மத்தால் அடித்தது

யசோதைப் பிராட்டி கண்ணனை மத்தினாலே அடித்தாள் அல்லவா! அதற்கு இரங்குவது போன்று பொருள் அமைய ஒரு வெண்பாப் பாடுக என்று சொன்னார் ஒருவர்.

கண்ணனின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி அப்படிப்பட்ட கண்ணன் அழுமாறு யசோதைப் பிராட்டி அடித்தனளே, அது எவ்வளவு அறியாமை உடைய செயல் என்னும் பொருளமைய, உடனே வெண்பாவைச் சொன்னார் காளமேகம். கேட்டவர் வாயடைத்துப் போய் விட்டனர்.

நேரிசை வெண்பா

வண்ணங் கரியனென்றும் வாய்வேத நாறியென்றும்
கண்ணனிவ னென்றும் கருதாமல் - மண்ணை
அடிப்பது மத்தால் அளந்தானை யாய்ச்சி
அடிப்பது மத்தா லழ. 32

– கவி காளமேகம்

பொருளுரை:

வாமனனாகி வந்து உலகனைத்தையும் தன் திருவடித் தாமரையினாலே அளந்தவனாகிய பெருமானை நிறத்தினாற் கரியவனாகிய திருமாலே என்றும், திருவாயிடத்தே வேதமணம் கமழும் சிறப்புடையவனே என்றும், பெருமையுடைய திருமால் இவனே என்றும் கருதிப் பார்த்து அவனைப் போற்றி தான் உய்வதற்கான வழிவகையினை நாடாமல் இடைச்சியான யசோதைப் பிராட்டியானவள் அவன் அழுமாறு மத்தினாலேயோ அடிப்பது? இஃது இரங்குதற்கு உரிய செயல் அல்லவோ என்பது கருத்து.

மூன்றாவது அடியின், 'அடிப்பது மத்தாலே’ என்பதனை அடிப் பதுமத்தாலே' எனப் பகுத்துத் திருவடித் தாமரையினாலே எனப் பொருள் உரைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

வண்ணம் – நிறம், நாறி – மணப்பவன், கண்ணன் - அனைவருக்கும் கண்ணாக அமைந்த பிரான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Feb-20, 9:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே