ஊக்கம் உறுதியெனும் நீர்மைகளே ஆக்கங்கள் ஆகி அமையும் - உறுதி, தருமதீபிகை 493

நேரிசை வெண்பா

ஊக்கம் உறுதியெனும் ஒள்ளியநன் நீர்மைகளே
ஆக்கங்கள் ஆகி அமைதலால் - நோக்கம்
தெரிந்து நிலையைத் தெளிந்து கருமம்
பரிந்து புரிக படிந்து. 493

- உறுதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளத்தில் உள்ள ஊக்கமும் துணிவும் வெளியே ஆக்கங்களாய் அமைகின்றன; அந்த அமைதியை ஆழ்ந்து நோக்கிக் கருமங்களை ஓர்ந்து செய்து உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்வதே மனித வாழ்க்கையின் குறிக்கோளாயுள்ளது. பறந்து திரிந்து யாவரும் ஆவலோடு பாடுபட்டு வருவது சீவனது இயல்பையும் உயர் நோக்கையும் விளக்கி நிற்கின்றது. எந்நிலையிலும் தளராமல் முன்னேறிச் செல்லும் உன்னத வளர்ச்சிக்கு உள்ளே மூல வேராயுள்ளதையே ஊக்கம் என உணர்வுலகம் உரைத்து வருகிறது.

காரியத்தில் முனைந்து மூளும் உள்ளக் கிளர்ச்சியே ஊக்கமாதலால் அதன் நிலைமையும் தலைமையும் நேரே தெரியலாகும்.

உடையர் எனப்படுவது ஊக்கம்: அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. 591 ஊக்கமுடைமை

ஊக்கம் உடையவரே உண்மையாக எல்லாச் செல்வங்களையும் உடையவர்; அது இல்லாதவர் யாதும் உடையராகார் என வள்ளுவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார் உடையரோ? என வினவியிருக்கும் அழகை ஊன்றி நோக்கி உண்மையை ஓர்ந்து கொள்ள வேண்டும்.

ஊக்கம் இல்லாதவன் ஆக்கம் கெட்டவன் என்று சுட்டியிருத்தலால் அதன் சீர்மை நீர்மைகளை உய்த்துணர்ந்து கொள்ளலாம். செல்வம், கல்வி முதலிய பலவகை உயர்நிலைக்கும் ஊக்கம் உயிர்நிலையாயுள்ளமையால் உயர்ந்தோர் யாண்டுமதனைப் போற்றி வருகின்றனர்.

Energy is divine. - Pope

'ஊக்கம் உயர்ந்த தெய்வத் தன்மை' என்.று மேல்நாட்டார் இங்ஙனம் குறித்திருத்தலால் அதனை அவர் போற்றி வந்துள்ளமை புலனாகின்றது.

இங்கிலாந்து அமெரிக்கா முதலிய தேசங்கள் எவ்வகையிலும் உன்னத நிலையில் உயர்ந்து ஓங்கி நிற்றற்குக் காரணம் அத் தேசத்தவரிடம் நிறைந்துள்ள ஊக்கமேயாம்.

ஒரு எந்திரத்தை உந்தி ஓட்டுகின்ற நீராவி போல் ஊக்கம் உயிரினங்களை விசைத்து உயர்நிலையில் ஓட்டி வருகின்றது.

வினைமேல் மூண்டு எழுகின்ற எழுச்சி ஊக்கம் ஆம். அந்த எழுச்சி தளர்ச்சியுறாமல் வளர்ச்சி செய்து வருவது உறுதி.

தம்மையுடையாரைச் செம்மையாக உயர்த்தி இம்மை மறுமைகளில் எல்லா நலங்களையும் நல்கி எங்கும் ஒளி செய்து வருதலால் இவை ஒள்ளிய நன்னீர்மைகள் என ஈண்டு உள்ளி யுணர வந்தன. நிலையான உறுதி நெடிய மலையாகின்றது.

செல்வங்களை ஈட்டவும், அவற்றை நல்ல வழிகளில் நீட்டிப் புகழ் புண்ணியங்களை ஆக்கவும் உரிமையாயிருத்தலால் ஊக்கமும் உறுதியும் ஆக்கங்கள் எனப்பட்டன.

ஆக்கம் இழந்தேமென்(று) அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593 ஊக்கமுடைமை

கையில் எய்தியிருந்த பொருள் இழந்து போனாலும் உள்ளத்தில் ஊக்கமுள்ளவர் வருந்தி அலமரார்; விரைந்ததனை ஆக்கிக் கொள்வார் என்று இது குறித்திருக்கின்றது. இதனால் அதன் அற்புத நிலைமை அறியலாகும்.

மனிதனுடைய உள்ளத்தில் ஒரு தெய்வத் திருவாய் ஊக்கம் மருவியுள்ளமையால் அதனை நோக்கி எல்லா ஆக்கங்களும் உரிமையோடு ஓடி வருகின்றன.

நோக்கம் தெரிந்து கருமம் பரிந்து புரிக! ஊக்கமும் உறுதியும் காரிய சாதனங்களாய்க் கதித்திருக்கின்றன. அவற்றைக் கருத்துடன் பேணிக் கருமங்கள் புரியின் பெருமைகள் விளைகின்றன. அங்ஙனம் புரியாமல் அயர்த்து நின்றால் மனிதன் இழிந்து பட நேர்கின்றான்.

'இருந்தும் இறந்தவன் எவன்?' எனச் சனகரை ஒருமுறை ஒரு முனிவர் வினவினார். அதற்கு அம் மன்னன் சொன்ன பதில், ’கருமங்களைக் கருதிச் செய்யாமல் எவன் சோம்பியிருக்கிறானோ, அவன் உயிரோடு இருந்தாலும் செத்தவனேயாவன்’ என இங்ஙனம் அந்த இராச யோகி கூறியுள்ளமையால் மனிதனுக்கும் கருமத்துக்கும் உள்ள உரிமையுணரலாகும். கருமவுறுதி தரும நிதியாய்த் தழைத்து வருகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Oct-19, 10:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

மேலே