உன்னுடைய உண்மை நிலையை உணர்ந்து தலைமை அறி - மறதி, தருமதீபிகை 490
நேரிசை வெண்பா
உன்னை மறந்திருக்கும் ஊனத்தால் ஈனமெலாம்
இன்னல் நிலையில் எழுந்தவால் - உன்னுடைய
உண்மை நிலையை உணர்க உணர்ந்தாயேல்
அண்மை தலைமை அறி. 490
- மறதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உன்னை மறந்துள்ள மடமையால் ஈனமும் இன்னலும் அடர்ந்துள்ளன; உன்னுடைய உண்மை நிலையை உணர்ந்து கொண்டால் உடனே உயர்ந்த மேன்மையை அடைந்து கொள்வாய் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், உண்மையை ஓர்ந்துணர்க என்கின்றது.
தன்னை அறிவது மெய்ஞ்ஞானம்; அங்ஙனம் அறியாது நிற்பது அஞ்ஞானம். முன்னது அருள் நிலை; பின்னது மருள் நிலை.
உடல் என்னும் கூட்டுள் உயிர் குடி புகுந்துள்ளது. சீவன், பிராணன், ஆவி, ஆன்மா எனப் பல பெயர்களை அது மேவி நிற்கின்றது. பரமாத்துமாவின் ஒளித் துளியே சீவாத்துமா. அந்த ஆதி மூல நிலையிலிருந்து பலகோடி உருவங்கள் அளவிடலரியபடி எங்கும் தோன்றி நிற்கின்றன. கடலில் அலை, திரை, நுரை, திவலை, குமிழி என வேறாகக் தோன்றினும் மீண்டும்.அதிலேயே அடங்கி ஒடுங்குதல் போல் உலக உயிர்கள் யாவும் பரப்பிரமத்தினிடமே காலாந்தரத்தில் கலந்து கொள்ளுகின்றன.
பரம்பொருள் பரிசுத்தமுடையதாதலால் அந்தப் புனித நீர்மையை உடைய உயிர்கள் நேரே அதனை அடைந்து மகிழ்கின்றன. தருமம், நீதி, கருணை, சத்தியம் முதலிய உத்தம இயல்புகள் வாய்ந்த பொழுது ஆன்மா பரமான்வை நோக்கி உருகிக் கரைந்து உன்னதமான பேரின்ப நிலையை மருவுகின்றது. அந்த நிலையில் வருகின்றவர்கள் சீவ கோடிகளுள் அதிசய புருடர்களாய் விளங்குகின்றனர். முத்தன், சித்தன், பத்தன், ஞானி, யோகி, மகான் என அவர் திவ்விய நாமங்களை எய்தி நிலவுகின்றனர்.
ஆன்ம தரிசனம் செய்து ஆனந்தம் அடைந்துள்ளவர்களாதலால் தேகத்தை ஒரு சிறைக்கூடமாகக் கருதி எப்பொழுதும் தெய்வீக யோகத்தையே அவாவி நிற்கின்றனர்.
கட்டளைக் கலித்துறை
தோலால் சுவர்வைத்து நாலாறு காலில் சுமத்தியிரு
காலால் எழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு வேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோன்இரு தாளன்றி வேறில்லையே. 44 கந்தரலங்காரம்
தேகம் பிரிந்தால் முருகப்பிரான் அடியே தனக்கு உரிய இனிய நிலையமாம் என அருணகிரிநாதர் கருதியுள்ளமை இவ்வுரையால் தெரிய வருகின்றது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
அங்கத்தை மண்ணுக் காக்கி
..யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப்
..பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா
..சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா
..விங்குற்றே னென்கண் டாயே. 8 - 075 பொது, நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்
அப்பர் இறைவனை நோக்கி இப்படி உருகி உரையாடியிருக்கிறார். உயிரின் பரிபக்குவங்கள் உரைகளில் ஒளிர்கின்றன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் விளம் மாங்காய்)
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்
..பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற்
..சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
..பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய ..அதியங் கண்டாமே. 7
- 26 திருவாசகம் - அதிசயப் பத்து, திருவாசகம், மாணிக்கவாசகர், எட்டாம் திருமுறை
ஈசனைப் பார்த்து மாணிக்க வாசகர் இவ்வாறு பேசியிருக்கிறார். பெற்ற தந்தையிடம் பிள்ளைகள் பேசுவது போல் உள்ளம் உருகிப் பேசியிருத்தலால் இறைவனோடு சீவர்களுக்குள்ள உறவுரிமை உணரலாகும். உண்மை தெரியவே உழுவலன்புடையராய்க் கிழமை கொண்டாடி ஆற்றாமை மீதூர்ந்து நேரே நெருங்கிப் பேசுகிறார்.
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காற்றைப் பிடித்துமட் கரகத் தடைத்தபடி
கன்மப் புனற்குளூறுங்
கடைகெட்ட நவவாயில் பெற்றபசு மட்கலக்
காயத்துள் எனையிருத்திச்
சோற்றைச் சுமத்திநீ பந்தித்து வைக்கத்
துருத்திக்குள் மதுஎன்னவே
துள்ளித் துடித்தென்ன பேறுபெற் றேன்அருள்
தோயநீ பாய்ச்சல்செய்து
நாற்றைப் பதித்ததென ஞானமாம் பயிரதனை
நாட்டிப் புலப்பட்டியும்
நமனான தீப்பூடும் அணுகாமல் முன்னின்று
நாடுசிவ போகமான
பேற்றைப் பகுத்தருளி எனையாள வல்லையோ
பெரியஅகி லாண்டகோடி
பெற்றநா யகிபெரிய கபிலைமா நகர்மருவு
பெரியநா யகியம்மையே. 1 - 39. பெரியநாயகி, தாயுமானவர்
சீவச் சிறையின் நீர்மையை இந்தப் பாசுரம்.அழகாக விளக்கியிருக்கிறது. காற்றைப் பிடித்து ஒரு மண் கலசத்தில் அடைத்து வைத்தது போல் என்னை உடலில் புகுத்தி உணவூட்டி ஆட்டி வருகிறாய்! இந்தப் பாச பந்தத்தால் ஈச சம்பந்தத்தை நான் இழந்து வருந்துகிறேன்; என்மேல் அருள் புரிந்து தேகச் சிறையை நீக்கிச் சிவ போகத்தைத் தந்தருள வேண்டும் என்.று பராசத்தியை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு வேண்டியிருக்கிறார். உடம்பை ’நவவாயில் பெற்ற பசுமட்கலம்’ என்றது. நவம் - ஒன்பது. ஓட்டைக் குடத்தில் காற்று அடங்கியிருப்பது பெரிய அதிசயமாகின்றது. பொள்ளல் உடலில் உயிர் நிலைத்திருப்பது அரிய வியப்பு என்பது தெரிய வந்தது.
நேரிசை வெண்பா
வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை – திருந்திழாய்!
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ? நிற்றல் வியப்பு. 12 – நன்னெறி
இல்லிக் குடத்தில் நீர் இருப்பதுபோல் ஒன்பது துவாரங்களுடைய உடம்பில் உயிர் இருக்கிறது. அது நீங்காமல் நிலைத்திருப்பது ஆச்சரியமாதலால் தேகத்தோடு சீவன் சேர்ந்து வாழ்வதின் அதிசய நிலையை ஓர்ந்து கொள்ளலாம்.
அழிவும், துக்கமும், அசுத்தமும் உடைய உடம்பில் என்றும் அழியாத இன்பமயமான பரிசுத்த சீவன் ஒன்றியிருப்பது விசித்திரமான வினை விளைவேயாம்.
தேகத்தையும் தேகியையும் பகுத்தறிந்து அகமுகமாய்த் திரும்பி ஆன்மக் காட்சியுறுகின்றவர் பேரானந்த நீர்மையராய் சீர்மை பெறுகின்றனராதலால் அவர் அதிசய முத்தர்களாய்த் துதி செய்ய நின்றனர்.
’உன்னுடைய உண்மை நிலையை உணர்க’ பொய்யான புன்மை நிலைகளைப் புறந்தள்ளி மெய்யான ஆன்ம நிலையை உணர்த்து கொண்டால் அதனாலுடனே உய்தியுண்டாகின்றது. ஆகவே அவன் பிறவிப் பேற்றையடைந்த பெரிய பாக்கியவானாய் அரிய இன்பங்களை அனுபவிக்கின்றான்.
தன்னை மறந்திருந்தமையால் விளைந்த இன்னல் இழவுகள் எல்லாம் தனது உண்மையை நினைந்து தெளிந்தவுடனே ஒளி கண்ட இருள் போல ஒழிந்து போகின்றன.
'என்னையே நானறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியத் தலமெனக்குச் சொன்னான்'
என இன்னவாறு. தமது ஆன்ம அனுபவத்தைப் பட்டினத்தடிகள் சொல்வியுள்ளார். மையல் மயக்கொழிந்து மெய்யை அறிவது மேன்மை தருகின்றது. .
நீ பரமனது உரிமையைப் பரிபூரணமாக உடையவன்; பாவ அழுக்குகள் யாதும் படியாமல் பரிசுத்தனாக உன்னைத் தூய்மை செய்து கொண்டால் அந்த இறைமை தானாகவே உனக்குச் சொந்தமாம். காணியைக் கையிழந்து நிற்பது கணணிழந்த படியாம்.
அயலான மயலில் ஆழாமல் இயலுரிமையை எண்ணுவது உயர் நலமாய் உறுதிநிலை அருளுகின்றது. தேக நியதி களைந்து சீவனைக் காண்பவன் தேவனைக் காண்கின்றான்,
'இன்னது தேகம் தேகி இவனென உணர்வான் யாவன்
அன்னவன் தன்னைத் தானென்(று) அறிந்தவன் ஆகும்' - கைவல்லியம்
தன்னை அறிபவன் இயல்பை இது உணர்த்தியுள்ளது.
நேரிசை வெண்பா
மறந்திருந்த உன்னை மனந்தெளிந்து காணின்
பிறந்திருந்த பீழையெலாம் பேரும் - இறந்திருந்த
எண்ணரிய சன்மங்கள் ஏமாந்து நின்றமையை
எண்ணறிந்து கொள்ளும் எதிர்ந்து.
இவ்வுண்மையை உறுதியாக ஊன்றி உணர்ந்து கொள்க.
கட்டளைக் கலித்துறை
பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும்; பிறந்துவிட்டால்,
இறவா திருக்க மருந்துண்டு காண்!இது எப்படியோ,
அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்
மறவா திருமன மேஅது காண்நன் மருந்துனக்கே. 16 திருத்தில்லை, பட்டினத்தார்
நேரிசை வெண்பா
மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடும் எல்லாம் சலமிலவாய் - நோக்கீர்
பருந்துக்(கு) இரையாமிவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு? – முனைப்பாடியார்