பிறைத்தகை கொண்டன்று பேதை நுதல் - கார் நாற்பது 17
இன்னிசை வெண்பா
அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர லேறொடு பௌவம் பருகி
உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று பேதை நுதல்! 17
- கார் நாற்பது
பொருளுரை:
பேதாய்! மேகமானது கடல் நீரைக் குடித்து பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே பாம்புகளை வருத்தி பாறை கற்களையுடைய பக்க மலையின்மேல் நீரைச் சொரிந்து இருளை மிக்கது ஆதலால் உனது நெற்றி பிறை மதியின் அழகை கொண்டதே ஆகும்!
இறுவரை - பக்கமலை. சவட்டி - வருத்தி; இது ‘கடிசொல்லில்லைக் காலத்துப் படினே' என்பதனாற் போந்தது. உறைத்தல் - துளித்தல்; சொரிதல். கூர்ந்தன்று : கூர் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த உடம்பாட்டு வினைமுற்று. இருள் கூர்ந்தன்று : ஒரு சொல்லாய் வானம் என்னும் எழுவாய்க்கு முடிபாயிற்று.