பக்தி கடந்த ஆன்மீகம்

இல்லத்தில் கடவுளின் படங்கள் சாலிகிராமம் மற்றும் இதர சாதனங்கள் கொண்டு பூசை செய்வது மதச்சடங்கு!

கோவில் கோவிலாக சென்று ஆலய வழிபாடு செய்தல், ஒருவர் பழக்கம் செய்து கொண்ட , புறம் சார்ந்த பக்தி!
வீட்டில் பஜனைகள் செய்வது, வெளியே பஜனையில் சேர்ந்து பாடுவது போன்ற செயல்கள் புறம் சார்ந்த பக்தி தழுவிய ஒருவித கேளிக்கையே!

கங்கை, யமுனை போன்ற நதிகளில் நீராடுவது, மற்றும் பிராயச்சித்தம் செய்வது போன்ற செயல்கள், பாபங்கள் குறையும் அல்லது தொலையும் என்ற சந்தேகத்திற்குரிய நம்பிக்கையின் செயல்பாடுகள்!

வீட்டிலும் காசி மற்றும் கயா போன்ற இடங்களிலும் தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியங்கள் செய்வது, முன்னோர்களின் சாபம் வந்து விடக்கூடாது என்கிற பெற்றோர் வலியுறுத்திய எச்சரிக்கையால் ஏற்படும் விளைவுதான் !
கூட்டம் ஜன சந்தடி இல்லாத நேரங்களில் கோயிலில் சென்று மௌனமாக அமர்ந்து உள்நோக்காக சிந்திப்பது பக்தியின் இறுதி நிலை !

தனிமையான இடத்தில், முடிந்தவரை மக்களைத் தவிர்த்து தனக்குள்ளேயே தன்னைத் தானே அறிய, ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுவது ஆன்மீகத்தின் துவக்கம்!

சிலை வழிபாடு, பூசை, சடங்கு இவைகளை தவிர்த்து தான் யார் இறைநிலை என்பது என்ன, என்ற புறநிலை மறந்த தியானத்தில் அதிக நேரம் லயித்திருப்பது, ஆன்மீகத்தின் அடுத்த கட்டம்!

இயற்கையை நேசித்து, ஜன சந்தடியே இல்லாத அல்லது அதிக அளவில் இல்லாத, இயற்கை சூழலில் நேரம் தெரியாமல் மூழ்கி இருப்பது ஆன்மீகத்தின் முக்கிய கட்டம்!

சராசரி மனித வாழ்க்கையிலிருந்து விடுபட்டு குடும்பத்திலிருந்து வெளியேறி (அவர்கள் ஒப்புதலுடனோ அல்லது ஒப்புதல் இன்றியோ) வந்து, கையில் ஒரு சல்லி காசு கூட இன்றி, தன் உடலை இயற்கையே காப்பாற்ற விட்டுவிடுவது, ஆன்மீகத்தில் நன்கு மூழ்கி விட்டதின் அறிகுறி!

'நான் கடவுளின் ஒரு சின்னஞ்சிறு பகுதி எனவே நானும் கடவுளே ' என்ற ஆழ்ந்த அபரிமிதமான உணர்வு மனதில் மோதி எழுகையில், ஆன்மீகத்தில் வெகு தூரம் கடந்து விட்டதற்கு ஒப்பாகும்!

தான் காணும் ஒவ்வொரு மனிதனும் இதர‌ உயிரும் கூட கடவுளின் விரிவு அடைந்த நிலையே, என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, தான் காணும் அனைத்திலும் இறையருளைக் கண்டு மனிதாபிமானத்தின் உச்சியில் திளைத்து வாழும் ஒருவர், ஆன்மீக சென்ட்ரலுக்குள் நுழைய, பேசின் பிரிட்ஜ் ஜங்ஷனில் சிக்னலுக்காக காத்திருக்கிறார் என்றுதான் கொள்ள வேண்டும்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-May-24, 10:04 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 51

மேலே