பழக்க தோஷம்

இன்றைய காலை சூடான தகவல். இன்று நடந்த சுவையான வறுவல். இதை தெரிவிக்கவே இந்தச் சிறு அகவல்.

காலை எழுந்து எங்கள் இருவருக்கும் நான்தான் தேநீர் தயாரிப்பேன். அந்த நேரத்தில் நான், வீட்டில் மாட்டியுள்ள இரண்டு தினசரி கிழிக்கும் காலண்டர் தேதியை தவறாமல் மாற்றுவேன். எப்போதாவது நான் மறந்துவிட்டால் கூட காலண்டர் தேதி அப்படியேதான் இருக்கும். யாரையும் என்னால் கிழிக்கமுடியாது, ஆனால் காலண்டர் தேதியை என்னால் கிழிக்கமுடியும். எனவே அதை உருப்படியாக செய்துகொண்டிருக்கிறேன்.

14 ஆம் தேதி மே வரை, இரண்டு காலண்டர்களிலும் சரியாக தேதி கிழித்துவிட்டேன். இன்று 15 மே காலை, தேநீர் போடுகையில் எப்போதும்போல இரண்டு காலண்டர் தேதியையும் மாற்றிவிட்டேன். தேநீர் குடிக்கையில் கொஞ்சம் காலண்டர் தேதியை உற்று பார்த்தேன். 16 மே என்று இருந்தது. இன்னொரு காலண்டரையும் பார்த்தேன். அதிலும் 16 மே என்றே இருந்தது. சந்தேகம் வந்து மாதாந்திர காலண்டரை பார்த்தேன். இன்று புதன் கிழமை மே 15 தான் என்று ஊர்ஜிதம் ஆனது. ஒரு வேளை கைத்தவறி இரண்டு தேதிகளை சேர்த்து கிழித்துவிட்டேனோ என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், அதெப்படி இரண்டு காலண்டர்களிலும் இந்த தவறு நடக்கும் என்று ஆச்சரியமாக இருந்தது.
அந்த நேரத்தில் என்னுடைய மச்சான் (எங்கள் வீட்டில் விருந்தாளியாக தங்கியிருக்கிறார்) அங்கே வந்தார். அவருக்கு நான் சூடாக காபி கலந்து கொடுத்தேன் (தேநீர் தயாரிப்பவருக்கு காபியும் போடத்தெரிந்துதானே ஆகவேண்டும்). அவர் காலண்டரை கவனித்துவிட்டு "நான் இன்று விடிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிட்டேன். இரண்டு காலண்டரில் தேதியை மாற்றிவிட்டேன் "என்றார்.
என் மச்சான் நல்ல மனம் உள்ளவர் என்பதால் கிழித்த தேதி காகிதத்தை நன்றாக கசக்கி தரையிலேயே போட்டுவிட்டார். நான் மீண்டும் அதை முடிந்தவரை சரிசெய்து இரண்டு காலண்டரிலும் (கொஞ்சம் சோற்று பருக்கை தடவி) ஒட்டிவிட்டேன்.

என் மனைவி சொன்னாள் "எல்லாம் பழக்க தோஷம்". ஆமாம் என்று சொல்வதைத்தவிர வேறு என்ன சொல்ல?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-May-24, 11:04 am)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : palakka thosam
பார்வை : 105

மேலே