நாமும் கூட மனித இனம்

இந்த கேடுகெட்ட உலகம் நல்லவர்களை வாழவிடாது. தானும் நன்றாக வாழாது. வாய்தான் திருக்குறளையும் திருவாசகத்தையும் ஓதும். மனதில் ஓடும் எண்ணமோ திருக்குறளின் வாக்கியங்களை அவமதிப்பதாகவும் திருவாசகத்தின் சாரத்தை புண்படுத்துவதாகவும் இருக்கும். அப்படி என்றால் செய்யும் செயல்கள் எப்படி இருக்கும்? நேர்மையை பின்தள்ளிவிட்டு, வாய்மையை ஒடுக்கிவிட்டு, நாணயத்தை தந்திரம் எனும் போர்வைக்குள் மறைத்து, எளிமையாகவும் உண்மையாகவும் பேசுபவர்களை முட்டாள் எனப்பட்டம் கட்டிவிட்டு, பொதுநலம் என்ற வேடத்தில் சுயநலத்தை பூர்த்திசெய்துகொள்வதிலும்தான் இருக்கும்.
பிறந்தநாள் வாழ்த்து, விசேடங்களுக்கு வாழ்த்து, திருமண நாளுக்கு வாழ்த்து மடல் வைத்தால் பதிலுக்கு ஒரு கைநாட்டு படம் கூட வைக்காத பண்பில்லாத மக்கள்தான் இவ்வுலகில் அதிகம். ஒரு வேளைக்கு கூட உணவில்லாத ஆதரவற்ற மக்களை கண்டுகொள்ளாமல், இரவு பகல் பார்க்காமல் என்நேரமும் குடி, கூத்து என்று பணத்திமிரில் ஆட்டம் போடும் மனநிலை கொண்ட மனிதர்கள் கும்பல் தான் அதிகம்.
அரசாங்க அலுவலகத்தில்தான் லஞ்சம், நேரம் கடத்துதல், மாமூல் தரவில்லையென்றால் ஒருவரை அல்லாடவைத்தல் என்று பார்த்தால், இதைவிட கேவலமான நிலையில் தனியார் நிர்வாகங்களும் அலுவலகங்களும் செயல்படுகின்றன. இதில் பணிபுரியும் பலருக்கு உண்மையான நடத்தை, பண்பாடு, கடமை என்றால் என்னவென்று தெரியாது அல்லது தெரிந்தாலும் இவைகளை அலட்சியப்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளுதல். நான் எந்த அளவுக்கு வடிகட்டின முட்டாள் என்றால், தனியார் வங்கிகளில் லஞ்சம் இல்லை என்று அறுபது வயதை தாண்டியும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் என் உறவினர் ஒருவர் மூலம் அப்படியெல்லாம் இல்லை, பெரிய அளவில் கடன் மற்றும் பண உதவி வாங்கி தரும் பட்சத்தில் அங்கேயும் இப்படிப்பட்ட பணம் வெட்டுதல் மற்றும் சலுகை வழங்குதல் போன்ற செயல்கள் நடக்கின்றன என்று கேள்விப்பட்டு அதிர்ச்சியுடன் வேதனையும் அடைந்தேன்.
அரசியலில் நடக்கும் அதர்மம், அநீதி மற்றும் அக்கிரமங்களை நாம் வெகுவாகவே அறிவோம். அரசியல் ஒரு பெரிய சாக்கடை என்றால், அதன் நிர்வாகத்தில் நல்லவர்களாக இருப்பவர்கள் தாமரை மலர்களைப்போல தத்தளித்த வண்ணம் வாழ்கின்றோம்.
நான் ஏற்கெனவே கடவுள், கர்மவினை இதைப்பற்றியெல்லாம் பல கட்டுரைகளை இதே வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். யாருக்காவது சந்தேகம் இருந்தால் என்னுடைய கட்டுரைகள் சிலவற்றை படித்தால் அல்லது படித்திருந்தால் இது புரியவரும். இன்று எனக்கு வரும் ஒரு சிந்தனை ஓட்டம் என்னவென்றால் 'தவறு செய்பவர்களுக்கு ஒரு முறை மன்னிப்பு தரலாம் (சரியான விளக்கமின்றி தவறிச்செயும் செயலே தவறு என்பது என் கருத்து). ஆனால் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்பவர்கள், தவறினை தாண்டி, அறிந்து புரிந்து கொடிய பாவச்செயல்கள் செய்பவர்களை, இந்த பிரபஞ்ச சக்தி உடனுக்குடன் தண்டிக்கவேண்டும். இந்த தண்டனைகள் எப்படி இருக்கவேண்டும் என்றால், தெனாலி ராமன் பூனைக்கு கொதிக்கும் பாலை வைத்தது போல இருக்கவேண்டும். வினைக்கு ஏற்ற பயனை எதற்கு தள்ளிப்போடுவது? எப்படி ஜுரத்திற்கு மாத்திரை எடுத்தால் ஜுரம் குணமாகிறதோ அதைப்போல குற்றத்திற்கு ஏற்ற தகுந்த தண்டனையை உடனுக்குடன் கொடுத்தால், இந்த சமுதாயத்தில் அநீதி, அக்கிரமம், அநாகரீகம், அதர்மம், தில்லுமுல்லு, பயங்கரவாதம் எல்லாமே குறைந்தது பாதிக்கு பாதி குறைந்துவிடும். அதுவே இந்த சமுதாயத்திற்கு ஒரு பெரிய ஆறுதலையும் நிம்மதியையும் தரும்தானே?
என்னுடைய உறவினர்கள் நண்பர்கள் சிலருக்கு நான் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவி இருக்கிறேன். பணத்தை திருப்பித்தருவது என்பதை பற்றி அவர்கள் நினைக்காவிட்டாலும், நன்றியறிதல் கூட இல்லாமல் ஜடங்கள் மாதிரி அவர்கள் இருப்பது உண்மையிலேயே வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால் நன்றியதலைப்பற்றி இன்று பேசினால் "என்ன சரியான முட்டாப்பயலாக இருப்பான் போலிருக்கு" என்ற முணுமுணுப்புதான் அதிகம் இருக்கும். அந்த விதத்தில் நான் உண்மையிலேயே ஒரு முட்டாப்பயல்தான் என்பதை பகிங்கரமாக அறிவிக்கிறேன்.
வள்ளலார் என்ற மாமனிதர் 19 ஆம் நூற்றாண்டு வாழ்ந்தார். ஜீவகாருண்யம் கொல்லாமை இவைகளை இரு கண்ணாகக்கொண்டு கருணையே வாழ்வின் லட்சியமாக வாழச்சொன்ன தெய்வீக மனிதர். யாருய்யா இதையெல்லாம் இப்போ காதுல போட்டுகிறாங்க? மீன் கிடைத்த மீனு, கோழி கிடைத்தால் கோழி, ஆடு கிடைத்தால் ஆடு, மாடு கிடைத்தால் மாடு, பன்னி கிடைத்தால் பன்னி, வேறு ஏதாவது கிடைத்தால் அது, இதைத்தானே வயிற்றில் போடுகிறார்கள். ஆறாம் அறிவு வளர்ந்து சிறந்து விளங்கவேண்டிய மனிதன் பிற உயிரை அழிக்காத தருமம் எனும் மந்திரத்தை தரித்து வாழ்வதற்கு பதில் அழிப்பதே தருமம் என்றல்லவோ இருக்கிறான்.
பாரதியார் அன்று சொன்னார் "தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று. அவர் இன்று இருந்தால் என்ன கூறியிருப்பார் தெரியுமா "பணக்காரன் நினைத்தது நடக்கவில்லை என்றால் இந்த சமுதாயத்தையே அழித்துவிடுவான்". இப்படிப்பட்ட சமுதாயம் இருந்துதான் என்ன?
நான் எற்கெனெனவே முன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டதைப்போல 'கோடிக்கணக்கான ஏழைகள் உலகில் உணவின்றி சாகின்றனர், பட்டினி கிடக்கின்றனர், அல்லல் படுகின்றனர். இவர்களுக்கு உணவு அளிக்காமல் எல்லோரும் இந்நாட்டு மன்னர், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடவுளின் படைப்பில் அனைவரும் சகோதர சகோதரிகளே என்று சொல்லிவிட்டு தம்முடைய சுயநலமே குறிக்கோளாக இருக்கும் இந்த சமுதாயத்திற்கு வெட்கம் இல்லை, மானம் இல்லை, சூடு இல்லை சொரணை இல்லை.
நான் கடவுளை ஒருவேளை சந்திக்கநேருமானால் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி "இப்படிப்பட்ட உலகத்தை ஏன் படைத்தாய்? அழகான உண்மையான இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கு இந்த கொடிய சமுதாயத்திற்கு வக்கு இருக்கிறதா துப்பு இருக்கிறதா?"
ஒருவேளை கடவுள் என்னை ஒரு வரம் கேள் என்று கேட்பாராயின் "என்னை ஒரு மானமுள்ள கவரிமானாக பிறக்கவிடுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை ' காட்டில் உள்ள வனவிலங்குகள் எல்லாமே சைவ உணவை மட்டும் உண்ணும் விலங்குகளாக இருக்கவேண்டும்".

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-May-24, 8:07 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 165

சிறந்த கட்டுரைகள்

மேலே