உள்ள பொழுதே உறுதிநலம் ஓராமல் ஓடி இழிகின்றாய் - உறுதி, தருமதீபிகை 500
நேரிசை வெண்பா
உள்ள பொழுதே உறுதிநலம் ஓராமல்
எள்ளலுற ஓடி இழிகின்றாய் - வெள்ளந்தான்
போயொழிந்த பின்புநீர் புக்குண்ண வந்தான்போல்
நீயழிவாய் நின்று நினை. 500
- உறுதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
காலம் இருக்கும் பொழுதே உயிர்க்குறுதி நலனைக் கருதிக் கொள்ளாமல் வீணாய் அலைகின்றாய்! வெள்ளம் போன பின் நீர் பருக வந்தவன் போல் மறுகி அயர்வாய் என்பதை நீ நினைந்து கொள் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
என்றும் அழியாத இன்ப நிலையை உறுதிநலம் என்றது. நித்தியமான அந்த உத்தம ஆனந்த நிலையை எவன் அடைந்து கொள்கின்றானோ, அவன் முத்தனாய் முதன்மை பெற்று நிற்கின்றான். பிறந்த சீவகோடிகளுள் அத்தகைய இனிய நிலைமையை எய்தியவன் தனிமுதல் தலைமையில் நிலவி மிளிர்கின்றான்.
பிறவி யாண்டும் எவ்வகையிலும் துயரமானதாதலால் அதனைத் தாண்டி உய்வதே தத்துவ ஞானமாய் நீண்டு நிலவுகிறது.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை. - குறள், 362 - இந்த மறைமொழி பிறவியின் துயரையும், பிறவாமையின் உயர்வையும் தெளிவாக உணர்த்தியுளது. தான் யாண்டும் இன்பத்தை அடைய வேண்டுமென்று எவன் விரும்புகிறானோ, அவன் எவ்வாற்றானும் பிறவியை அடையாமல் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டும்.
பிறவி எந்த வகையிலும் துன்பமாதலால் அதனை நீங்கி உய்யவே சீவகோடிகள் யாண்டும் ஏங்கியுழல்கின்றன. தெளிவான வழி தெரியாமையால் இளி வழிகளில் இழிந்து களி மயக்கோடு சுழன்று வருகின்றன. பழியான வாசனைகளில் படிந்து பழகினவை விழிதிறந்து காணாமல் வீணே அலைந்து திரிகின்றன.
சுத்த எண்ணங்களாலும், நல்ல கருமங்களாலும் சித்தம் தெளிந்து ஞான ஒளி உதயமாய் நலம் பல காண்கின்றது; அந்த ஞானக் காட்சி நண்ணிய பொழுது பிறவியின் ஈனங்களும், இழி துயரங்களும் எளிதே தெரிகின்றன: அங்ஙனம் தெரிந்த ஞானிகள் பிறப்பின் அல்லல்களை எண்ணி உள்ளம் கலங்கி உய்தி காண மூண்டு உறுதியோடு விரைகின்றார்.
பிறவித் துயரங்களைக் குறித்து அவர் கருதிச் சொல்லியுள்ள காட்சிகள் கொடிய பரிபவங்களாய்ப் பெருகியுள்ளன. சில அயலே வருகின்றன.
நேரிசை ஆசிரியப்பா
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க நெல்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்கி யான்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி
மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்(கு)
அருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப்
பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி
அயர்த்தனன் இருந்த போதும் பெயர்த்துநின்(று)
எண்டோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல்எயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே. 8 - 026 கோயில் நான்மணிமாலை, பதினொன்றாம் திருமுறை
பிறவித் துயரைக் குறித்துப் பட்டினத்தார் இவ்வாறு வருந்தியிருக்கிறார். ஒரு கொடிய நச்சுப் பாம்பு; வயலுள் சிறிய நீர்ப் பாம்பைப் பிடித்துக் கொண்டது; அது ஒரு தவளையைக் கவ்வியிருந்தது; அந்தப் பாம்பின் வாய்த் தேரை போல் எமன் வாயில் அகப்பட்டு அல்லல் பல அடைந்தும் புல்லிய போகங்களை நுகர்ந்து உள்ளம் களித்துக் திரிந்து உன்னை மறந்து எல்லையில்லாத பிறவிகளில் இழிந்து அலைந்து நொந்தேன்; அந்தோ! தில்லைப் பரமனே! என்று உள்ளமுருகி அடிகள் பாடியுள்ளார். உரைகளில் பொதித்துள்ள உறுதியுண்மைகளை ஊன்றி யுணர்ந்து கொள்ள வேண்டும்.
எங்கும் துன்பச் சூழல்களே நிறைந்திருந்தும் சிறிது பொருளைக் கண்டும், இனிய உணவுகளை உண்டும் அழகிய மங்கையரை முயங்கியும் மனிதன் கொஞ்சம் நெஞ்சம் களித்துக் கொள்கிறான் . அந்த அற்பக் களிப்பும் அவலமாய் முடிகின்றது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
இருந்தரா தலப்பரப்பில் இடுக்கண்மேல் இடுக்கணெய்தி
இமைப்பில் வீழ்ந்து
வருந்துமா னுடப்பிறப்பில் மங்கைநல்லா ரொடுமயங்கி
மகிழ்ந்து கோடல்
பருந்தின்வாய்ப் படும்அரவம் பிடித்தமண்டூ கம்கொள்சிறு
பறவை செந்தேன்
அருந்துமா(று) ஒப்பதனால் ஆங்கதுசிற் றின்பமெனல்
ஆயிற் றன்றே. - மெய்ஞ்ஞான விளக்கம்
கருடன் ஒரு பாம்பைப் பிடித்தது: அந்தப் பாம்பு ஒரு தவளையைக் கடித்தது; அந்தத் தவளை ஒரு வண்டைக் கவ்விக் கொண்டது; இப்படி அல்லலான அபாய நிலையிலுள்ள அந்த வண்டு ஒரு துளி தேனை உண்டு மகிழ்ந்து கொண்டதுபோல் பல துன்பங்களிடையே மனிதன் மங்கையரை மருவி மகிழ்ந்து கொள்வது என அவனது சிற்றின்ப நிலையை இது இங்ஙனம் இகழ்ந்திருக்கிறது. உருவக நிலைகள் துக்க பரம்பரைகளை ஒக்க நோக்கி உணர்ந்து கொள்ள வந்துள்ளன.
வெண்டளை பயிலும் கலி விருத்தம்
1988 யானை துரப்ப வரவுறை யாழ்குழி
நானவிர் பற்றுபு நாலு மொருவனோர்
5தேனி னழிதுளி நக்குந் திறத்தது
மானுய ரின்ப மதித்தனை கொண்ணீ. 878 துறவுச் சருக்கம், சூளாமணி
மானுட வாழ்வின் இன்ப நிலையை இது வரைந்து காட்டியுளது. துன்பக் கலிப்புகளுள்ளே துளி அளவு இடையே சிறு களி மயக்கமென ஒளி தெளிந்து உய்தி காண, விழி தெளிய வெளியிட்டது.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
அடுகரி தொடர வீழ
..ஐந்தலை நாகங் காண
இடிகிணற் றறுகின் வேரைப்
..பற்றிஞான் றிடஅவ் வேரைக்
கடுகஓர் எலியும் வந்து
..கறித்திட அதில்நின் றோனுக்(கு)
இடைதுளி தேன்நக் கின்பம்
..போலுமிப் பிறவி யின்பம்.
.
ஒருவன் அடவிக்குப் போயிருந்தான்; அங்கே ஒரு பெரிய மதயானை அவனைக் கண்டு துரத்தியது; அவன் அஞ்சி ஓடினான்; அது பின் தொடர்ந்து முடுக்கியது; நெடிது ஓடி முடிவில் இருபுறமும் மரப்புதர்கள் அடர்ந்த சிறு வழியே புகுந்தான்; கரியும் நெருங்கியது; உயிருக்கு அஞ்சி எதிரேயிருந்த பாழ்ங்கிணற்றில் தாவினான்; அடியில் ஒரு கொடிய பாம்பு படம் எடுத்துச் சீறியது; அதற்குப் பயந்து அயலே வளர்ந்து தொங்கிய அறுகம்புல்லைப் பற்றித் தொங்கினான்; அந்தப் புல்லையும் இரண்டு எலிகள் வந்து, கடித்துக் கொண்டிருந்தன;
அந்த நிலையில் அவலமாய்த் தொங்கிக் கிடந்த அவன் முதுகில் சில தேன்துளிகள் விழுந்தன: மேலே நோக்கினான்; அயலே நின்ற பெரிய மரத்திலிருத்து இறால் உடைந்து தேன் சிந்தியதாதலால் அதற்கு நேரே நாவை நீட்டிச் சில துளிகளை நக்கி உளம் உவந்தான். அதிபரிதாபமான கொடிய துயர நிலையில் உள்ள அவன் ஒருதுளி தேனை நக்கி உள்ளம் உவந்தது போல் எல்லையில்லாத அல்லல்களிடையே .அருந்தல் பொருந்தல்களில் மனிதன் கொஞ்சம் இன்பம் கண்டு இறுமாந்து திரிகிறான். உருவகத்தை ஊன்றி நோக்கிப் பொருள் நிலைகளை ஓர்ந்து கொள்ள வேண்டும்.
எமனை அடுகரி என்றது; ஐம்பொறிகளின் வெறிகளை ஐந்தலை நாகம் என்றது, பிறவியை இடிகிணறு என்றது, ஆயுளை அறுகம்புல் என்றது: பகல் இரவாய்க் கழிகின்ற நாட்களை எலி கறித்தது என்றது. இவ்வாறு நாளும் அழிவு நிலையிலுள்ள மனிதன் இழி போகங்களை நுகர்ந்து களிமிகுந்து வருகிறான்.
நேரிசை வெண்பா
வான்எழுந்த வில்லும் வருதிறையும் மின்னும்போல்
ஊன்அழிந்து போகுமென ஓர்ந்திருந்தும் - ஆன
உறுதியொன்றும் செய்யாமல் உள்ளம் செருக்கி
வறிதொழிதல் வன்பாவ மாம்.
மானிட வாழ்வு இவ்வளவு ஊனமுடையதாயுளது; உண்மை தெளிந்து உறுதி நலனை ஓர்ந்து உய்தி பெறுக என்றும், நிலைமைகளைக் கருதியுணர்ந்து நித்திய நலனை அடைக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.
.