நினைத்தாலே இனிக்குதே

ஆற்றங்கரை ஓரத்திலே
அழகழகாய் தென்னைமரம்
ஆளுக்கொரு மரம்பிடித்து
அனுதினமும் ஆர்ப்பாட்டம்
ஆற்றில் நிதம்இறங்கி
ஆட்டங்கள் போட்டுவிட்டு
அம்மா அழைத்தப்பின்னும்
ஆளுக்கொரு திசைபயணம்
அக்காலம் நினைத்தாலே
அத்தனையும் இனிக்கிறதே...
பிள்ளைப் பருவமதை
பெற்றிடவே ஏங்கிடுதே...

பள்ளியில் கொண்டாட்டம்
படிக்கையில் திண்டாட்டம்
ஆசிரியர் அழைக்கையிலே
அக்கணமே பிடிஓட்டம்
விளையாட்டு அதில்நாட்டம்
வீதிதோறும் தோழர்கூட்டம்
விண்ணைப் பிடிக்க எண்ணி
விருப்பமுடன் பலதிட்டம்
கவலையே இல்லாத
கள்ளமில்லா பிராயத்தை
எண்ணி எண்ணி ஏங்குகிறேன்...
ஏக்கத்துடன் தூங்குகிறேன்...

கல்லூரிப் பருவமதில்
கலகலப்பில் காலங்கள்
காளையர் கன்னியரை
கவர்ந்திழுக்க காதல்கள்
கல்லும் இலகுவான
கற்கண்டு மர்மங்கள்
கற்பனையில் உலா வந்த
காந்தக் காவியங்கள்
கவர்ந்த மங்கையர்க்கு
காத்திருந்த நேரங்கள்
கண்மூடித் திறப்பதற்குள்
கனவான மாயங்கள்...

வாழ்க்கைப் பயணத்தை
துவங்கிட்ட நேரத்தில்
வந்தவர்கள் சென்றவர்கள்
சொல்லிச் சென்ற பாடத்தில்
புத்தனும் புரியவில்லை
புதிர்களும் தீரவில்லை
கவலைக்கு பஞ்சமில்லை
கண்களும் துயிலவில்லை
அக்காலம் நினைத்தாலே
அத்தனையும் இனிக்கிறதே...
பிள்ளைப் பருவமதை
பெற்றிடவே ஏங்கிடுதே...

எழுதியவர் : திருமகள் மு (5-Feb-20, 7:59 pm)
பார்வை : 127

மேலே