நெஞ்சம் இனிதாயின் எல்லாம் இனிதாம் - விநயம், தருமதீபிகை 546

நேரிசை வெண்பா

நெஞ்சில் எழுந்த நினைவின் வழியோடி
அஞ்சு புலனும் அலையுமால் - நெஞ்சம்
இனிதாயின் எல்லாம் இனிதாம்; இலதேல்
துனியாம் எவையும் துயர். 546

- விநயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளத்திலிருந்து எழுகிற நினைவின் வழியே ஐம்புலன்களும் புறத்தே அலைந்து திரிகின்றன: உள்ளம் இனிதாயின் எல்லாம் இன்பமாம்; அது துனியாயின் யாவும் துயரமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உடல், புலன், மனம், அறிவு, ஆன்மா எனப் படிமுறைகள் அமைந்திருக்கும் உண்மை நுண்மையாக உணரவுரியன. முன்னுள்ள இரண்டும் பின்னுள்ள இரண்டும் நடுவில் நிற்கின்ற ஒன்றால் நெடிது அலைந்து வருகின்றன.

’உள்ளம் அசைய உலகம் அசையும்’ என்னும் பழமொழி உயர்ந்த ஞான நோக்கில் விளைந்துள்ளது. மனத்தின் வழியே அனைத்துலகங்களும் சுழன்று வருகின்றன.

மன வுணர்வினாலேயே மனிதன் உயர் நிலையை அடைந்திருக்கிறான். அத்தகைய மனம் நல்ல வழியில் பழகிவரின் அந்த மனிதன் எல்லா இன்ப நலங்களையும் எய்தி இனியவனாகிறான்;

அது தீய நிலையில் திரியநேரின் அவன் தீயவனாயிழிந்து கொடிய துன்பங்களை அடைந்து வருந்துகிறான்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

மக்கள் மானிடர் என்று மனத்தினால்
மிக்க மேன்மை விளங்கினர்; இல்லெனின்
பொக்க மேவும் பொறிகளோர் ஐந்தினால்
ஒக்கு மாவினை ஒத்துயர் வுற்றிடார். 1

கெடுக்க வல்லதும் கெட்டவர் தங்களை
எடுக்க வல்லதும் இம்மனம் என்றதை
அடக்க வல்லவன் ஐய பவக்கடல்
கடக்க வல்லவன் ஆவன் கடிதரோ. 2 பிரபுலிங்க லீலை

மாக்களினும் மக்கள் மேலானது மனத்தினாலேயாம்; அது மனிதனைக் கெடுக்கவும் வல்லது; எடுக்கவும் வல்லது, அதன் நிலைமையை உணர்ந்து நலமாக அதனை வசப்படுத்தினவர் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுவர் என இது உணர்த்தியுள்ளது.

மனத்தை இதமாக வசப்படுத்தாதவர் புலன்களுக்கு அடிமைகளாய் இழிந்து உழல்கின்றனர்; அதனை இனிமையாகப் பழகி வசம் செய்து கொண்டவர் அரிய பெரியோர்களாய் உயர்ந்து விளங்குகின்றனர்.

மனம் பொறிவழியே வெளியே ஓடின் மனிதன் சிறியனாய் இழிந்து சீரழிகின்றான்; அது அறிவின் வசமாய்த் திரும்பின் அவன் பெரிய மகானாய்ப் பேரின்பங்களைப் பெறுகிறான்.

மோக மயக்கங்களில் வீழ்த்தித் தேக போகங்களில் ஆழ்த்தி எவ்வழியும் மீளாதபடி மனித சமுதாயத்தை நீசப்படுத்தி மனம் நாசம் செய்து வருகிறது. நீசமான இந்த நாச நிலையை அறிந்து தெளிந்த போதுதான் மகான்கள் பரிந்து பதைத்து ஈசனை நோக்கி விரைந்து கதறுகின்றனர்.

விருத்தக் கலித்துறை

பொல்லாத யென்நெஞ்சம் ஓரைந்துபு லன்கள் தம்பால்
அல்லா(து) அரைமாத் திரையும்நின டிக்கண் அன்பாய்
நில்லா(து) இதற்கென்னே செய்கேன்?இதை நின்றி டென்றே
சொல்லாய் திருத்தில்லை யுள்மேவிய சோதி நீயே! - சாந்தலிங்கர்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

வாயிலோர் ஐந்திற் புலனெனும் வேடர்
வந்தெனை ஈர்த்துவெங் காமத்
தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்னச்
சிந்தைநைந்(து) உருகிமெய்ம் மறந்து
தாயிலாச் சேய்போல் அலைந்தலைப் பட்டேன்
தாயினும் கருணையா மன்றுள்
நாயக மாகி ஒளிவிடு மணியே
நாதனே ஞானவா ரிதியே. – தாயுமானவர்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

மாறிநின்(று) என்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத்(து) அமுதே
ஊறிநின்(று) என்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்!
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே. 1 - 22 திருவாசகம் - கோயில் திருப்பதிகம், எட்டாம் திருமுறை, மாணிக்க வாசகர்

புலன்களின் புன்மையும், அவற்றை அடக்கினவர் ஆன்ம நோக்கில் உயர்ந்து நலன் காணும் நன்மையும் இவற்றால் அறியலாகும். புலன்வழி இழிவது புலைவாழ்வாம்; அந்நிலை தெளிந்து திருந்துக.

‘நெஞ்சம் இனிதாயின் எல்லாம் இனிது ஆம்’ என்றது மனித வாழ்வின் இனிமை முழுவதும் மருவியுள்ள நிலையறிய வந்தது. மனம் புனிதமாயமையின் அந்த மனிதன் அன்றே பேரின்ப வாழ்வை அடைந்தவனாகிறான். தீய நினைவுகள் ஒழிந்த பொழுது அந்த மனம் தூயதாய் உயர்ந்து தூயனான பரமனைத் தோய்கிறது, அத்தோய்வால் உயிர் பரமானந்தத்தை அனுபவிக்கிறது.

மனதை இனிய வழியில் திருப்பி இன்ப நிலையை எய்துக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-19, 11:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே