தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும் - சிறுபஞ்ச மூலம் 45

நேரிசை வெண்பா

வார்சான்ற கூந்தல்! வரம்புயர வைகலு
நீர்சான் றுயரவே நெல்லுயருஞ் - சீர்சான்ற
தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும்
ஓவா துரைக்கும் உலகு! 45

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

நீட்சி மிகுந்த கூந்தலையுடைய பெண்ணே! நாடோறும் வயல்களின் வரப்பானது உயர்ந்திருக்க (நீர் நிலைத்து நிற்கும்), அங்ஙனம் நீர் மிகுந்து உயர்ச்சியடையவே (அந்நீர்வளத்தால்) நெற்பயிரானது வளர்ந்து உயர்வடையும், (அங்ஙனம் வளர்ந்த நெல் நல்ல விளைவைக் கொடுக்கக் குடியானவர்கள் செழிப்படைவார்கள் அவ்வாறு நிலவளத்தால்) சிறப்பு மிகுந்த அழியாத குடியானவர்கள் உயர்வடைய (பிறரால்) தாங்குதல் அரிதாகிய சிறப்பினையுடைய அரசன் உயர்வான் (என்று) இவ்வுலகமானது ஒழியாமற் சொல்லி நிற்கும்;

கருத்துரை:

வரம்புயர நீருயரும், நீருயர நெல்உயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோனுயர்வான் என்பதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Oct-25, 1:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே