நினைப்பிழந்து நின்ற கேடுபழி என்றும் இழிவே எழும் - மறதி, தருமதீபிகை 483

நேரிசை வெண்பா

நினைப்புநிலை எல்லாம் நெடிய திருவாய்
வனப்பு மிகுந்து வருமால் - நினைப்பிழந்து
நின்ற நிலையில் நிலையான கேடுபழி
என்றும் இழிவே எழும். 483

- மறதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனம் தெளிந்து நினைக்கின்ற நினைவுகள் எல்லாம் நெடிய செல்வங்களாய் எழில் மிகுந்து வருகின்றன; நினைப்பு இழந்து நின்றால் பழிகளும், கேடுகளும், இழிவுகளும் எழும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், மறதியை ஒழித்து, விழித்து வேலை செய் என்கின்றது.

மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோவில்கள், வாவிகள் முதலாக இவ்வுலகில் காணப்படுகின்ற விழுமிய நிலைகள் எல்லாம் மனிதனுடைய நினைவின் விளைவுகளாகவே வெளியே தோன்றி ஒளி வீசியுள்ளன.

மானச சிருட்டிகளை நோக்கி வானகமும் வியந்து நிற்கின்றது. அகத்தின் எண்ணங்கள் புறத்தே எண்ணரிய வண்ணங்களாய் எதிரெழுந்து திகழ்கின்றன.

நினைவின் கூட்டங்கள் வாழ்வின் நீரோட்டங்களாய்ப் பெருகி வருகின்றன. எண்ணம் வறண்டால் எல்லாம் வறண்டு போய் வாழ்வு பாழாய்ச் சூனியமடைகின்றது.

இனிய நினைவுகள் அரிய காமதேனுக்களாய் இன்பம் சுரந்தருளுகின்றன. தான் கருதியதையே மனிதன் உரிமையாகப் பெறுகின்றான்.

உள்ளிய(து) எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய(து) உள்ளப் பெறின். 540 பொச்சாவாமை

இந்த வேத மந்திரத்தை ஈண்டு உள்ளம் கொண்டு ஊன்றியுணர வேண்டும். ஒருவன் எண்ணியதை எண்ணியபடியே யாண்டும் எளிதாக எய்தலாம்; ஆனல் அந்த எண்ணம் இன்னவண்ணம் இருக்க வேண்டும் என இதில் உணர்த்தியிருக்கும் உண்மையை உணருந்தோறும் மனத்தின் இயல்பும், நினைப்பின் நிலையும் வியப்பாய் வெளிப்படுகின்றன. விழித்து நோக்கிய கண் வெளியே ஒளியைக் காணுகின்றது; நினைத்து ஊக்கிய மனம் நேரே சீரைப் பெறுகின்றது.

’உள்ளியது உள்ளப் பெறின்’ உரிய பொருள் ஓடி வரும்; மறந்து விடின் எல்லாம் இறந்து படும். மறப்பு கேடு ஆகின்றது; நினைப்பு ஆக்கமாய் நிலவுகின்றது.

’நினைப்பு நிலை எல்லாம் நெடிய திரு’ என்றது நினைவுக்கும் திருவுக்குமுள்ள உறவுரிமையை உணர்த்தி நின்றது. அரிய பெரிய செல்வங்கள் எல்லாம் மனிதன் கருதி முயன்றதிலிருந்தே பெருகி வந்திருக்கின்றன.

வறியனான ஓர் இளைஞன் ஒருநாள் மாலையில் மலைச்சாரல் வழியே நடந்து போனான்; அங்கே வானுற ஓங்கி வளர்ந்து நிற்கின்ற நெடிய மரங்களைக் கண்டான்; குளிர் நிழலில் தங்கி உளம் மிக உவந்தான். சாரமான தரையில் வேரூன்றி இருத்தலினாலேதான் அவ்வளவு செழிப்பாய் அவை சிறந்துள்ளன என்று தெரிந்தான். ஆண்டு ஒரு பெரிய நிலப்பகுதியை வளைந்து கொண்டு அரிய கனி மரங்களை வைத்து இனிய விளைபொருள்களை விளைத்தான். நல்ல விளைவுகள் வளமாய் உளவாயின; நாட்டு மக்களுக்கு ஊட்டமாய் உதவின; அதனால் அவன் பெரிய செல்வன் ஆயினான். வறியனாயிருந்தவன் ஒரு சிறிய நினைவினால் அரசரும் மதிக்கும்படியான உயர்ந்த திருவினை அடைந்து சிறந்து விளங்கினான்.

நெஞ்சைத் திறந்து நினைந்தவனுக்குப் பஞ்ச பூதங்களும் பரிந்துதவி புரிகின்றன. மறந்திருந்தவனுக்கு யாதும் உதவாமல் ஏதமாய் அவனை இகழ்ந்து விடுகின்றன. மறந்தவன் மண்ணாயிழிந்து மடிந்து போகின்றான்; நினைந்தவன் பொன்னாயுயர்ந்து பொலிந்து விளங்குகின்றான்.

நிலைமையை நினைந்து பார்க்கின்ற எவரும் தலைமையில் உயர்ந்து கொள்ளுகின்றார். பாராதவர் பழி குருடராய்ப் பாழ்படுகின்றனர். பார்த்து வாழ்வது சீர்த்தி ஆகின்றது.

மனித உருவில் பிறந்திருந்தாலும் நினைவு நலனை இழந்தவர் மிருகங்களாகவே இழிந்து மறுகி உழலுகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Oct-19, 9:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே