ரத்த வேட்டை- இறுதிப் பகுதி

அந்த பிசாசு “வா..ராஜா..வா..” என்று விட்டு குலைநடுங்கும்படி சிரித்தான். ராபினும் சூசையும் திகிலடைந்து ஒரு ஓரத்தில் ஒன்டினர். எனக்கு மனதில் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாது தைரியமாக நின்றேன்.

“யார் நீ? நீ ஏன் இப்படி ஆன? என்ன எப்படி உனக்கு தெரியும்?” என்றேன்.

“ஹா.. ஹா... நான் என்னோட கதைய சொல்லனுமா.? ஹா.. ஹா.. சொல்றேன் கேளு.”

பிசாசு தன்னுடைய கதையை சொல்லத் துவங்கியது.

“ என்னோட பெயர் வீரபாகு. இந்த இடம், இந்த காடு முன்னாடி பெரிய நகரா இருந்துச்சு. அந்த நகரத்தை ஆட்சி செஞ்சவர் தான் எங்க அப்பா இளங்கோ. எங்க அப்பாவோட ஆட்சில மக்கள் நல்லாவே வாழ்ந்தாங்க. எங்க அப்பாவும் சிறப்பா ஆட்சி செஞ்சார். நாங்களும் சந்தோசமா இருந்தோம். ஒருநாள்..

எங்க அப்பாவைப் பார்க்க பெரிய கூட்டம் வந்தது.

“யார் நீங்கள் எதற்காக இங்கு கூட்டமாக வந்துள்ளீர்கள்.?” என்றார் மன்னர் இளங்கோ.

அதற்க்கு அவர்கள் “இந்த நகரும் இந்த அரண்மனையும் எங்கள் பூர்வீக சொத்து. அதை எங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள்.” மன்னர் இளங்கோ அதிர்ச்சி அடைந்தார் கூடவே கோபமும் அடைந்தார்.

“இது என் தந்தை ஆண்ட நகரம். இதில் வேறு யாருக்கும் உரிமையில்லை. இங்கிருந்து போய் விடுங்கள்.”

“அய்யா.. உங்கள் தந்தையே எங்கள் முன்னோரை ஏமாற்றி இதை அகபரித்துக் கொண்டார். அந்த விசயமே தற்போது தான் எங்களுக்கு தெரிந்தது. அதனால் எங்களிடம் திருப்பி தந்து விடுங்கள்.”

“என்னிடமே வந்து இப்படி பேசுவதற்கு என்ன துணிச்சல் உங்களுக்கு. வீரர்களே இவர்களை அடித்து விரட்டுங்கள்.” என்று ஆணையிட்டார். வீரர்கள் அவர்களை அடித்து உதைத்து அவமானப்படுத்தி அப்புறப்படுத்தினர். அதனால் அவர்கள் நெஞ்சில் வஞ்சம் புகுந்தது.

“மயிலே.. மயிலே இறகு போடுன்னா போடுமா.? போடாது. அந்த ஆளைத் தீர்த்துக் கட்டிட வேண்டும்.” என அவர்கள் தங்களுக்குள் உறுதி செய்துக் கொண்டனர். மக்களிடம் தாங்கள் ஏமாற்றப்பட்டதை சொல்லி விளக்கி கூட்டம் போட்டார்கள். மக்கள் அவர்கள் வாய்ச் சாமர்த்தியத்தில் ஏமாந்து போய் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர். மக்கள் திரளாக அரண்மனையை நோக்கி வர ஆரம்பித்தனர்.

இந்த செய்தி எனது தந்தைக்கு தெரிந்தது. கொலைக்கும் துணிந்து விட்டார்களா.? என் தந்தை யோசனை செய்தார். என்னை அழைத்தார்.

“மகனே வீரபாகு, எதிரிகள் நம்மைக் கொன்று விட்டு நம் நகரத்தை அபகரிக்க முடிவு செய்துள்ளார்கள். மக்கள் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது.”

“தந்தையே இப்போது நாம் என்ன செய்வது.? இத்தனை நாட்கள் தங்கள் ஆட்சியில் சுகபோகங்களை அனுபவித்து விட்டு இப்போது தங்களுக்கு எதிராகவே திரும்புவதா.?” நாம் இதை மன்னிக்கவே கூடாது தந்தையே.” நாம் அவர்களை வெட்டி வீச வேண்டும். உத்தரவு கொடுங்கள் தந்தையே.”
“வேண்டாம் வீரபாகு.. மக்களைப் பற்றி உனக்குத் தெரியாது. மக்கள் ஆதரவை இழந்து விட்ட எந்த மன்னனும் அரியணையில் வெகுகாலம் அமர்ந்திருக்க முடியாது. மக்கள் ஆதரவை இழந்து விட்டால் நம் வீரர்களே நமக்கு எதிராக திரும்பி விடுவார்கள். நாம் நம் வீரர்களை நம்பவும் முடியாது. அவர்கள் நெருங்கி விட்டனர். வெளியே கூச்சல் குழப்பங்கள் தென்படுகின்றன. எந்த நேரத்திலும் அவர்கள் உள்ளே நுழைந்து விடக் கூடும். நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவதை விட உன்னை முதலில் பாதுகாக்க வேண்டும் மகனே. என்னோடு வா.” என்று ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். நிலவறையின் மரக்கதவைத் திறந்தார். உள்ளே படிக்கட்டுகள் தென்பட்டன.

“வீரபாகு நீ இந்த சுரங்கத்துக்குள் பதுங்கிக்கொள். எனக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும் நீ இதிலிருந்து வெளியே வரக்க கூடாது. நான் மக்களை சமாதானப்படுத்தச் செல்கிறேன்.” என்று கூறிச் சென்றார். கொந்தளித்துக் கொண்டிருந்த மக்கள் முன் சென்று அவர்களை சமாதானப்படுத்தி விட முயன்றார். மக்கள் சமாதானமாகவில்லை. அவர்கள் என் தந்தையை தாக்க முனைந்தனர். என் தந்தை தப்பி ஓட முயன்றார். முன்பு என் தந்தையிடம் உரிமை கேட்டு வந்த கும்பல். என் தந்தையை துரத்தியது.

“அதோ ஓடுறான். அவனை உயிரோடு விடக் கூடாது.” அவர்களில் ஒருவன் பாய்ந்து என் தந்தையின் கழுத்தை கைகளால் சுற்றி வளைத்தான். பின் கரகரவென கத்தியால் கழுத்தை அறுத்தான். என் தந்தையின் கழுத்து துண்டாகியது. அதை பந்து போல எத்தி அவர்கள் விளையாடினார்கள். என் தந்தையை போன்ற நல்ல மனிதருக்கு இப்படியொரு துர்மரணம் சம்பித்திருக்க வேண்டியதில்லை.

நிலவறையில் அடைபட்டிருந்த எனக்கு இது எதுவும் தெரியாது. என் தந்தை இன்று வருவார். நாளை வருவார். என நம்பிக் காத்திருந்தேன். ஆனால் என் தந்தை வரவே இல்லை. உள்ளே உண்ண உணவும் இல்லை, அருந்த நீரும் இல்லை. எனவே நாளாக நாளாக என் உடல் துரும்பானது. அதிகப்படியான பசியும், தாகமும் என்னை மயங்கச் செய்தன. மயக்கத்திலே என்னுயிர் பிரிந்து போனது. அது முதல் நான் பேயாக அலைந்து கொண்டிருக்கிறேன். என் தந்தையின் துர்மரணத்திற்கும் என்னுடைய மரணத்திற்கும் காரணமானவர்களை நான் பழி வாங்க விரும்பினேன். எதிரிகள் ஒவ்வொருவரின் ரத்தத்தையும் குடித்து பழி வாங்கினேன். ரத்தம் குடிக்க குடிக்க எனது சக்திகள் அதிகமானது.

மிகுந்த வருடங்களுக்கு முன்பு சில பாதிரியார்கள் என் சக்தியைக் குறைத்தனர். எனவே என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே இங்கு நான் அடைபட்டுக் கிடந்தேன். இங்கே நுழைந்த ஜூலியின் ரத்தம் என்னை கிளர்ந்து எழச்செய்தது. அவளை விரட்டி விரட்டி அவள் ரத்தத்தைக் குடித்தேன். இப்போது உங்களுடைய ரத்தத்தைக் குடிக்கப் போகிறேன். ஹா... ஹா..ஹா..” அவன் பயங்கரமாக சிரித்தான்.

“இல்ல.. நாங்கள் அதுக்கு அனுமதிக்கப் போறதில்ல. உன்ன மாதிரி துர்ஆத்மாக்களை அழிக்கதான் நான் இங்க வந்திருக்கேன்.” என்றபடி அந்த பிசாசை நெருங்கினோம். அந்த பிசாசு கைகளை வானை நோக்கி உயர்த்தியது. உடனே அந்த அறையில் படுபயங்கரமாக காற்று வீசியது. நாங்கள் மூவரும் ஆளுக்கு ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்டோம். அவனை நெருங்க எவ்வளவோ முயற்சித்தும் எங்களால் முடியவில்லை. அது கைகளை வீசும் போதெல்லாம் நாங்கள் ஆளுக்கொரு மூலையில் பறந்தோம்.

அதன் சக்தியை அப்போதுதான் நான் உணர்ந்தேன். நாங்கள் மூவரும் சோர்ந்து போனோம். என்னையும் ராபினையும் தூக்கி வீசிய அந்த பிசாசு சூசையை பிடித்துக் கொண்டது. அவன் ரத்தத்தை குடிக்க ஆரம்பித்தது.

“ராபின் காப்பாத்து.. சார் காப்பாத்துங்க.” என்று சூசை எங்களை நோக்கி கதறினான். எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அந்த பிசாசு தொடர்ந்து சூசையின் ரத்தத்தை குடித்தது. சூசை கைகால்களை உதறினான். ஒரு கட்டத்தில் அவன் அசைவற்றுப் போனான். அவன் ரத்தத்தைஎல்லாம் குடித்த அந்த பிசாசு அவனை வெறும் சக்கையாக தூக்கி வீசியது. அதன் சக்தி இப்போது முன்பை விட கூடியது தெரிந்தது. அடுத்து அது என்னருகில் வந்து என்னைப் பிடித்துக் கொண்டது. அவ்வளவுதான் என் கதை முடிந்தது. நான் என் கண்களை மூடிக் கொண்டேன். பிசாசு அதன் கூரியப் பற்களை என் கழுத்தருகே கொண்டு வந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

வயோதிக்கத்தால் நடக்கவே முடியாமல் இருந்த பாஸ்டர் விக்டர் அங்கு தள்ளாடியபடியே வந்து சேர்ந்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவர். கொண்டு வந்திருந்த பைபிளை திறந்து வசனத்தை வாசித்தார்.

“சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக.” சொல்லி விட்டு உரத்தக் குரலில் ஜெபம் செய்யத் தொடங்கினார்.

அவர் ஜெபம் செய்யச் செய்ய அந்த பிசாசு கோபமுற்று என்னைத் தூக்கி வீசியது. பாஸ்டர் விக்டரை நோக்கி கையை வீச அவர் காற்றில் பறந்து போய் சுவற்றில் மோதி விழுந்தார். அப்படியும் அவர் ஜெபம் செய்வதை நிறுத்தவில்லை. தொடர்ந்து ஜெபம் செய்தார். அந்த பிசாசு தொடர்ந்து அவரைத் தாக்கியது. அவருக்கு ரத்தக் காயங்கள் உண்டானது. ஆனாலும் அவர் நிறுத்தாமல் ஜெபத்தை தொடர்ந்தார். அந்த போராட்டமான கட்டத்தில் எங்களால் அவருக்கு உதவவே முடியவில்லை. தனியாளாக அவர் அந்த பிசாசிடம் போராடினார். ஒரு கட்டத்தில் அறையில் வீசிய பயங்கரக் காற்று நின்று போனது. பிசாசின் சக்திகள் குறைவது தெரிந்தது. அந்த பிசாசு இப்படியும் அப்படியுமாக தள்ளாடியது. அதைக் கண்ட பாஸ்டர் என்னை நோக்கி சிலுவையையும் சுத்தியலையும் தூக்கி வீசினார்.

“ராஜா சிலுவையை அந்த சாத்தானின் நெஞ்சில் இறக்கு.” நான் உத்வேகம் பெற்றேன். சிலுவையையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டேன். அந்த பிசாசை நோக்கி சென்றேன். அது கடைசி முயற்சியாக என்னை தாக்கியது. நான் தூரப் போய் விழுந்தேன். அதன் சக்தி முன்பு போல அவ்வளவு வலுவாக இல்லை என்பதை உணர்ந்தேன். சமாளித்து மறுபடி எழுந்து அதை நோக்கிப் போனேன். அந்த பிசாசு தனது சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. நான் பாய்ந்து அதன் நெஞ்சில் சிலுவையை இறக்கினேன்.

அந்த பிசாசு “ஓ...வென ஓலமிட்டது. நான் பலங்கொண்ட மட்டும் சுத்தியலை சிலுவையின் தலையில் அடித்தேன். “நங்....” பிசாசு பயங்கரமாக கதறியது. சுற்றிச் சுழன்றது. குறுகிப் போய் தரையில் விழுந்தது. பின் சிறிது சிறிதாக உடல் கருத்து, சாம்பலாகிப் போனது. அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது. பலரின் ரத்தத்தைக் குடித்த அந்த பிசாசு அழிந்து போனது.

பாஸ்டர் விக்டர் தொய்ந்து போய் தரையில் விழுந்தார். நான் ஒடி அவரின் அருகில் சென்றேன்.

“பாஸ்டர்.. பாஸ்டர்..” அவர் கண்களைத் திறந்தார்.

“பாஸ்டர் நாம அந்த பிசாசை அழிச்சுட்டோம்.” அவர் புன்னகைத்தார். என் நெற்றியில் சிலுவைக் குறி வரைந்தார்.

“கர்த்தரின் ஆசிர்வாதம் என்றைக்கும் உனக்கு உண்டு.” அவர் கண்கள் நிரந்தரமாக மூடின. அவரின் ஒரு கை புனித பைபிளைப் பற்றிருந்தது.

பாஸ்டர் விக்டரின் இறுதி ஊர்வலம் முடிந்து கல்லறையில் அவரின் உடல் இறக்கப்பட்டது. நான் அதனுடன் அவர் மிகவும் நேசித்த அவருடைய மகள் ஜூலியின் புகைப்படத்தை வைத்தேன்.

ஆமென்...

எழுதியவர் : அருள் ஜெ (30-Jan-20, 12:33 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 123

மேலே