உயிர்க்கோர் இடனினிதாய்க் காண முயலீர் கருதீர் நமரங்காள் - உறுதி, தருமதீபிகை 496

நேரிசை வெண்பா

கடலலைபோல் தோன்றிக் கணக்கின்றி நாளும்
உடலழிதல் கண்டும் உயிர்க்கோர் - இடனினிதாய்க்
காண முயலீர் கருதீர் நமரங்காள்!
பேணுமுறை அந்தோ பிழை. 496

- உறுதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கடலில் எழுகின்ற அலைகளைப் போல் தோன்றி உலகில் உடல்கள் நாளும் அழிந்து கொண்டேயிருக்கின்றன; அந்த அழிவு நிலையைக் கண்டும் உன் உயிர்க்கு ஓர் உறுதி நலனைச் செய்து கொள்ளாமல் வறிதே இருப்பது வசையாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தனது நிலைமையை எண்ணியுணர்வது மனிதனுக்குப் பெரிய புண்ணியப் பேறாகின்றது; தன்னை உணர்ந்தவன் ஞானி ஆகின்றான், ஆகவே அவன் அவல நிலைகளைக் கடந்து அதிசயமான ஆனந்த நிலையைப் பெறுகின்றான்.

எண்ணி உணராமல் கண்ணை மூடிக் கவிழ்ந்திருப்பவன் மண்ணாய் மடிந்து போகிறான். நல்ல பகுத்தறிவைப் .பெற்றிருந்தும் அதனைப் புல்லிய வழிகளில் செலுத்திப் புலையாய்க் களித்துத் திரிந்து யாதொரு கதியும் காணாமல் அவமே அழிந்து போவது அவலப் பிறப்பாய் முடிந்து மாய்கிறது.

உலக வாழ்வின் நிலைமையை உணர்ந்து தனக்கு உறுதிநலனை விரைந்து ஓர்ந்து கொள்கிறவன் பிறந்த பயனை அடைந்த சிறந்த முனிவனாய் உயர்ந்து விளங்குகிறான்.

ஆயுள் அதி வேகமாய்க் கழிந்து கொண்டே போகின்றது. தினமும் தான் செத்து வருவதை உய்த்துணராமல் ஊனம் அடைந்திருப்பது ஒருவனுக்குப் பெரிய ஈனமாம் என ஓர் ஞான முனிவர் நவின்றிருக்கிறார். புல்லிய நிலை புலையாகிறது.

அளவிடலரியனவாய் மாறி மாறி எழுந்து மடிந்து ஓயாது தொடர்ந்து வருதல் கருதி உலகில் தோன்றி மடிகின்ற உடல் அழிவுகளுக்குக் கடல் அலைகளை உவமை காட்டியது.

பிறந்தவர் யாவரும் இறந்து படுவதைக் கண் கூடாகக் கண்டிருந்தும் தன் கூடு பிரியுமுன் தனக்கு ஊதியத்தை அடையாதிருப்பது பெரிய மடமையாகின்றது. விழி இழந்தவன் குழியில் வீழ்ந்து எழுதல் போல் வழிவகை தெரியாமல் மாந்தர் அழிவில் ஆழ்ந்து அலமருகின்றனர்.

தரவு கொச்சகக் கலிப்பா

விழியிழந்தான் போம்பொழுது விழுங்குழியில் மீண்டந்த
வழியதனில் வரும்பொழுது மறித்தும்விழுந் திடுவதுபோல்
இழிபுறுமஞ் ஞானத்தால் இறந்துபிறந்(து) எஞ்ஞான்றும்
ஒழிபிலிடர் உயிரெய்தும், உதுநீங்கில் உறுமின்பம். 1

அடவிதனில் புகுந்திடினும், அடுக்கல்முழை நுழைந்தாலும்,
இடைநிலவு சேய்மைநிலத்(து) எய்திடினும், எறிதரங்கக்
கடலதனின் மூழ்குறினும், காலமது வருங்காலை
உடலொழியும் இறப்பதனோ(டு) ஒற்றுமைய(து) ஆகலினால். 2 சேது புராணம்

மனித வாழ்வில் அழிவுநிலை இவ்வாறு தழுவியுள்ளமையால் உடல் விழுமுன் உயிர்க்கு உறுதியை நாடிக் கொள்ள வேண்டும் என மேலோரும் நூலோரும் பாடியருளினர்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். 335 நிலையாமை

சாவு நேருமுன் சீவனுக்கு இனிய தருமத்தைச் செய்து கொள்ளுக என வள்ளுவர் இவ்வாறு உய்தி கூறியுள்ளார்

மனம், வாக்குக் காயங்களால் மனிதன் செய்து வருகிற நல்வினைகள் யாண்டும் இன்ப நலங்களை நல்கி வருதலால் அவை சீவ அமுதங்களாய் மேவியுள்ளன. காலம் உள்ள பொழுதே நல்ல புண்ணியங்களை நயந்து கொள்பவன் மேலான இன்பங்களை அடைந்தவனாகின்றான்.

இளமை கழிந்து போகிறது; மூப்பு வளர்ந்து வருகிறது: சாக்காடு உன்னை நோக்கி உருத்து நிற்கின்றது; இந்த அபாய நிலைகளையறிந்து யாதொரு உபாயமும் தேடாமல் நீ ஊனமாயிருப்பது ஈனமாம். உண்மை தெளிந்து நன்மையை விரைந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நெருநல் என்பது சென்றது, நின்ற
இன்றும் செல்லா நின்றது, முன்சென்று
வருநாள் கண்டார் யாரே? அதனால்
ஒருநாள் கைப்படுத் துடையோர் இன்மையின்,
நல்லது நாடுமின்! உள்ளது கொடுமின்!
வழாஅ இன்பமும் புணர்மின்! அதாஅன்று
கீழது நீரகம் புகினும், மேலது
விசும்பின் பிடர்த்தலை ஏறினும், புடையது
நேமி மால்வரைக்(கு) அப்புறம் புகினும்
கோள்வாய்த்துக் கொட்கும் கூற்றத்து
மீளிக் கொடுநா விலக்குதற்(கு) அரிதே. - ஆசிரிய மாலை

உங்கள் வாழ்நாள் கணம்தோறும் கழிந்து கொண்டேயிருக்கிறது; எங்கே போய் ஒளிந்தாலும் எமனை யாரும் தப்ப முடியாது; பொழுது இருக்கும் பொழுதே உயிர்க்குரிய நன்மையை உறுதியாகச் செய்து கொள்ளுங்கள் என உலக மக்களை நோக்கி உரிமையுடன் உரைத்திருக்கும் இந்த அருமைப் பாசுரம் நாளும் நன்கு சிந்திக்கத்தக்கது. அரிய உறுதி நலங்களைப் பெரியோர்கள் தெளிவாக அருளியுள்ளனர். மொழிகளில் மிளிர்கின்ற பொருள்களை அறிவு விழிகளால் கருதி நோக்குபவர் பெரிய பாக்கியங்களை அனுபவிக்க நேர்கின்றனர்.

’உயிர்க்கு ஓர் இடன்’ என்றது பல உடல்களிலும் புகுந்து ஒதுக்குக் குடியிருந்து ஒன்றிலும் நிலையின்றி ஓயாது சுற்றி வருகிற உயிர்க்கு நிலையான ஓர் இடம் பேரின்ப வீடேயாதலால் நித்தியமான அந்த முத்தி நிலையை உய்த்துணர வந்தது.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340 நிலையாமை

என்றும் நிலையாயிருந்து வாழ இந்த உயிர்க்கு ஒரு சொந்த வீடு இல்லையா? என்று வள்ளுவர் இங்ஙனம் இரங்கியிருக்கிறார். பிறவி நீங்கி யாவரும் பேரின்ப வீட்டை அடைய வேண்டும் என்னும் கருணைக் காட்சி இங்கே கனிந்திருக்கிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
காய் வருமிடங்களில் விளம் வரலாம்)

நீரிலெழும் அலைகளென நிலத்திலெழு தலைகளெலாம்
..நேரே மாய்ந்து
காரிலெழு மின்ன’ல்’கள்போல் கடிதுமறைந்(து) ஒழிகின்ற
..காட்சி கண்டும்
ஓரில்நமக் குரிமையாய் வேண்டுமெனும் உணர்வின்றி
..உயிர்கள் அந்தோ
பாரிலெழு பிறவிகளில் பலபடியாய்த் திரிந்துவரும்
..பான்மை என்னே!

நிலையான குடியேற்றத்தை மறந்து விட்டு நிலை திரிந்து உயிர்கள் புலையாடி வருவது பொல்லாத அல்லலாய்ப் பொங்கியுள்ளது. உடலுயிர்களின் நிலைகளைப் பகுத்தறிந்து உண்மை காணாமையால் நன்மை காணாது போயது.

உற்றதை உணரும் உடல்உயிர் வாழ்வுழி
மற்றைய உடம்பே மன்உயிர் நீங்கிடில்
தடிந்துஎரி ஊட்டினும் தான்உண ராதுஎனின்
உடம்பிடைப் போனதுஒன்று உண்டுஎன உணர்நீ
100 போனார் தமக்குஓர் புக்கில்உண்டு என்பது

யானோ வல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்புஈண்டு ஒழிய உயிர்பல காவதம்
கடந்துசேண் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை
105 பூண்ட யாக்கையின் புகுவது தெளிநீ. 16 ஆதிரை பிச்சை இட்ட காதை, மணிமேகலை

உயிர் நிலையை உணர்த்தி இது உய்தி கூறியுளது.

‘பேணும் முறை அந்தோ பிழை’ உயிர்க்கு இதத்தை நாடாமல் உலக போகங்களில் மயங்கிக் கலக மையலில் களித்துத் திரிவதை இது இளித்து இரங்கியது. உறுதி நிலையைக் கருதித் தெளிந்து உரிமை நலனை மருவுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-19, 3:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே