முச்சங்கத் தலைவர்கள்

'முச்சங்கத்துப் புலவர்கள், அவர்கள் இயற்றிய நூல்கள் ஆகியவற்றை எல்லாம் ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுக’ என்றார் ஒருவர். அதற்கேற்ப, கவிஞர் சொல்லியது இச் செய்யுள்.

நேரிசை வெண்பா
(’ர்’ ஆசிடையிட்ட எதுகை)

நூலாநா லாயிரநா னூற்றுநாற் பத்தொன்பான்
பாலாநா னுற்றுநாற் பத்தொன்பான் - மேலாநாற்
பத்தொன்பான் சங்கமறு பத்துநா லாடலுக்கும்
க’ர்’த்தன் மதுரையிற்சொக் கன். 27

– கவி காளமேகம்

பொருளுரை

நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது நூல்களையும், அவற்றை இயற்றி 449 புலவர்களையும், அவர்களின் தலைவராகத் திகழ்ந்த நாற்பத்து ஒன்பதின்மரையும் உடைய மூன்று சங்கங்களுக்கும் அறுபத்து நாலு திருவிளை யாடல்களுக்கும் உண்மையில் என்றும் தலைவனாக விளங்கியவன் மதுரையிலே கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமானே ஆவான்.

சங்கங்கள் மூன்றாகவும், அதன்கண் இருந்து தமிழாய்ந்தார் ஆயிரக்கணக்கினராகவும், திருவிளையாடல்கள் அறுபத்து நான்காகவும் விளங்கினவேனும், அவை அனைத்துக்கும் முதல்வனாகியவன் சொக்கநாதப் பெருமானே என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Feb-20, 7:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

மேலே