துன்பம் தொலைந்து இன்பம் பெருக அன்பமைந்த எண்ணங்கள் புரிக - இதம், தருமதீபிகை 508

நேரிசை வெண்பா

துன்பம் அறவே தொலைந்து தொலையாத
இன்பம் பெருகநீ எண்ணினோ - அன்பமைந்த
எண்ணங்க ளாலுன் இதயம் இனிமையாம்
வண்ணம் புரிக வரைந்து. 508

- இதம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

துன்பம் அடியோடு தொலைந்து நீ என்றும் இன்பம் அடைய வேண்டின் உயிர்களிடம் அன்பு கூர்ந்து யாண்டும் உதவி செய்க என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், உய்தி நெறியை உணர்த்துகின்றது.

சீவர்கள் யாண்டும் சுகபோகங்களையே விரும்பி வருகின்றனர்; அவ்வாறு வரினும் எவ்வழியும் துன்பங்களே தொடர்ந்து நிற்கின்றன. துயரங்களுக்கு ஏதுவான செயல்களைச் செய்து வந்துள்ளமையால் உயிர்கள் அந்தப் பலன்களையே எங்கும் அனுபவிக்க நேர்கின்றன.

Man is born unto trouble. - Bible

மனிதன் துன்பங்களை அனுபவிக்கவே பிறக்கிருக்கிறான்' என எலிபாஸ் (Eliphaz) என்னும் பெரியார் இங்ஙனம் கூறியிருக்கிறார். அல்லல் நிலைகள் அறிய வந்தன.

செல்வம் முதலிய சிறந்த வசதிகள் நிறைந்திருந்தாலும் இழிந்த கவலைகளே யாண்டும் ஊடுருவியுள்ளன.

மானிடவாழ்வு அல்லல்களே நிறைந்திருத்தலால் அவலப் பிறப்பு என அனுபவங்களோடு சொல்ல நேர்ந்தது. வினைப் பயன்களின்படியே நினைப்பும் வாழ்வும் நேர்ந்து வருகின்றன.

கொண்ட மனைவி மக்கள் எனக் கண்கண்ட குழாங்களை எண்கொண்டு பேணி யாண்டும் உரிமை பாராட்டி மனிதன் உழைத்து வருகிறான் பொருள் போகங்களை அவர் அருந்தி மகிழும்படி வருத்தித் தொகுக்கிறான். உற்ற கடன்களை உரிமையாகச் செலுத்தி வருவது வினையின் விசித்திரங்களாய் விளங்கி நிற்கின்றன. வினைப்பயன் உள்ள அளவும் யாவும் நலமாய் மேவி வருகின்றன. அது முடிந்தால் எல்லாம் மாறிப் போகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு

மனைவியும் மகாரும் பொன்னும்
..மமதைசெய்(து) அமுதம் போல
நினைவினால் நேசம் செய்து
..நீணிலத் துள்ள எல்லாம்
அனையவர்க் காகச் செய்வர்:
..அருத்திகள் ஆன வெல்லாம்
வினையுற முடியும் காலை
..விடங்களின் மயக்கம் செய்யும். – ஞான வாசிட்டம்

தனது நல்வினை இருக்கும் வரையும் மனைவி, மக்கள் முதலிய எல்லாரும் நல்லவராய் இதம் புரிந்து வருவர்; அது தீர்ந்தால் யாவும் மாறாய் வேறுபடும் என்றதனால் உலக வாழ்வின் கூறுபாடுகளை உணர்ந்து கொள்ளலாம்.

தான் செய்த இதமே தனக்கு இன்ப நலங்களாய் வருகின்றன; அகிதம் துன்பத் திரள்களாய்த் தொடர்கின்றன.

துன்பம் அறவே தொலைய வேண்டுமாயின், துன்பமான நினைவுகளையும், செயல்களையும் மனிதன் அடியோடு ஒழித்து விட வேண்டும். அவை ஒழியாதவரை துயரமும் ஒழியாது. தொட்டு விதைத்தது துய்க்க வருகிறது.

They that plow iniquity, and sow wickedness, reap the same. - Job

'தீமையை உழுது தீங்கை விதைத்தவர் அதையே அறுக்கிறார்’ என்னும் இது இங்கே அறிய உரியது. எட்டி விதை போல் கெட்ட நினைவு கேட்டையே தருமாதலால் அதனை நட்டவர் நாசமடைகின்றார்.

அல்லலை விளைத்து அவலமடையாமல் நல்லதைச் செய்து ஒல்லையில் உயர்க என எல்லா நூல்களும் போதித்து வருகின்றன.

’இன்பம் பெருக நீ எண்ணினோ’ என இங்ஙனம் எதிர் முகமாய் வினவியது, மனிதன் கண்ணைத் திறந்து கதி காண வந்தது; யாரும் இன்பமே விரும்புகின்றனர்; யாண்டும் அதனை அவாவி அலைகின்றனர்; யாதும் கிடையாமல் அலமந்து தவிக்கின்றனர்; கண் குருடுபட்டுக் கடுவழி திரிகின்ற இந்தப் பிழைபாடு மண்ணுலக மருளாய் மருவியுள்ளது.

தான் இன்பத்தை நாடாமல் தன்னை அது நாடி ஓடி வரும் வழியை இதமுடையான் எளிதே செய்து கொள்ளுகிறான்.

அன்பமைந்த எண்ணங்களால் இதயம் புனிதமானால் அந்தப் புண்ணியவானுக்கு எல்லா இன்ப நலங்களும் தனி உரிமையாய் இனிதமைகின்றன.

பிறர்க்கு இதம் செய்து வருகிறவன் பேரின்ப நிலையைப் பெறுகிறான். அப்பேற்றை விரைவில் ஆக்கிக் கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Nov-19, 5:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 77

மேலே