மலை என்றால் முத்தம்

மலை என்றால் முத்தம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மலைக்கோ அல்லது
குன்றுக்கோ
எப்போதேனும் வானவில்
குடை பிடிப்பதைப்
பார்த்திருக்கிறீர்களா ?

நான் பார்த்திருக்கிறேன்

ஓய்ந்த அந்தியில்
ஒரு நாள்
வானத்தின் வண்ணங்கண்டு
சிலிர்த்துச் சிறகுலர்த்த
தரையிறங்கிய தேவதை
இரு முலையும்
வானத்தின்
மார்பில் பதிய
எச்சில்
முத்தமிட்டாள் உச்சியில்
வானவில் வந்தது

சிலிர்த்த வானில்
துளிர்த்தது மழை

வானவில்லின்
வண்ணங்களைக்
கரைத்திறங்கிய மழை
நதியாகி

வானுக்கொரு நிறம்
கடலுக்கொரு நிறம்
மண்ணுக்கொரு நிறம்
மரத்துக்கொரு நிறம்
பூவுக்கொரு நிறமென்று

பங்கிட்டது போக
மீந்தவை
பகலிரவானது

தேவதையோடு
நனைந்து
சிலிர்த்துச் சிறகுளர்த்திய
பறவைகள்
திட்டுத்திட்டாய் நின்ற
எருக்கம் பஞ்சு மேகங்களை
ஊதிப்பறக்கவிட்டு
விளையாடின

வனத்தின் தலைதுவட்டித்
துவண்ட காற்று
விண்ணேறி மேகம் பிடித்து
உள்ளங்கைக்குள்
நாலாக எட்டாக
பதினாறாக மடித்து
கைக்குட்டையாக்கி
துடைத்தது
மழையில்
வண்ணம் களைந்து
நின்ற வானவில்லை

வானின்று
அறுந்தது வீழ்ந்தது
தேவதையின்
உருவமற்ற முத்தம்

அன்றுதான்
உருவம் தந்து
முத்தத்தை
மலையெனச் சமைத்தாள்
தேவதை ...

எழுதியவர் : முகிலன் (29-Jan-20, 10:22 pm)
சேர்த்தது : முகிலன்
Tanglish : pala endraal mutham
பார்வை : 244

மேலே