நல்லோர் திருவுடையராய்ப் பல்வழியும் நன்மை படிகின்றார் – செல்வத் திமிர், தருமதீபிகை 591

நேரிசை வெண்பா

செல்வமுறின் நல்லோர் திருவுடைய ராய்நின்று
பல்வழியும் நன்மை படிகின்றார் – புல்லரோ
உள்ளம் செருக்கி உறுதி நலமிழந்து
எள்ளல் உறுவர் இழிந்து. 591

- செல்வத் திமிர், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நற்குணமுடைய நல்லோர் பொருட்செல்வம் அடைந்தால் எல்லார்க்கும் இனியராயிருந்து பலவழிகளிலும் நன்மைகளைச் செய்கின்றார். தீயமதி படைத்த புல்லர்களோ பொருள் பெற்றால் உள்ளம் செருக்கி நற்செயல்களைச் செய்யாமல் பிறரால் இகழப்பட்டு கேவலப்படுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக வாழ்வு பொருளால் நடந்து வருதலால் அதனை மனிதன் விழைந்து ஈட்டி உவந்து பேணி வருகிறான். யாவரும் விரும்பிப் போற்றி வர பொருளுக்குப் பெருமதிப்பு உண்டாயிற்று. பொருளைப் பெற்றவர் தங்களைப் பெரும் தனவந்தராக எண்ண நேர்ந்தனர். அத்துடன் மடமையும் புன்மையும் மருவி வளர்ந்த போது செருக்கு, மமதை, இறுமாப்பு, கர்வம், திமிர் என்று அவை வெளிப்படலாயிற்று. தரும நீர்மைகளை வளர்த்து இருமையும் பெருமை தருவதற்கு உரிய செல்வம் சேர்ந்த இடத்தின் தீமையால் இச்சிறுமைகளை விளைத்து நிற்கலாயிற்று.

பெருந்தன்மையான நல்ல குல மக்களிடம் பொருள் சேர்ந்தால் அவர் சிறந்த குண நீர்மைகளோடு எல்லார்க்கும் இனியராய் இதம் புரிந்து வருவர். புல்லரிடம் பொருள் சேர்ந்தால் தம்மை உயர்ந்தவராக எண்ணி இறுமாந்து செருக்குடன் திரிகின்றனர். சேர்க்க இனத்தின் சிறுமையால் அரிய செல்வமும் அவலமடைய நேர்ந்தது. பாத்திர பேதங்களால் பழி துயரங்கள் விளைந்தன

நேரிசை வெண்பா

பாலையே ஊட்டினும் பாம்பு விடம்காட்டும்
மாலையே சூட்டினும் மாயப்பேய் – மூலையாய்ப்
பொல்லாங்கே செய்யுமால் புல்லர் பொருள்பெறினும்
பொல்லாங்கே செய்வர் புகுந்து.

பாலும் மாலையும் அகமும் புறமும் அறிய வந்தன. பொருள் கல்வியையும் குறித்தது பால் போல் நல்ல கல்வி உள்ளே சுரந்திருந்தாலும், வளமான செல்வம் வெளியே நிறைந்திருந்தாலும் புல்லர் உள்ளம் திருந்தி நல்லது செய்யார். எள்ளிச் செருக்கி அல்லலே செய்வார். பாம்பும் பேயும் தீம்பும் கொடுமையும் தெரிய நின்றன. செருக்கு மனிதனைப் பேயனாக்கிச் சிறுமைப்படுத்துமாதலால் அதனை ஒருவி நின்றவர் பெருமை பெறுகின்றனர்..

செல்வம் நல்லவரிடம் சேர்ந்தால் புகழும் புண்ணியமும் செய்யத் தருகின்றன. தீயவரிடம் சேர்ந்தால் பழியும் பாவமும் செய்கின்றன.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. 408 கல்லாமை

கல்லாப் புல்லரிடம் செல்வம் வரின் அவர் களிப்பு மிகுந்து அடியோடு கெடுவர் என்று வள்ளுவர் கூறுகிறார். நல்லார் வறுமையுறினும் இனியராய் நலம் பல பெறுவர். கல்லார் செல்வம் பெறினும் கொடியராய்க் கேடே அடைவர் என்றதனால் அவரது மடமையும் கொடுமையும் அறியலாகும்.

அறிவிலாத அற்ப ரானவர்க்குச்
செல்வம் அல்லது பகைவேறு உண்டோ. - திருவிளையாடல்

அறிவு கெட்ட புல்லருக்கு வேறு பகை வேண்டியதில்லை; செல்வமே அவர்க்குக் கொடிய பகை எனப் பரஞ்சோதி முனிவர் இங்ஙனம் குறித்திருக்கிறார். பழி பாவங்களைச் செய்து கொடிய நரக துன்பங்களை விளைத்துக் கொள்ளுவராதலால் அற்பர்க்குச் செல்வம் அழிபகை ஆயது.

அற்பனாய் இழிந்து அழியாதே; தகுந்த குண நீர்மைகளைப் பேணிச் சிறந்த பெருந்தகையாளனாய் உயர்ந்து வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Feb-20, 8:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

மேலே