உடலுக்கு உணவுபோல் ஒண்மதிக்குக் கல்வி - கல்வி, தருமதீபிகை 556
நேரிசை வெண்பா
உடலுக்(கு) உணவுபோல் ஒண்மதிக்குக் கல்வி
அடலுள் அருளும் அதனால் – மடமகன்று
தேசுடையர் ஆகிச் சிறந்து திறல்மிகுந்(து)
ஓசையுடன் நிற்பர் உயர்ந்து. 556
- கல்வி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உடலுக்கு உணவுபோல் உணர்வுக்குக் கல்வி உறுதி நலம் அருளுதலால் அதனையுடையவர் மடமையிருள் நீங்கி ஒளிமிகுந்து தெளிவமைந்து உயர்ந்து விளங்குவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது கல்வி உயிர் அமுதம் என்கின்றது.
உடல், உள்ளம், உணர்வு, உயிர் என்னும் இவை மனித உருவங்களாய் மருவியுள்ளன. மலரின் மணமும் நிறமும் போல உணர்வும் உள்ளமும் உயிரின் குண நீர்மைகளாய்க் குலாவி நிற்கின்றன. கல்வியால் அறிவு தெளிந்த பொழுது அது சிறந்து திகழ்கிறது.
அரிய உயிர் இனிது தங்கியிருத்தற்கு உரிய நிலையமாயுள்ளமையால் உடலை யாவரும் பிரியமாய் வளர்த்து வருகின்றனர். உடல் உணவால் நிலைபெற்றுள்ளது. உணவு இல்லையானால் நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் முதலிய தொழில்களை அது செய்யாது. உண்டியினாலேதான் உடல் உரம் அடைந்து எவ்வழியும் இனிது இயங்கி வருகிறது.
உணவு உடலுக்கு உறுதி புரிந்து வருதல் போல் கல்வி உணர்வுக்கு உறுதி பயந்து வருகிறது. கல்லாத அறிவு உண்ணாத உடல் போல் மெலிந்து தளர்ந்து யாதொன்றும் செய்ய இயலாமல் இழிந்து படுகிறது. உயிரின் உணவாயுள்ளமையால் கல்வி அமுதமென வந்தது.
கல்வி இல்லையானால் அந்த அறிவு புல்லிதாய்ப் பொலிவிழந்து போதலால் அது எவ்வழியும் இழிவடைந்து ஒழிகிறது.
கலை அறிவு தலையறிவாய்த் தழைத்து வருகிறது, அந்நிலையை நழுவவிடின் அது புலையாய் இழிந்து புன்மையுறுகிறது.
சத்துள்ள நல்ல உணவு உடலை வளர்த்து நலம் பல செய்கின்றது; அது போல் சாரமுள்ள இனிய கல்வி அறிவை வளர்த்து அரிய பல உறுதி நலங்களை உதவி வருகிறது.
மனிதன் எண்ணங்களால் உயர்கிறான். உயர்ந்த எண்ணங்களை இழந்தபொழுது அவன் இழிந்த மிருகமாய்க் கழிந்து படுகிறான். அறிவு நலம் குறைய அவல இழிவுகள் பெருகுகின்றன. மேலோர்களுடைய மேதா விலாசங்களும், எண்ணங்களும் நூல்களில் மேவியுள்ளன. அந்த நூல்களைக் கற்குந்தோறும் அவர்களுடைய அறிவு நலங்கள் கற்கின்றவர்களிடம் பெருகி அரிய கலைஞராய்ப் பெரிய அறிவாளிகளாய்ப் அவர் பெருமகிமை பெறுகின்றனர்.
கல்வி இவ்வாறு நல்ல பான்மை மேன்மைகளை நல்கி வருதலால் அதனை எவ்வழியும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் எல்லாரும் உரிமையோடு உரைத்து வருகின்றனர்.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே. 1
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. 2
நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழிருப் பவனே. 3
எக்குடி பிறப்பினும் யாவரே. ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வரு கென்பர். 4
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும். 5 - நறுந்தொகை
கல்வியின் பெருமையையும், கல்லாமையின் சிறுமையையும் பலவகையிலும் எடுத்துக் காட்டி அதிவீரராம பாண்டியன் இவ்வாறு அறிவு கூறியிருக்கிறார். அரச குலத் தோன்றலான இந்த மதிமான் மனித குலத்துக்கு மதியூட்டி வழிகாட்டியிருக்கும் முறை உவகை நிலையாய் ஒளி சிறந்து திகழ்கின்றது.
நேரிசை ஆசிரியப்பா
உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
5 ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
10 மேற்பா லொருவனு மவன்கட் படுமே. 183
நெடுஞ்செழியன் எனனும் பாண்டிய மன்னன் கல்வி நலனைக் குறித்து இவ்வண்ணம் பாடியிருக்கிறார். அரிய பொருள்களை வாரிக் கொடுத்தோ, உரிய ஏவல்களைச் செய்தோ, என்ன பாடு பட்டாவது மக்கள் படித்துக் கொள்ள வேண்டும் என்று இம்மன்னன் வடித்துச் சொல்லியிருப்பது நுனித்து நோக்கத்தக்கது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
1595
கைப்பொருள் கொடுத்தும் கற்றல்
..கற்றபின் கண்ணும் ஆகும்
மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின்
மெலிவிற்கோர் துணையும் ஆகும்
பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம்
புகழுமாம் துணைவி ஆக்கும்
இப்பொருள் எய்தி நின்றீர்
இரங்குவ(து) என்னை என்றான். 39
- கனகமாலையார் இலம்பகம், சீவக சிந்தாமணி
கல்வியினால் உண்டாகின்ற பலவகை நன்மைகளையும் எடுத்துச் சொல்லிச் சீவக மன்னன் இவ்வாறு கூறியிருக்கிறான்.
குடி சனங்கள் யாவரும் கற்றவர்களாயிருந்தால் நாடு சிறந்து விளங்கும்; தங்கள் ஆட்சியும் அமைதியாய் இனிது நடைபெறுமாதலால் அரசர்கள் கல்வியை யாண்டும் இவ்வண்ணம் விழைந்து பேணிப் புகழ்ந்து போற்றி வருகின்றனர்
கற்றவன் மனிதனாய் உயர்ந்து வருகிறான்.
கல்லாதவன் மிருகமாய் இழிந்து திரிகிறான்.
கல்லாத மக்களையுடைய நாடுகள் பொல்லாத காடுகளாய்ப் புன்மையடைந்திருக்குமாதலால் நாடு ஆள நேர்ந்தவர் எவரும் தம் குடிகளிடம் கல்வியைப் பல்வகையிலும் பரப்பி நன்மை செய்ய நேர்ந்தனர். கல்லாத மாக்களைக் கட்டி ஆள்பவன் ஆடு மாடுகளை மேப்ப்பவனைப் போல் பீடழிந்து பிழைபடுகின்றான்.
தன்பால் வாழும் மக்களுள் கற்றவர்களின் அளவைக் கொண்டே ஒரு நாடு நன்கு மதிக்கப்படுகின்றது. தற்காலத்தில் நம் நாடு கல்வியில் தாழ்ந்து நிற்கிறது.
படியாதவர் என்னும் பட்டதாரிகளாய்ப் பலர் நெடிதோங்கி யுள்ளனர். இந்த அவமானத்தை நீக்கி அறிவு நலம் ஆக்க நமது அரசாங்கம் இப்பொழுது முயன்று வருகிறது. முயற்சியும் பயிற்சியில் ஏறிப் பயனாய் உயர்ச்சியடைய வேண்டும்.
எழுத்தை அறிந்து கொள்ளுவது ஓரளவு கல்வியேயாயினும், உள்ளத்தைப் பண்படுத்துவதுதான் உண்மையான கல்வியாம். அந்தப் பண்பாடு பரம்பரையாகச் சிறிது மருவி வருதலால் படியாதிருந்தாலும் இந்நாட்டு மக்கள் இழிந்து ஈனமாய்ப் போய்விடாமல் மனிதராகவே மானமுடன் வாழ்ந்து வருகின்றனர். நல்ல கல்வியை ஒல்லையில் உதவி ஆட்சியாளர் மாட்சி புரியின் அது நாட்டுக்குப் பெரிய காட்சியாம்.
இராமன் ஆட்சியில் கல்வியும் செல்வமும் கனிந்திருந்த நிலையை நம் கவிச்சக்கரவர்த்தி சுவையாகச் சொல்லியிருக்கிறார்.
விருத்தக் கலித்துறை
கல்லாது நிற்பார் பிறரின்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவைவல்லரல் லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்த லாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ. 74
- நகரப் படலம், பால காண்டம், இராமாயணம்
இந்தக் கவியின் அழகைக் கண்டு கண்டு களிக்கின்றோம். கலையின் சுவையை உண்டு சுகிக்கின்றோம். சுவையைக் தாமாகவே நுகர வேண்டும்; பிறர் ஊட்டின் உருசி குறைந்து போம். உணர்வமுதங்களைக் கூர்ந்து கோக்கி ஓர்ந்து நுகர்க.
கற்றவர் கல்லாதவர் செல்வர் வறியர் என அயோத்தியில் எவரையும் தரம் பிரித்துக் காண முடியாது. எல்லாரும் கல்விமான்களே, எல்லாரும் செல்வர்களே. படியாதவர் ஒருவரும் இல்லையாதலால் படித்தவர் இவர் என யாரையும் குறித்துச் சொல்ல முடியவில்லை. எல்லாரும் கலையறிவில் தலை சிறந்தவராயுள்ளனர். கவி சிருட்டியில் காட்டியுள்ள இப்படி ஒரு நாட்டைப் பிரம சிருட்டியில் காண முயல்கின்றோம். கருதியலைகின்றோம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.