கல்லாத மூடம் உலோபம் முரண் செருக்கு – செல்வத் திமிர், தருமதீபிகை 592

நேரிசை வெண்பா

செல்வம் ஒருவன்பால் சேர்ந்தக்கால் அப்பொழுதே
பொல்லாத நான்கும் பொருந்துமே – கல்லாத
மூடம் உலோபம் முரண்செருக் கம்மம்மா
பீடையெவர் உய்வார் பிழைத்து.592

- செல்வத் திமிர், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒருவனிடம் செல்வம் சேர்ந்தால் அப்பொழுதே அவனிடம் மூடம், உலோபம், முரண், செருக்கு ஆகிய பொல்லாத குணங்கள் கூடவே வந்து சேர்கின்றன. அந்தப் பீடைகளிடமிருந்து அவன் தப்பிப் பிழைப்பது மிகவும் அரிது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஆக்கம், வளம், வாழ்வு, பாக்கியம், திரு, பொருள் என வரும் பெயர்களால் செல்வத்தின் உயர் நிலைகளை உணர்ந்து கொள்கிறோம். இத்தகைய செல்வம் தனக்கு உரிமையாகப் பெருகி வரும் பொழுது மனிதன் உள்ளத்தில் பெருங்களிப்பு ஒருங்கே உயர்ந்து எழுகின்றது. எல்லா இன்ப நுகர்ச்சிகளுக்கும் ஏதுவாயுள்ளமையால் பொருளைக் கண்டதும் பெருமகிழ்ச்சி கொண்டு எவரும் உள்ளம் பூரித்து உவந்து நிற்கின்றனர்.

’செல்வம் புலனே புணர்வு விளையாட்(டு) என்று
அல்லல் நீத்த உவகை நான்கே’ - தொல்காப்பியம்

உவகைச் சுவைக்கு உரிய நான்கிலும் செல்வம் தலைமையானது என்கிறார் தொல்காப்பியர், இன்ப நுகர்வுகளுக்கு இங்ஙனம் இனிய சாதனமாயிருத்தலால் செல்வத்தை எல்லாரும் பேராசையோடு பேணி வருகின்றனர். அந்த ஆசை மயக்கத்தில் மோசம் விளைகின்றது. பொருள் ஒன்று இருந்தால் போதும்; அதனால் எல்லாச் சுகபோகங்களையும் இனிது அனுபவிக்கலாம். கல்வி, சீலம் முதலிய வேறு யாதும் வேண்டியதில்லை என்னும் இறுமாப்பு புல்லிய செல்வரிடம் பொங்கி எழுவதால் அவர் பணிவாய்ப் படிந்து படிப்பதை இழந்து விடுகின்றனர். கல்லாமை அவரைக் கவர்ந்து கொள்ளவே அவரது வழிமுறையும் மூடமாய் இழிவுறுகின்றது. ஒரு முறை நழுவியது பழி நிலையமாயது.

மூடம் – மடமை; அறியாமையால் மூடியிருப்பது மூடமாகும்; கல்வியறிவால் உள்ளம் தெளிவாய் ஒளி பெறுகின்றது; அது இல்லாத பொழுது மூடமாய் இருள் சூழ்கிறது.

உலோபம் - ஈயாமை. பொருள் மேல் கடும் பற்றுக்கொண்டு உள்ளே பேராசை மண்டியுள்ளவன் வெளியே உலோபி என நேர்ந்தான்.

முரண் - மாறுபாடு, பகை. தவறாயிருந்தாலும் தான் சொன்னதையே முரட்டுத் தனமாய்ச் சாதிப்பது முரண் என வந்தது.

செருக்கு - மனத்தருக்கு. எல்லாவற்றிலும் தாம் சிறந்தவர் என உள்ளக் களிப்போடு ஓங்கி நிற்கும் மமதை செல்வரிடம் தேங்கி நிற்கிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பேரினும் பெரியன், மிக்க பிறப்பினும் பெரியன், செல்வச்
சீரினும் பெரியன், கல்வித் திறத்தினும் பெரியன், தெவ்வர்
போரினும் பெரியன், மற்றெப் பொருளினும் பெரியன், யானே
யாரினும் பெரியன் என்னும் என்னையார் அடக்கப் பாலார்?

- மெய்ஞ்ஞான விளக்கம்

அகங்காரத்தின் வடிவத்தை இது வடித்துக் காட்டியுளது. இப்படிச் செருக்கிக் கூறும் சிறுமையைச் செல்லப் பிள்ளையாய் வளர்த்துச் செல்வம் பெருக்கி விடுதலை உலக அனுபவத்தில் எவரும் எளிதே காணலாம். அரும்பு ஏறக் குறும்பு ஏறும் என்னும் பழமொழி செல்வச் செருக்கின் நிலைமையைக் குறிப்பாக உணர்த்தியுள்ளது.

பெரும்பாலும் செல்வம் கூடியிருக்கும் இடங்கள் கல்லாத மூடங்களாய் நீடி நிற்கின்றன. கல்வியறிவுடைய நல்லவர்கள் வறுமையால் வருந்துவதையும், பொல்லாதவர்கள் செல்வச் செருக்கில் செழித்துக் திரிவதையும் கண்ட ஒரு பெரியவர் உள்ளம் பரிந்து உளைந்தார். செல்வத்தின் அதி தேவதையான இலட்சுமி தேவியை நோக்கி வைதார். அவர் திட்டிச் சபித்த பாட்டு அயலே வருகிறது.

நேரிசை வெண்பா

நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்!
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து. 266

- நன்னெறியில் செல்வம், நாலடியார்

’சிறந்த தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பொன்னாலான பாவையை ஒத்த திருமகளே! பொன் போல் மதிக்கப்படுதற்கு உரிய மேன்மக்களின் பக்கம் நீங்கி, அவர்க்கு முற்றிலும் இயல்பில் வேறான கீழ்மக்களின் பக்கம் மணத்தலில்லாத புறவிதழைப் போற் சேர்ந்து நீ சூழ்ந்து நிற்பாயாதலின், நீ சாம்பலாய் வெந்து இவ்வுலகத்தில் அழிந்து போகக் கடவாய்’ என்று கோபமாயவர் இப்படிச் சாபமிட்டு வைதிருக்கிறார்.

நல்லவரது அல்லலையும், புல்லியரது செல்வத் திமிரையும் பல வகையிலும் பார்த்து உள்ளம் கொதித்து அக்கவிஞர் இவ்வாறு பாடியிருத்தலால் செல்வம் கூடியிருக்கும் இடத்தையும் இயல்பையும் நாடி அறிந்து கொள்கிறோம்.

கட்டளைக் கலித்துறை

செல்வச் செருக்கர் தலைவாயில் தோறும் திரிந்துதிரிந்
தல்லற் றுயர்கொண் டிளைத்துவிட் டேனடி யேனினியப்
புல்லர்க் கெளிமை புகலாமல் காத்தருள் பூந்தடமும்
மல்லற் பழனமும் சூழ்கரு வாபுரி வானவனே. - கருவைக் கலித்துறை

இப்பாட்டைப் பாடினவன் ஒரு பாண்டிய அரசன். பரிசில் கருதி யாரிடமும் இவன் போயிருக்க மாட்டான். இருந்தாலும் தமிழ்க் கல்வியாளரது நிலைமையையும், செல்வரது மடமையையும் இங்ஙனம் வருந்தி உரைத்திருக்கிறான். செல்வச் செருக்கர், புல்லர் எனச் செல்வரை எள்ளி இகழ்ந்திருத்தலால் அவரது இழிவான மமதையும் புன்மையும் தெளிவாக அறிய வந்தன.

'பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள” - குறள், 241 என வள்ளுவர் கூறியுள்ளதும் இங்கே கூர்ந்து சிந்திக்க வுரியது.

அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
பகரு நாவினர் லோபர்தீக் குணங்க
ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர்

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத

நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ...... தமிழ்கூறி

நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே - திருப்புகழ்

செல்வமுடையவரது புல்லிய நிலைகளை அருணகிரிநாதர் இவ்வாறு பொருள் நயம் தோன்ற விளக்கியிருக்கிறார்.

சிறந்த வீரர்கள், உயர்ந்த வள்ளல்கள், நல்ல கல்விமான்கள் ஆகிய இவர்களிடம் செல்வம் கூடி நில்லாமல் புல்லிய உலோபிகளிடம் போய்ப் பொருந்தியுள்ளதே! இது என்னே? எனப் போச ராசன் ஒரு கவிஞனிடம் உல்லாச வினோதமாய்க் கேட்டான். வடமொழியில் வல்லவனை அக்கவிஞன் உடனே சுவையாக ஒரு சுலோகம் பாடினான். அதன் பொருள் அயலே வருகிறது.

'விதவையாய் விடுவோம் என்று வீரனை இலட்சுமி விலக்கினாள்; மறுபடியும் சேர நாணி வள்ளலை ஒருவினாள், கல்வி ஆகிய மனைவியை மருவியுள்ளமையால் பண்டிதனை ஒதுக்கினாள், யாதொரு நலனும் இல்லாமல் பேதையாய்ப் பிழைமண்டி இருந்தமையால் உலோபியை அவள் உவந்து தழுவிக் கொண்டாள்? என்பது சொல்லப்பட்டுள்ள சுலோகத்தின் பொருள்.

வீரன் எப்பொழுதும் போர்த்தொழிலை உடையவன்; தன் உயிரையும் மதியாமல் போர் மேல் மூண்டு செல்பவன், அவனைச் சேர்ந்தால் ஆபத்து என்று விலகினாள்; தன்னிடம் உள்ள பொருள்களையெல்லாம் வள்ளல் வாரிக் கொடுக்கின்றவனாதலால் அவனை மீண்டும் அணுக நாணினாள்; கல்வியே கற்புடைப் பெண்டிர் என்றபடி ஒரு பத்தினியை முன்னதாகவே பெற்றிருத்தலால் புலவனை நெருங்காமல் நீங்கினாள்; புல்லிய உலோபியிடம்தான் செல்லமாய் நிலைத்து வாழலாம் என்று கருதி அங்கே போய் இலக்குமி அமர்ந்து கொண்டாள் எனக் கவி புனைந்து கூறியுள்ளது நினைந்து சிந்திக்கவுரியது.

வீரம், கொடை, கல்வி முதலிய உயர்ந்த நீர்மைகள் யாதும் இல்லாத இழிந்த பேதைப் புல்லர்களிடமே செல்வம் பெருகி நிற்கும் என்பது தெரிய வந்தது.

நல்ல அறிவாளிகள் செல்வத்தின் இயல்பையும் நிலையையும் நன்கு அறிந்து கொள்வதால் அதனை இனிய வழிகளில் பயன்படுத்திப் புகழ் புண்ணியங்களை எய்துகின்றனர்.

தெளிவான உணர்வு நலம் இல்லாமையால் தங்களிடம் சேர்ந்துள்ள பொருளைப் பெரிதாக எண்ணி மருள்கொண்டு மயங்கிச் செருக்கிப் பிலுக்கிச் சிலுகு புரிந்து உழலுகின்றனர்.

நேரிசை வெண்பா

பித்தோடு கள்ளுண்ட பேய்க்குரங்கு தேட்கடுப்பும்
ஒத்தேறின் உள்ள வுறுதிபோல்- தத்திநிற்கும்
பேதைச் சிறுவர் பெரும்பொருள்கை யுற்றக்கால்
வாதை புரிவர் வலிந்து.

ஒரு துட்டக் குரங்கு; கொஞ்சம் பைத்தியம்; புளித்த கள்ளையும் குடித்திருந்தது; பேயும் பிடித்துக் கொண்டது; தேளும் கொட்டி விட்டது; இந்த நிலையிலுள்ள அந்தக் குரங்கைப் போல் பேதைச் சிறியர் செல்வம் பெற்றால் களிப்பு மீதுார்ந்து சேட்டைகள் செய்வர் என இது உணர்த்தியுள்ளது.

செல்வச் செருக்கு எள்ளலாய் அல்லலை விளைக்கும்; அந்தப் புன்மை படியாமல் பெருந்தன்மையுடன் நன்மை படிந்து ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Feb-20, 11:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே