தேவதை

மேகமில்லா நடுப்பகல்
உச்சிவெயிலின்
பேய்ப்பிடியில் வெறுங்காலில்
நடந்திருந்த நாளொன்று..
மரத்துப்போன பாதமும்
பாதத்திடை வெடிப்பும்
செருப்பென்ற ஒன்றினையே
அறிந்திடாத காலமது..
மேட்டாங்காட்டுப்புழுதி பட
ஒற்றைப்பனை நிழல்தேடி
கால்கடுக்க ஓடிச்சென்று
ஓய்வெடுத்த நேரமது..
தூரத்துக்கானல் நீரில்அலையடிக்க
அதில்தெரியும் பொய்பிம்பம்
கானல்நீரின் அலைநடுவில்
நீ வரத்தான் காத்திருந்தேன்..
வெள்ளைத்தோலாய் நிறமில்லை
அசரடிக்கும் அழகுமில்லை
மலரெடுத்த வாசமில்லை
ஆனாலும் தேவதைதான் அன்பேநீ..
நீர்தேடிப்போவதுதான்
தினமுந்தன் வேலையடி
ஊற்றெடுக்கும் மணல் பறிக்க
நான் கூட வந்தேனடி
வீசும்காற்றில் வெயில்கலந்து
விஷமாக வீசிடவே
வேர்த்திருந்த முகத்தினிலே
கருமைகொஞ்சம் கூடுதடி..
அலங்கார பொம்மையென
சடைபின்னிய கூந்தலென
அழகான ஆடையென
எதுவுமில்லா தேவதை நீ..
இப்போதுன் நினைவுவர
எங்கேநான் உனை ரசிப்பேன்
ஒற்றைப்பனை நிழலினில்தான்
ஓய்வெடுத்தாய் இறுதியிலே..

Rafiq

எழுதியவர் : Rafiq (8-Feb-20, 11:18 am)
பார்வை : 449

மேலே