ஒரு வெண்பாவில் ஐந்து டு

"ஒரு வெண்பாவிலே ஐந்து 'டு வருமாறு பாடுக’ என்றார் ஒருவர். பொருள் அமைதி சிறப்பாக இருத்தல் வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நேரிசை வெண்பா

ஓகாமா வீதொடுநேர் ஒக்க டுடுடுடுடு
நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய்
எடுப்பர் நடமிடுவர் ஏறுவரன் பர்க்குக்
கொடுப்ப ரணிவர் குழை. 26

– கவி காளமேகம்

என்ற உடனே பாடினார் காளமேகம்.

பொருளுரை:

இளமரச் சோலைகள் நிறைந்த திருக்குடந்தை நகர்க்கு இறைவரான சிவபெருமான், ஓ, கா, மா, வீ, தோ என்னும் ஐந்து எழுத்துக்களையும் டுடுடுடுடு என்னும் ஐந்து எழுத்துக்களுடனும் முறையே பொருந்துதலால் (வரும் சொற்கள் ஓடு, காடு, மாடு, வீடு, தோடு) அழகாகத் திருவோட்டினை ஏந்துபவர், காட்டிடத்தே நடம் புரிபவர், மாடாகிய வெள்ளேற்றின் மீது ஏறுபவர், அன்பர்க்கு வீடாகிய முக்தியைக் கொடுப்பவர் குழையாகிய காதணியைக் காதிலே தரிப்பவர் ஆவர்.

"நாகார்’ என்பதற்குச் சங்கினம் நிறைந்த' எனவும் சொல்லலாம். நாகேசுவரரைக் குறிப்பதாயின் நாகங்கள் ஆர்ப் பரிக்கும் எனலும் பொருந்தும் அது, இறைவன் நாகாபரணனாக விளங்குதலால் என்றும் பொருளாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-20, 7:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே