தனக்கொன்று உறுவுழி நிற்பது அறிவு – நான்மணிக்கடிகை 29

நேரிசை வெண்பா

குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்
செறிவுழி நிற்பது காமந் தனக்கொன்று
உறுவுழி நிற்பது அறிவு. 29

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

குழிக்கப்பட்ட இடத்தில் நிற்குமியல்புடையது தண்ணீர்; சான்றோர் பலரும் தன்னைப் பழிக்கும் பொழுது நிற்குமியல்புடையது தீவினை; தவநெறியைக் கெடுத்து தீய நெறியில் செல்லும் போது நிற்கச் செய்வது காமவியல்பு; அறிஞனொருவனுக்கு ஓரிடர் உண்டான காலத்தில் துணையாய் நிற்குமியல்பினது அவனது கல்வியறிவு ஆகும். .

கருத்து:

பள்ளமுள்ளவிடத்தில் நீர் நிற்கும்; பலரும் பழிக்குந் தீயோரிடத்திற் பாவம் நிற்கும்;

தவவொழுக்க மில்லான் பாற் காமம் நிற்கும்; இடர்வந்த போழ்து கற்ற அறிவு துணை நிற்கும்.

விளக்கவுரை:

குழித்துழி - பள்ளம்; குழித்த உழியென்க. பழித்துழி - தீயோர்.

‘அழித்து' ‘செறிவுழி' என்பன குறிப்பாற் றவக்கேட்டையும் மலச்செறிவையும் உணர்த்தின.

முதன்மூன்றடிகளில் வந்த ‘உழி' யென்னுமிடைச்சொல் இடப்பொருளையும், ஈற்றடியில் வந்தது காலத்தையுங் குறித்தன.

‘செறிவுழி' யென்பதில் வகரமெய் உடம்படுமெய்யன்று; ஏனையவற்றைப் போன்றதொரு சந்தியெழுத்து.

இறைவன் றிருவருளியல்புகளிற் பழகாதார்க்கு மலத்தினியல்புகளே அடிக்கடி துன்புறுத்தாநிற்கு மாதலின், ‘அழித்துச் செறிவுழி நிற்பது காம' மெனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-19, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 109

மேலே