பாத்ரூமில் தேவையான இரண்டு வசதிகள்

நான் பார்த்தவரையில் பல தனியான சொந்த வீடுகளிலும், அபார்ட்மெண்ட்களிலும் கழிவறையில் எத்தனையோ வசதிகள் செய்து காணப்பட்டாலும் ஒரு முக்கியமான வசதி, குறிப்பாக வயதானவர்களுக்கு, அதிலும் குறிப்பாக கால் மற்றும் முட்டி வலி உள்ளவர்களுக்கு கைகளால் பிடித்து உட்கார்ந்து கொள்ளவும், எழுந்து கொள்ளவும் வசதிகள் இல்லை. இந்தமாதிரியான கைப்பிடிகள் இல்லாததால் உடல் தளர்ந்த, முடியாத ஒருவர் நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கவோ, வசதியாக கையை பிடித்துக்கொண்டு அமர்ந்து மலம் போகவோ மீண்டும் கையால் பிடித்துக்கொண்டு எழவும் மிகவும் சிரமமாக உள்ளது. எவ்வளவோ முன்னேற்றங்கள் செய்து வரும் ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள் இந்த விஷயத்தில் ஏன் அதிக அக்கறை காட்டவில்லை என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
கோயம்புத்தூரில் சில சீனியர் சிட்டிஸின் கம்யூனிட்டியில் (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் வாழும் இல்லம்) நான் கவனித்தபோது பாத்ரூமில் தகுந்த கைப்பிடிகள் சுவரில் பொருத்தப்பட்டிருந்தன. ஒரு கைப்பிடி நின்றுகொண்டு கையால் பிடித்துக்கொள்ள வசதியாக பொருத்தப்பட்டுள்ளது. இன்னொரு கைப்பிடி, பிடித்துக்கொண்டு உட்கார்ந்து மலம் போவதற்கும் அதன் பின் மீண்டும் கையால் பிடித்துக்கொண்டு எழுவதற்கும் ஒரு கைப்பிடி பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் வயதானவர்கள் மிகவும் பயன் அடைகின்றனர். ஏனெனில் வயதானவர்களுக்கு நிற்பதும் குனிந்து கீழே உட்காருவதும் பொதுவாக கடினமான காரியங்களாக இருக்கின்றன. வெறும் சுவற்றின்மீது கையால் பிடித்துக்கொள்வது அவ்வளவு உறுதியாக இருக்காது. தவிர, சுவர் கை பட்டு பட்டு சீக்கிரத்தில் கரையாகி விடும். எனவே மேல்கூறிய கைப்பிடியை சரியான இடத்தில பொருத்தினால் இரண்டுவித பயன்கள் பெறலாம். எப்படி எனில், டவல் மற்றும் வேறு துணிகளை வைக்க பாத்ரூமில் ஒரு கைப்பிடி (rod) இருக்குமல்லவா? அதை சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் இருக்கைக்கு மேலாக (நான்கு அல்லது ஐந்து அடிக்கு மேலாக) பொறுத்திவிட்டால், அதில் துணிகளையும் தொங்கவிடலாம், அதையே பிடித்துக்கொண்டு சிறுநீர் கழிக்கவும் உபயோக படுத்தலாம்.

இதை படிப்பவர்கள் தயவுசெய்து இந்த ஆலோசனையை செயல்படுத்த உதவுங்கள். வீட்டை கட்டும்போது இத்தகைய வசதியை செய்வது சுலபம். கட்டிய வீட்டிலும் பாத்ரூமில் இந்த கைபிடிகளை பொருத்தமுடியும். ரியல் எஸ்டேட் வணிகம் செய்பவர்கள், அபார்ட்மெண்ட் கட்டுனர்கள், மற்றும் தனியாக வீடு கட்டிக்கொள்பவர்கள், இவர்களுக்கு இந்த செய்தியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொண்டு செல்ல உதவுங்கள். இப்படி செய்வதால் பலரும், குறிப்பாக முதியவர்களும் மிக்க பயன் பெறுவார்கள் தானே?

இந்த தருணத்தில் இதையும் சொல்ல விழைகிறேன். நாம் சிறுநீர் மலம் கழித்தபின் உபயோகிக்கும் பிளஷ் அவுட் (தண்ணீர் பாய்ச்சும் தொட்டி). இதன் மேல் இரண்டு வகையான பொத்தான்கள் ஹோட்டலிலும் வேறு சில இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. சிறிதாக இருக்கும் பொத்தானை அழுத்தினால், சிறுநீரை அப்புறப்படுத்தும் அளவிற்கு தண்ணீர் கொட்டும். பெரிய பொத்தானை அழுத்தினால், மலத்தை அப்புறப்பதும் அளவிற்கு தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த இரண்டு பொத்தான்கள் பொருத்தப்படவில்லை என்றால், சிறு நீர் போய்விட்டு பொத்தானை அழுத்தினாலும் மலம் கழித்தபின் பொத்தானை அழுத்தினாலும் அதிக அளவு தண்ணீர் கொட்டும். இதனால் தேவைக்கு அதிகமான அளவில் தண்ணீர் விரயம் ஆகிறது.

எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்சினை என்ற ஒரு சூழ்நிலையில், நாம் ஒவ்வொருவரும் நமது பாத்ரூம்களில் மேலே சொன்ன இரண்டு வித பொத்தான்கள் (பட்டன் அல்லது நாப்) பிளஷ் அவுட்டின் மீது பொருத்தியிருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்வோம். ஒரே ஒரு பொத்தான் மட்டும் உள்ள பிளஷ் அவுட்களில் இரண்டு வகையான பொத்தான்களை பொறுத்துவோம். அரிய பொருளாகிவரும் தண்ணீரை சேமிப்போம்.

உங்களுக்கு என்மேல் கோபம் வருவதற்கு முன்னே கடைசியாக ஒரு ஆலோசனை. மேலே குறிப்பிட்ட பொத்தான்களில் 1 மற்றும் 2 என்ற எண்ணை முடிந்த அளவுக்கு பெரிய எழுத்தாக பதித்துவிட்டால், சிறுநீர் கழித்தபின் ஒன்றாம் எண் பட்டனை அழுத்தவும், மலம் கழித்த பின் இரண்டாம் எண் பொத்தானை அழுத்தவும் ஒருவரை நினைவு கூற ஏதுவாக இருக்கும். இதிலும் குளறுபடி செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-May-24, 10:41 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 43

மேலே