கற்றசில கொண்டு களி விண்ணூன்றி நிற்கின்றாய் - கல்விச் செருக்கு, தருமதீபிகை 581

நேரிசை வெண்பா

இறைவன் புதல்வன்,நீ எவ்வளவோ கல்வி
பெறுதற்(கு) உரிய பெரியன் - முறையிதனைக்
கண்ணூன்றி நோக்காமல் கற்றசில கொண்டுகளி
விண்ணூன்றி நிற்கின்றாய் வீண். 581

- கல்விச் செருக்கு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நீ இறைவனுடைய அருமை மகன்; எவ்வளவோ கல்வியறிவைப் பெறுதற்குரிய பெரியவன்; இந்த உண்மையை உணர்ந்து பாராமல் சிறிது கற்றதை நினைந்து வீணே பெருஞ்செருக்கு மண்டி நிற்கிறாய்; அந்நிலை இழிவான பிழைபாடுடையது என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் கல்விச் செருக்கிலிருந்து நெஞ்சம் தெளிய வேண்டும் நிலைமையை உணர்த்துகின்றது.

உலகில் தோன்றியுள்ள சீவகோடிகள் அளவிடலரியன. எல்லையில்லாத அந்த உயிரினங்களுள் மனித இனம் உயர்நிலையில் தலைசிறந்து நிற்கிறது. பலவகை இயல்புகள் நன்கு படிந்திருத்தலால் இவ்வுயர்வுகள் பொங்கி எழுந்துள்ளன. உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்தாமையால் அவை வறிதே கழிந்து ஒழிந்து போகின்றன. நாடிச் செய்யாத காரியம் பேடி கை வாள்போல் பீடிழந்து படுகின்றது. தன் கடமையையும் நிலைமையையும் உணர்ந்து ஒழுகுகின்றவன் உறுதி நலங்களை அடைந்து கொள்ளுகின்றான். அவ்வாறு உணராதவன் உயர்ந்த பலன்களை அடையாமல் இழிந்துபடுகிறான். உண்மை உணர்வு நன்மை தருகிறது.

எதையும் நுண்ணிதாக எண்ணியுணர்ந்து கொள்ளும் கண்ணியமுடைய மனிதன் கதிநிலையை அறியாமல் மதிமருண்டு திரிவது விதிவிளைவாயுள்ளது. உண்மையை ஊன்றி உணராமையால் புன்மைகள் சூழ்ந்து அவனைப் புலைப்படுத்தி விடுகின்றன. விரிந்த நெஞ்சமும் பரந்த நோக்கமும் மனிதனை உயர்ந்தவன் ஆக்குகின்றன; சின்ன எண்ணங்கள் சிறுமைப்படுத்துகின்றன. நினைவின் வழியே நிலைமைகள் எழுகின்றன.

கல்வியில் உயர்ந்தவன், செல்வத்தில் சிறந்தவன், அதிகாரம் ஆற்றல்களுடையவன் என இன்னவாறான மனத்திமிரோடு தன்னைப் பெரிதாக எண்ணித் தலைநிமிர்ந்து திரிவது பிழைபாடுகளாதலால் அந்த இழி நிலைகள் விழி தெரிய வந்தன.

கற்ற சில கொண்டு களி ஊன்றி நிற்கின்றாய்! என்றது உள்ளக்களிப்பின் உளவை நோக்கி வந்தது.

நல்ல நிலைகளில் மலர்ந்து எழுகின்ற உள்ளக் கிளர்ச்சிகள் உவகை மகிழ்ச்சி என்று சொல்லப்படுகின்றன. களிப்பு என்பது அவற்றின் வேறுபட்டது. புல்லிய வழிகளில் பொருந்தி வருதலால் இது புன்மையாய் நின்றது. தனது கல்வியறிவைப் பெரிதாக எண்ணி உள்ளம் தருக்கி ஒருவன் பிலுக்கி நிற்பது மிகவும் அறியாமையாய் அவலமடைகின்றது.

உண்மையான அறிவு விரிந்த காட்சியுடையதாதலால் அது அடக்கமாய் அமைந்துள்ளது. குறுகிய நோக்கமாய்ச் சிறுமை அடைந்துள்ள அறிவு பெருமையாய்ப் பிலுக்கி நிற்கின்றது. பிழைபாடான விளைவு பழியோடு வருகிறது.

அடக்கம் பெருந்தன்மையாய் மகிமை பெறுகின்றது
செருக்கு சின்னத்தனமாய்ச் சிறுமை உறுகின்றது.

அமைதியாய் அடங்கியுள்ளவன் பெரிய மனிதனாய் அரிய மேன்மைகளை அடைகிறான். துடுக்காய்ச் செருக்கித் திரிபவன் சின்ன மனிதனாய்ச் சீரழிந்து இழிகின்றான். உள்ளத்தில் ஊனம் படிந்த பொழுது வெளியே ஈனங்கள் படிகின்றன. இளிவுகளை விளைத்துக் களி மிகுந்து திரிவது பழி நிலையமான முழு மடமையாம். பெருமை விளைவில் பிழையாய்ச் சிறுமை விளைகிறது.

நிலைமைகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ளாமையால் மனிதன் தாழ்ந்து போகிறான். தன்னை உண்மையாக உணர்ந்து கொண்டவன் உயர்ந்த நன்மைகளை விரைந்து காண்கிறான்,

இறைவன் புதல்வன்,நீ எவ்வளவோ கல்வி
பெறுதற் குரியபெரி யன்.

மனிதன் உரிமையோடு உணர்ந்து கொள்ளவேண்டிய உண்மையை இது உணர்த்தியுள்ளது. கடவுளுடைய பிள்ளை என்று தன்னை மனிதன் தெளிந்து கொள்ளின், எவ்வளவு மகிமைகளை அவன் அடைந்து கொள்ளுவான்! உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமையால் புன்மைகளில் இழிந்து புலையாடித் திரிகின்றான். உயர் குலத் தலைமையை மறந்து போய் இழி புலை நிலைகளில் அழுந்தி உழலுவது பழி துயரங்களாய்ப் படிந்து வருகிறது. விழுமிய உண்மைகளை விழி திறந்து காணாமையால் மனிதன் அழி துயரங்களில் இழிந்து அலமருகின்றான்.

இறைவன் எல்லாம் அறிய வல்லவன்; அவனுடைய புதல்வனான நீயும் யாவும் அறிய வுரியவன். அரிய பெரிய அந்த நிலையிலுள்ள நீ சிறிது கற்றதைப் பெரிதாக நினைந்து செருக்குவது எவ்வளவு பேதைமை? எத்துணை இழிவு! உய்த்துணர வேண்டும்.

பரமான்மாவாகிய அந்தப் பெருஞ் சோதியிலிருந்தே இந்தச் சீவான்மா வெளிவந்துள்ளது. இவ்வுண்மையை விழி திறந்து நோக்கி விழுமிய பண்புடன் வாழுக. பெரிய இடத்துப் பிள்ளைநீ! சிறிய புன்மையை ஒருவி பெரிய தன்மையை மருவுக என்றும், உள்ளச் செருக்கு எள்ளலை விளைத்து இழிநிலையில் தள்ளி விடுமாதலால் அந்தப் பழிநிலை படியாமல் பாதுகாத்து ஒழுகுக என்றும் கவிராஜ பண்டிதர் கூறுகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Feb-20, 8:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே