புகழ் எனும் மாயை
ஈ ஒன்று அங்கும் இங்கும் பறந்துக் கொண்டிருந்தது. அது தனது அழகான இறக்கைகள அசைத்தபடி சில சமயம் தத்தி தத்தி தாவியது. இதனை தூரத்தில் இருந்து சிலந்தி ஒன்று தன் வலையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தது.மெதுவாக கீழே இறங்கியது தனது இழையை கொண்டு ஊஞ்சலாடியபடி ஈ இருந்த இடம் வந்தது.
ஈயின் அழகு அதனை கவர்ந்தது! ஈ யிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தது உன்னை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லையே எனக் கேட்டது.
என்னைப் பார்த்து நீ என்ன செய்யப் போகிறாய். நான் பறக்கும் ரகம் !நீ சதி எனும் வலையைப் பின்னும் ரகம் ! எனக்கும் உனக்குமான நட்பு என்பது கானல் நீர்தான் என்றது ஈ!
சிலந்தி ஈயிடம் கூறியது. நான் பின்னுவது சதி வலை அல்ல எனக்கான கூடு என்றது. சரி சரி என தலையை ஆட்டியது ஈ! உன்னை பார்த்ததில் இருந்து உன்னிடம் நட்பு பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது எனக் கூறியது! என் வீட்டிற்கு வாயேன் எனக் கூறியது! என் வீடு அவ்வளவு அழகு. சுழன்று செல்லும் படிக்கட்டுகள், அழகான வரவேற்பரை,அமர்ந்து சாப்பிட அருமையான சமையலறை மேலும் காற்றிலாடும் படுக்கை அறை எவ்வளவு சுகமாக இருக்கும் தெரியுமா வருகிறாயா என அழைத்தது.
ஈ அதன் வர்ணிப்பில் சிறிது தடுமாறியது. பிறகு சுதாரித்துக் கொண்டு உன் வீட்டிற்கு நான் வர முடியுமா நான் சிக்கிக் கொண்டு உயிரைத்தான் விடவேண்டும் உன் வலையில். என்ன அப்படி சொல்லி விட்டாய் உனக்கு எதுவும் நேராவண்ணம் கனகச்சிதமாக என் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்
என்றது சிலந்தி.
உன் வீட்டிற்கு வந்த யாரும் உயிரோடு திரும்புவதில்லையே நான் அது போன்ற நிகழ்வுகள் அதிகம் பார்த்திருக்கிறேன் என்றது ஈ. நான் வீட்டில் இல்லாதபோது தானாக சிக்கிக் கொள்பவர்களுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் நீயே சொல் என்றது சிலந்தி. உண்மைதான் நான் இன்னொரு நாள் வருகிறேன் எனக் கூறி ஈ அந்த இடத்தை விட்டுப்பறந்தது.
இரண்டு நாட்கள் கழித்து ஈ மீண்டும் அங்கே வந்தது. சிலந்தி ஈ யிடம் தோழி நலமா எனக் கேட்டது.
அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் அனைவரும்
நலம்தான் என்றது. என்ன இப்படிக் கூறிவிட்டாய் உனக்காக என் வீட்டில் உலர்ந்த திராட்சையையும், இனிப்பு பண்டங்களையும் சேமித்து வைத்துள்ளேன் என சிலந்திக் கூறியது.
ஈ சிரித்தது உன் வீட்டில் இருப்பது உலர்ந்த திராட்சைகளா அல்லது உலர்ந்த உடம்புகளா எனக் கேட்டது? அதற்கு சிலந்தி நான் அவ்வளவு மோசம் இல்லை எனக் கூறியது. உன்னைப் போன்றுதான் நானும் எனக் கூறியது. மனம் முழுவதும் வஞ்சத்தை வைத்துக்கொண்டு ஈயின் மனதை கரைக்கப் பார்த்தது.
ஈ யிடம் உனது கண்கள் வைரம் போல் அழகாக மின்னுகிறது ஆனால் என் கண்களைப் பார் இருளடைந்து கிடக்கிறது உன் இறக்கைகள் வானவில்லின் நிறம் போன்று மாறி மாறி ஜொலிக்கிறது.நீ தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது அவ்வளவு அழகாக இருக்கிறது. என் தலையை பார் நன்றாகவே இல்லை நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். சிலந்தியின் பேச்சில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த ஈ நான் வருகிறேன் உன் வீட்டிற்கு என்றது.முட்டாள்தனமான செயலை செய்தது புகழ் எனும் மாயையில்!
மனதிற்குள் விசிலடித்தபடி வஞ்சம் கொண்ட சிலந்தி தன் வீட்டிற்கு முன்பாக தாவி குதித்து சென்றது ஈ தனக்கு விருந்தாவதை எண்ணி மகிழ்ந்து முட்டாள் ஈ என மனதிற்குள் முணுமுணுத்தது.
ஈ சிலந்தியின் வீட்டில் காலை வைத்தது. சிலந்தி மிக வேகமாக ஈயை தன் கால்களால் கவ்வ அதனை இழுத்தது. அப்போது வேகமாக காற்றடித்தது சிலந்தியின் வலை அறுந்தது ஈ தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து பறந்தது தன் முட்டாள் தனமான செயலை எண்ணியது.இப்படி புகழ் போதையில் அடிமையாகி விட்டோமே என தன்னைத்தானே நொந்துக்கொண்டது.
மனிதர்களில் அநேகம்பேர் இதுபோன்றுதான் புகழ் எனும் மாயையில் சிக்கிவிடுகின்றனர்.அதிலிருந்த விடுபடுவதே சிறந்த நெறியாகும். காதில் வாங்குவதை காற்றோடு விட்டு விடுங்கள்! பிறர் நலனும் நம் வாழ்வும் நலமாகும்!!!