மருத்துவ வெண்பா - புதிய தேன், பழைய தேன் - பாடல் 4, 5

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

புதிய தேன் - நேரிசை வெண்பா

ஆயுளுடன் உட்டினம ரோசி யகக்கபமும்
மேய அழகுவளர்ந்(து) ஏறுங்காண் – தூய
மதிய மெனும்வதன மாதரசே! நாளும்
புதியநறுந் தேனாற் புகல்.

குணம்:

புதிய தேனினால் நிறை ஆயுளும், சரீர வெப்பமும், ருசியின்மையும், நெஞ்சில் கபமும், உடலில் தேஜசும் உண்டாகும்.

பழைய தேன் - நேரிசை வெண்பா

வாதப் பெருக்கை வயிற்றெரிவைத் தந்துறையைச்
சேதப் படுத்துமின்னுஞ் செப்பவே – மாதரசே
சத்திப் புறுமரசந் தன்னைத்தூண் டும்புளிப்புத்
தித்திப் புறும்பழைய தேன்.

குணம்:

புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடைய பழைய தேன் வாத ரோகத்தையும், வயிற்றெரிச்சலையும் வாத மூல ரோகத்தையும் விளைவிக்கும். மருந்தின் நற்குணங்களைக் கெடுக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Oct-19, 1:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 97

சிறந்த கட்டுரைகள்

மேலே