மறப்பென்னும் தீயோன் மருவாமல் காத்தால் பிறப்பென்பது இல்லை - மறதி, தருமதீபிகை 486

நேரிசை வெண்பா

உள்ளத்(து) ஒதுங்கி உணர்வு நலங்களை
மெள்ளக் கவர்ந்து விரைந்தொளியும் - கள்ள
மறப்பென்னும் தீயோன் மருவாமல் காத்தால்
பிறப்பென்ப(து) உண்டோ பிறகு. 486

- மறதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளத்தில் வந்து மெள்ளப் புகுந்து நல்ல அறிவுப் பொருள்களைக் கவர்ந்து கொண்டு விரைந்து மறைந்து போகின்ற மறதி என்னும் கள்வனைக் கடிந்து காத்தால் பின்பு பிறவியில்லை என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், மறதி கொடிய கள்ளன் என்கின்றது.

அறிவு பெரிய பாக்கியம். அரிய பல உறுதி நலங்களை அது அருளி வருகின்றது. அதனை உடையவனே எல்லாம் உடையவனாய் உயர்ந்து திகழ்கின்றான்; அஃது இல்லாதவன் யாதும் இல்லாதவனாய் யாண்டும் இழிந்து படுகின்றான்.

இத்தகைய அற்புதத் திருவை மறதி அதி சாதுரியமாய்க் கவர்ந்து கொள்கின்றது. சூரியனை மேகம் மறைத்தல் போல் அறிவை மறதி மறைத்துக் கொள்கின்றது.

நேரிசை வெண்பா

மதியை விழுங்கும் அரவென்ன என்றன் .
மதியை மறதி விழுங்கிக் - கதியை
இழந்து திரிய இழைத்ததே இன்னல்
உழந்து தெளிந்தேன் உணர்ந்து.

’சந்திரனை விழுங்கிய பாம்பு போல் என் அறிவை மறதி விழுங்கிக் கொள்ளவே நான் கதியை இழந்து கடுந்துயர் உழந்தேன்; பின்பு தெளிந்து உய்ந்தேன்’ என உதங்கர் என்னும் முனிவர் இங்ஙனம் உரைத்திருக்கிறார்.

இறைவனோடு தமக்குள்ள உறவுரிமையை மறந்து உலக மயக்கில் விழுந்து பலகாலமும் உழந்து திரிந்து முடிவில் உண்மையை உணர்ந்து உய்தி கண்டபோது அம் மாதவர் மகிழ்ந்து கூறிய வாசகமாய் இப்பாசுரம் ஈண்டு வந்துள்ளது.

தன்னுடைய உண்மை நிலையை மறந்திருக்கும் வரையும் இன்னல் நிலைகளில் இழிந்து பிறந்து அழிந்து அலைந்து அலமந்து உழல்வர் என்றதனால் சீவர்களுடைய பரிதாப நிலைமைகளைத் தெரிந்து கொள்ளலாம். ஒளிபுகும் அளவும் இருள் பெருகியுளது.

உயிர்க்கு உறுதியான அறிவை மறதியால் இழந்து விடுவது பெரிய இழவு ஆகின்றது. அந்தக் கேடு நேராதபடி விழிப்போடு நாடிக் காப்பவர் நலம் பல காண்கின்றார்.

மறதியின் இயல்பும் செயலும் கருதியுணர ’கள்ள மறப்பு என்னும் தீயோன்’ என இங்ஙனம் உருவகம் ஆக்கி உரைத்தது. யாரும் அறியாதபடி மெல்லப் புகுந்து அருமைப் பொருள்களைக் கவர்ந்து கொண்டு மறைந்து போகின்ற கள்ளர் போல நல்ல.அறிவைக் கவர்ந்து மறதி ஒளிந்து போதலால் அது கள்ளன், தீயோன் என எள்ளி இகழ நேர்ந்தது.

அதிமதி நுட்பமோடு அதிகலை கற்பினும்
விதியது வசத்தால் விதிவிலக்கு அயர்ப்பாம்,13
ஆகையால் அளவிடல் அரிதே, அன்றியும்
சொல்லின் கூட்டமும் பொருளின் கூட்டமும்
அவ்விரண் டனையும் அளவிடப் படாவே,14
இந்நால் வகையினுள் என்னால் இயன்றது
சிறப்பாய் உள்ளன சிலதேடி னனவை
மறப்பென்னும் பகைவன் வாரிக் கொண்டனன்,15
அவன்கையில் அகப்படா(து) அடங்கின வற்றுளும்
சிறிதினைச் சிறியேன் சிறிது சிறார்தமக்(கு)
உரைத்தனன்; அன்றிஈ(து) ஒருநூல் அன்றே;
இவ்வழக்கு அறிந்தோர் இகழுதல் வழக்கே!
இவ்வழக்கு அறியார் இகழுதல் வழக்கே. – அவையடக்கம், இலக்கணக் கொத்து

சுவாமிநாத தேசிகர் என்னும் பெரிய புலவர் தாம் செய்துள்ள நூலுக்கு அவையடக்கமாக இவ்வாறு பாடியிருக்கிறார்.

முயன்று பயின்று தாம் கற்றறிந்த பொருள்களுள் பலவற்றை மறப்பு என்னும் பகைவன் வாரிக் கொண்டான்; அவன் கையில் அகப்படாமல் எஞ்சியுள்ளதை நெஞ்சிலிருந்தபடி சொல்லுகின்றேன் என்று அவர் சொல்லியிருத்தலால் மறதியின் கொள்ளை நிலையும், கொடிய தீமையும் உள்ளியுணர வந்தன.

வருந்தி ஈட்டிய பொருளை இழந்து விடுவதினும் பரிந்து கற்ற கல்வியை மறந்து விடுவது மிகுந்த துயரமாம்.

நேரிசை வெண்பா

நெடும்பகற் கற்ற அவையத் துதவா
துடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால். 8 நீதிநெறி விளக்கம்

பல காலமும் கற்ற கல்வி அவையில் பேச நேர்ந்த போது அச்சத்தாலோ, மறதியாலோ உதவாது போய்விடின் அது கொடிய மன வேதனையாம் என இது உணர்த்தியுள்ளது.

அவமான அல்லலின் எல்லை தெரிய உவமானம் வந்தது. பட்டப் பகலில் தன்னுடைய மனைவி அயலானோடு மருவியிருக்கக் கண்டால் அந்தக் கணவன் உள்ளம் எவ்வாறு கொதிக்குமோ, அவ்வாறு உரிமையுற்றிருந்த கல்வி மறதி வசப்பட்டுக் கரவு புரியின் அக்கல்விமான் உயிர் நெடிது பதைக்கும்.

அரும்பாடுபட்டுத் தேடிக் கொண்ட அரிய உரிமைகளைப் பறித்துக் கொள்ளுதலால் மறதி எவ்வளவு கொடிய விரோதி என்பது எளிது தெளிவாம்.

மடியை முயற்சியால் மாற்று; மறதியை உணர்ச்சியால் நீக்கு; மறப்பு மருவாமல் காத்தால் பிறப்பு உண்டோ?

தனது உண்மை நிலையை மறந்துள்ளமையினாலேதான் மனிதன் பிறவிச் சுழலில் ஓயாது சுழன்று வருகிறான்; மறப்பு நீங்கினால் அன்றே பிறப்பு நீங்கியதாம்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வாராய்என் மகனே! தன்னை
..மறந்தவன் பிறந்(து)இ றந்து
தீராத சுழல்காற்(று) உற்ற
..செத்தைபோல் சுற்றிச் சுற்றிப்
பேராத கால நேமிப்
..பிரமையில் திரிவன் போதம்
ஆராயும் தன்னைத் தானென்(று)
..அறியுமவ் வளவும் தானே. 19 கைவல்லியம்

ஒரு தத்துவ ஞானி தன்னையடைந்த உத்தம சீடனுக்கு இவ்வாறு உபதேசித்திருக்கிறார். பரமாத்துமாவின் பாகமே சீவாத்துமா என்னும் உண்மையை மறந்து போனமையால் சீவர்கள் ஓயாமல் சனன மரணங்களில் உழன்று வருகின்றனர். சூறாவளியில் அகப்பட்ட துரும்பு போல் காலச் சக்கரத்தில் சீவன் சுழன்று வருகின்றது என்றதனால் பிறவித் துயரின் பரிதாப நிலைமையை அறியலாகும். உரிய வழி தவறவே பெரிய இருள் மூடியது.

இறைவனுடைய இன்பச் சுடர் என்று தனது உண்மை நிலையை உணரும் வரையும் துன்பத் தொடர்பில் நின்று நீங்க முடியாது என்பார் ’அறியும் அளவும் திரிவன்’ என்றார். மறந்து விட்டமையால் விளைந்த கேடு நினைந்து தொட்டபோது நீங்கி விடுகின்றது. விழி திறக்கவே ஒளி பிறக்கின்றது.

உடலும், பொருளும், மனையும், மக்களும் உலக உறவுகள் யாவும் மறவியால் நேர்ந்த பிறவித் தொடர்புகளே; இடையே போலியாய் ஒட்டிய அப்பொய் மயல்கள் எல்லாம் மெய் தெளிந்தவுடனே அடியோடு குடி வாங்கிப் போகின்றன.

நேரிசை வெண்பா

எல்லையில் காலம் இருள்மூடி நின்றாலும்
ஒல்லை ஒளியால் ஒழியுமே - அல்லல்
நெடிய பிறப்பும் நிலைதெளிந்த போதே
நொடியில் ஒழிந்து விடும்.

உன்னை நினைந்து பார்; உண்மையை உணர்ந்து தெளி என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-19, 3:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே