தவமும் வாழ்க்கையும்
ஒருவனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம் இருப்பின் அவன் அமைதியாக மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளலாம். அப்படியெனில் அவனிடம் அந்த அளவுக்கு போதுமான பணமும் பொருளும் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். செல்போன் இல்லாமல்கூட ஒருவனால் உயிர் வாழ முடியும் ஆனால் பணம் இல்லையெனில் இந்த உலகில் ஒருவனும் வாழமுடியாது.
என் பூர்வ வினை கர்மாவின் பயனாகவோ அல்லது கடவுளின் கருணையாலோ (எனக்கு இந்த உ உ உ உ உ உ (முதல் வரியில் இந்த உ க்களுக்கு விளக்கம் உள்ளது) ஓரளவுக்கு அமைந்துள்ளது.
(இந்த இரண்டு பிடிபடாத தத்துவங்கள், கடவுள் மற்றும் கர்மவினை, என்னை எப்போதுமே பாடாய் படுத்தி வருகிறது. எதனால் என்றால், இந்த இரண்டையுமே நம்பமுடியவில்லை, நம்பாமலும் இருக்கமுடியவில்லை. எப்படி ஒரு வாழ்க்கை துணை, இன்னொரு வாழ்க்கை துணைக்கு நல்லவராகவும் அதே நேரத்தில் கெட்டவராகவும் இருக்கிறாரோ அதுபோல)
எனக்கு அறுபத்திஐந்து வருட வாழ்வின் அனுபவங்களும் உள்ளது. இதனுடன் அன்பும் பாசமும் உள்ளது. கோபமும் எரிச்சலும் கூட இவைகளுடன் இணைபிரியாமல் உள்ளது. கோவில் குளம் பக்தி இவையெல்லாம் கொஞ்ச நாட்கள் முன்புவரை ஓரளவுக்கு இருந்தது. தற்போது ஐயாவாள் ஆன்மீகத்தில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதால் (ஆன்மீகம்னா என்னாங்க?) பக்தி மார்கத்தில் செல்வது மிகவும் குறைந்துவிட்டது. நான் ஓரளவுக்கு பாடுபவன் (பாடுபடுபவன் இல்லை, ஹிஹிஹி). எனவே சினிமா பாடல்களை பாடுவது போல உணர்ந்து பக்தி பாடல்களையும் பாடுவேன், அவ்வளவே.
ஆன்மிகம் என்று பேசும்போது, தவத்தை பற்றி பேசாமல் இருக்கமுடியாது. ஆன்மீகத்தின் இன்னொரு இரட்டை சகோதரனே தவம். தியானம் என்றும் இதை சொல்லலாம். இப்படித்தான் தவம் செய்யவேண்டும் என்பது கிடையாது. பல முனிவர்கள், பல ஞானிகள், பல சித்தர்கள் பலவித தவ முறைகளை வகுத்துத் தந்து சென்றார்கள். ஒருவரது மூச்சினையோ அல்லது ஒளியையோ அல்லது வேறு ஒரு குறிப்பிட்ட பிம்பத்தையோ உருவத்தையே ஒருமுகத்துடன் கூர்ந்து ஓர்ந்து கவனிப்பது தவம். அப்படியின்றி எந்த ஒன்றையும் கவனிக்காமல், வெறுமனே அமைதியில் உட்கார்ந்திருப்பதுவும் தவம் தான்.
எந்த தவத்தையும் செய்கையில் ஒருவரது எண்ண அலைகள் சுழன்று வந்தவண்ணம் இருக்கும். பலருக்கு நிறைய எண்ணங்கள் வந்து செல்லும். சிலருக்கு சில எண்ணங்கள் வந்து செல்லும். எண்ணங்கள் குறையக்குறைய தவத்தின் பயன் கிடைக்கும். சொல்லப்போனால், ஒருவர் ஒரு மணி நேரம் தியானம் செய்கையில், சாதாரணமாக மனதில் ஓடும் ஐநூறு எண்ண அலைகளுக்கு பதில் ஐம்பது எண்ண அலைகள் மட்டுமே ஓடுமானால் அந்த மனிதர் தவத்தின் பயனை அதிகம் பெறுகிறார் என்று பொருள். நம்முடைய நினைப்பு மற்றும் எண்ணங்கள் தானே நம்மை இந்தப்பாடு படுத்துகிறது. 14 - 40 எண்ண அலைச்சுழலிருந்து (பீட்டா எண்ண அதிர்வு அலை) எண்ணங்களின் ஓட்டம் 8-13க்கு (alfa, ஆல்பா எண்ண அதிர்வு அலை) வந்துவிட்டால், அந்த மனநிலையில் மனதிருப்தியும் அமைதியும் அமைகின்றன. இந்த நிலையிலிருந்துகொண்டே தவம் செய்பவருக்கு இந்த எண்ண அதிர்வு அலை 4 -7 வரையில் கூட செல்ல வாய்ப்பிருக்கிறது. இந்த நிலை, ஒருவர் இன்னும் ஆழமான அமைதியுடனும் பக்குவப்பட்ட மனதுடன் இருக்கிறார் என்று பொருள்.
இப்போது என் விஷயத்திற்கு வருவோம். நானும் கடந்த இருபத்திஐந்து வருடங்களுக்கு மேலாக ஏதோ ஒரு வகையில் தவம் செய்து வருகிறேன். இருபத்தி ஐந்து வருடங்களாக தவம் செய்யும் இவர் என்ன தவ முனிவரா என்றெல்லாம் எண்ணி பயப்படவேண்டாம். வாரத்தில் ஐந்து நாட்கள் வரை, சராசரி அரை மணி நேரம், நான் தவம் செய்வதில் ஈடுபடுகிறேன். இடையில் சில வருடங்கள் தவம் ஏதும் செய்யாமலிருந்தேன். இந்நாட்களில், தினமும் இரண்டு முறை தவத்திற்கென அமருகிறேன்.
இவ்வளவு செய்தும் என் தற்போதைய நிலைமையை கொஞ்சம் புட்டு வைக்கட்டுமா?
1. தவத்தில் நான் அமரும்போது மற்ற யாரையும் சங்கடப்படுத்துவதில்லை.
2. அந்த நேரத்தில் நான் மெளனமாக இருக்கிறேன்.
3. என்ன அலைகள் வந்து கொண்டிருக்கிறது, சென்று கொண்டிருக்கிறது.
4. தெய்வீகம், பரவசநிலை போன்ற அனுபவங்கள் எனக்கு இதுவரை கிட்டவில்லை.
5. தவம் செய்தபிறகு சாந்த நிலை எப்போதும் இருக்கும் என்று சொல்லமுடியாது. சில நேரங்களில் தவம் செய்யும்போதே ஒருவித அதிருப்தியும் எரிச்சலும் கூட இருக்கும்.
6. சரியான தூக்கம் அமையவில்லையெனில் தவம் சரியாக இருக்காது. தூக்கக்கலகத்துடன்தான் தவமும் இருக்கும்.
7. ஓரளவுக்கு ஆரோக்கியமான உடல்நலம் இருந்தால்தான், தவம் செய்யும் எண்ணமே வரும். மூச்சு விடமுடியாமல், இருமிக்கொண்டு, தொண்டையை கனைத்துக்கொண்டு இருப்பவர்கள் நிச்சயமாக ஆழ்ந்த தவத்தில் ஈடுபடமுடியாது.
8. தவம் செய்வதால் ஒருவருக்கு வாழ்க்கை நன்றாக அமையும் அல்லது தவம் செய்தால் நிறைய நன்மைகள் ஏற்படும் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு நிகழலாம். ஆனால் பொதுவாக இவையெல்லாம் அமைவதில்லை.
9. ரேடியோ, டிவி, அக்கம்பக்கத்தில் பேச்சு இவையெல்லாம் தவத்தினை பாதிக்கும் (தவத்தில் அதிகமான பயன்களை பெற்ற வெகு சிலரைத்தவிர). நான் தவத்தில் இருக்கும்போது என்வீட்டிற்கு எவரேனும் வந்து சென்றால், அவர் பேசுவது எல்லாமே எனக்கு நன்றாக கேட்கும். நான் தவத்தை முடித்தவுடன் என் மனைவி "பக்கத்து வீட்டிலிருந்து இன்னார் வந்து சென்றார்" என்று சொன்னால் நான் ' தெரியுமே" என்று நான் சொன்னவுடன் கொஞ்சம் ஆச்சரியமாக பார்ப்பாள். முன்பெல்லாம் அவளுக்கு தவம் செய்வது ஒரு பயம் தரும் செயலாக இருந்தது. ஆனால், நன்றாக பழகி, இப்போது தனது சுவாசத்தை மட்டுமே கவனிக்கும் தவத்தில் ஆழமாக சென்றுவிடுகிறாள். எனக்கு இந்த அளவுக்கு தவம் ஆழமாக இருப்பதில்லை என்பதை பணிவுடன் ஒப்புக்கொள்கிறேன்.
10. தவம் செய்வதால் ஒருவர் தவம் செய்யத்தவரைவிட உயர்ந்தவர் என்பதெல்லாம் தப்பான எண்ணம். சொல்லவேண்டுமெனில், தவம் என்றால் என்ன என்றே தெரியாத சிலர் வருடக்கணக்கில் தவம் செய்பவர்களைக்காட்டிலும் நிதானமாக பொறுமையுடன் செயல்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.
கூட்டி கழித்து பார்க்கையில் எவருக்கு தவம் அமையவேண்டுமோ அவருக்குத்தான் நல்ல தவம் செய்யும் பொறுமையும் ஆற்றலும் உள்ளது. பொதுவாக, ஆழ்ந்த தவம் செய்பவர்கள் மற்றவர்களைக்காட்டிலும் ஓரளவுக்கு சிந்தித்து பொறுமையுடன் செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் பொறுமைக்கு இன்னொரு பெயர்தான் தவம்.
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். நான் சொல்ல வருவது என்னவென்றால், மேலே குறிப்பிட்ட ஆறு 'உ' க்களும் ஒருவருக்கு அமைந்தால் கூட, வாழ்க்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது என்று சொல்ல முடியாது. அதாவது, பொருளை பணத்தை கடந்து ஒருவரது உடல் நலம் மற்றும் மன வளமும் உண்மையான அமைதியைப்பெற தேவையானவை. எனவே நல்ல உடல் நலனுக்கு நல்ல உடற்ப்பயிற்சியுடன் நல்ல உணவை சாப்பிட வேண்டும். மன நலத்திற்காக, நல்ல சிந்தனைகளுடன், தவமும் விருப்பமுடன் ஆழ்ந்து செய்து வந்தால் அது பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என்பது என் கணிப்பு.
களவையும் கற்று மற என்றார்கள். நான் சொல்வது தவத்தையும் கற்று மற. தவத்தை அல்ல, மனதில் பாய்ந்து சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான, குறிப்பாக எதிர்மறை விளைவிகளைத்தரும் எண்ணங்களை மறைத்து வைக்காமல் மறக்கவேண்டும். அது அவ்வளவு சுலபம் அல்ல. பத்தாவது வாய்ப்பாடு வேண்டுமானாலும் மறந்துவிடலாம். ஆனால் மனதில் ஆழமாக பதிந்த எண்ணங்களை, அதுவும் நம் உடம்பில் உள்ள தழும்புகள் போன்ற கவலையை விளைவிக்கும், பயத்தை தரும் நிகழ்ச்சிகளை அதட்டி ஒடுக்கி வைக்கலாம். ஆனால், அவைகளை மனதிலிருந்து விரட்டமுடியுமா அல்லது ஒரேடியாக கொல்லமுடியுமா என்றால் அது முடிந்தும் முடியாத ஒரு முயற்சியாகத்தான் இருக்கும் என்பது அனுபவத்தில் விளைந்த எனது கருத்து.