்து உள்ளத்தை ஒளி செய்து வருகின்ற கல்வியைப் பிள்ளைப் பருவத்திலிருந்தே பழகியுள்ளவன் பெரிய பாக்கியசாலியாய் அரிய மகிமைகளை அடைகின்றான். பழகாதவன் பிறவிப் பெருமையையும் இழந்து வறிதே பிழைபடுகின்றான்.

ஒரு முறை பயின்றால் எழுமையும் தொடர்ந்து இதம் புரிந்தருளுகின்ற கல்வியை ஒருவன் மறந்திருப்பது பெரிய இழவாம். அங்ஙனம் இழந்து வளர்வதினும் இறந்து மறைவது மிகவும் இனிதாம். ஒளியுடன் வாழ்வதே உயர்ந்த வாழ்வாம்.

முழு மூடன், விழி குருடன், இழி மிருகம் என்னும் பழிமொழிகள் படியாதபடி இளமையிலேயே படித்து வருபவன் பிறவிப் பயனைப் பெற்றவன் ஆகின்றான். அவ்வாறு படியாமல் மறந்து விட்டவன் பெருமடையனாய் இழிந்து படுகின்றான்.

சீவ ஒளி குன்றி நின்றதால் கல்லாதவனை மரம், விலங்கு என எல்லாரும் இகழ்ந்து சொல்ல நேர்ந்தனர்.

நேரிசை வெண்பா

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று. 254 அறிவின்மை, நாலடியார்

நேரிசை வெண்பா

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம். 13 - மூதுரை

கல்லாதவன் இவ்வாறு பொல்லாத இழிவுகளை அடைகின்றான். காலம் உள்ள பொழுதே கற்று மேலோராய் வருவோரையே ஞாலம் உவந்து கொள்கின்றது.

பருவமறிந்து ஒருவன் படியாமல் நின்றால் அவனுடைய வாழ்வில் பல இழிவுகள் படிந்து கொள்கின்றன. எவ்வளவு செல்வங்களை எயதினாலும் ’கல்லாத மூடன்’ என்ற அந்தப் பொல்லாத பழி அவனிடம் புகுந்து கொள்கின்றது. அவன் மகனுக்கும் அவன் வழி வழியாகவே படிப்பு வாசனை படியாது போகவே அது ஒரு மூடக் கூட்டமாய் முடிந்து நாட்டுள்ளே காட்டு மிருகங்களாய்க் கலித்து நிற்கின்றது. பின்பு அக் கூட்டத்திற்குக் கல்வியையூட்ட நல்லறிவாளர் பாடுபட்டாலும் பயன்படுவதில்லை.

வெள்ளம் மிகுதியாய்ப் பெருகி ஓடுகின்ற பெரிய நதியில் முதிய வேதியன் ஒருவன் ஒருநாள் நழுவி விழுந்தான். நீரோட்டம் அவனை ஈர்த்துப் போயது. அயலே ஆற்றங்கரையில் ஆடு மேய்த்துக் கொண்டு நின்ற ஒருவன் அதனைக் கண்டான்; விரைந்து நீரில் பாய்ந்து நீந்தி அந்த மறையவனைப் பிடித்துக் கரையில் கொண்டு வந்து சேர்த்தான்; ஆற்றித் தேற்றினான். தனக்கு உயிருதவி புரிந்த அந்த மேய்ப்பனை உவந்து நோக்கி, ’அப்பா! நான் உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்?' என்று கிழவன் உள்ளம் கரைந்து உரிமையோடு உரைத்தான். அப்பொழுது நிகழ்ந்த உரையாடல்கள் அயலே வருகினறன.

மேய்ப்பன்: என் பையனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுங்கள்.

வேதியன்: அவனுக்கு வயது என்ன?

மேய்ப்பன்: பதினாறு வயசு ஆகின்றது.

வேதியன்: என்ன படித்திருக்கிறான்?

மேய்ப்பன்: ஒன்றும் படிக்க வில்லை.

வேதியன்: ஏன்! பள்ளிக்கு அனுப்பவில்லையா?

மேய்ப்பன்: அந்த வழக்கம் இல்லை.

வேதியன்: என்ன இது! நீ படித்திருக்கிறாயா?

மேய்ப்பன்: நான் படிக்கவில்லை.

வேதியன்: உன் தந்தை படித்திருக்கிறாரா?

மேய்ப்பன்: அவரும் படியாதவரே.

வேதியன்: உன் பாட்டனாராவது படித்கிருக்கிறாரா?

மேய்ப்பன்: அதுவும் கிடையாது.

வேதியன்: அப்படியானால், என்னை இந்த வெள்ளத்திலேயே தள்ளி விட்டுவிடு அப்பா!

இப்படி அம் முதியவன் சொல்லவே அவன் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றான். கல்வி வாசனை தன் தலைமுறையிலும் இல்லாத ஒருவனுக்குக் கற்பிப்பது மிகவும் கடினம்; அவனுக்குப் படிப்பு ஏறாது: அந்த மடையனுக்குச் சொல்லிக் கொடுக்க நேர்வது மரண வேதனையாம்; அதை விடச் செத்துப் போவது நல்லது என்பதை இங்ஙனம் சொல்லாமல் சொல்லியுள்ளான்.

ஒருமுறை படித்தது உயிருடன் கலந்து என்றும் உறுதி புரிந்தருளுகின்றது; அத்தகைய கல்வியை உரிமையோடு பயின்று கொள்ளாமல் மறந்து விடுவது என்றும் தீராத அல்லலேயாம்.

நேரிசை ஆசிரியப்பா

ஒருமுறை தொட்ட(து) ஊழியும் ஒட்டி
வருமுறை யுடையது; வழிவழி வளர்வது;
தேவ ஒளியாய்ச் சீவஒளி தருவது:
கல்வி அமுதம் கையிகந்து விடினோ
அல்லல் இருளில் அழுந்தி
எல்லையில் காலம் இழிவுற வருமே.

நேரிசை வெண்பா

ஒருகாலும் நீங்கா உயர்கல்வி இன்றேல்
இருகால் விலங்காய் இழிந்து - வருகாலம்
எலலாம் பழியாய் இளிவுறலால் கல்லாமை
ஒல்லாமை செய்க உடன்.

மறதி புகாமல் உறுதி செய்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Oct-19, 11:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே