உயிர்நோய்செய் யாமை யுறுநோய் மறத்தல் - - சிறுபஞ்ச மூலம் 31
நேரிசை வெண்பா
உயிர்நோய்செய் யாமை யுறுநோய் மறத்தல்
செயிர்நோய் பிறர்கட்செய் யாமை - செயிர்நோய்
விழைவு வெகுளி யினைவிடுவா னாயின்
இழிவன் றினிது தவம்! 31
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
பிறிதோர் உயிர்க்குத் துன்பஞ் செய்யாமையும், தனக்குப் பிறரால் வருந் துன்பத்தை மறத்தலும், கோபத்தாலுண்டாகுந் துன்பத்தை பிறிடத்துச் செய்யாமையும், குற்றத்தைச் செய்யுந் துன்பத்தைத் தருகின்ற அவரிவும், கோபமும் ஆகிய இவற்றை விட்டுவிடுவானேயானால் அவனால் செய்யப்படும் தவமானது தாழந்ததன்று, இனிமையுடையதாகும்!
கருத்துரை: பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாமை முதலியன மேற்கொண்டு விழைவு வெகுளி முதலியவற்றை விட்டுவிடுவானாயின், அவன் செய்யுந் தவம் இனிமையுடையதே யாகும்.
உயிர்கொலை முதலியற்றை விட்டவனின் தவமே சிறப்புடையது! இதனை,
"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை,
அற்றே தவத்திற் குரு," 261 தவம்
என்ற வள்ளுவர் வாய்மொழியானும் தெளிக. விழைவும் வெகுளியும் பல குற்றங்களையும் துன்பங்களையும் விளைவிப்பனவாதலின், "செயிர் நோய் விழைவு வெகுளி" என்றார்!