கடல் நடுவிலே செந்தூள்

‘கடல் நடுவிலே செந்தூள்' எழுந்ததாகக் கற்பித்துப் பாடுவதற்கு இயலுமோ?” என்றார் புலவர்.

காளமேகத்தின் நினைவில் சிவபெருமான் மன்மதனை எரித்த திருவிளையாடல் எழுந்தது. மன்மதன் திருமாலின் மகன். அதனால் அவனுடைய தாய் திருமகள் ஆகின்றாள். அவளுக்குப் புத்திர சோகம் இருக்கும் அல்லவா! அவள் மார்பில் அறைந்து கொண்டு கதறினாளாம். அப்போது அவள் மார்பிலே பூசியிருந்த சிந்துரக்கலவையின் செந்தூள் மேலே எழுந்து பரந்ததாம். அவளோ பாற்கடல் நடுவே அனந்த சயனத்திலே தன் நாயகனுடன் இருப்பவள். அதனால், கடல் நடுவே செந்தூள் எழுந்ததாகின்றது. இப்படிக் கற்பித்து நயமுடன் பாடுகிறார் காளமேகம்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

சுத்தபாற் கடலின் நடுவினில் தூளி
தோன்றிய அதிசயம் அதுகேள்!
மத்தகக் கரியை யுரித்ததன் மீது
மதன்பொரு தழிந்திடும் மாற்றம்
வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள்;
விழுந்துநொந் தயர்ந்தழு தோங்கிக்
கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள்
எழுந்தது கலவையின் செந்தூள். 31 – கவி காளமேகம்

பொருளுரை:

பரிசுத்தமான பாற்கடலின் நடுவிடத்தே, துகள் தோன்றியதான அந்த அதிசய நிகழ்ச்சியைக் கேட்பாயாக:

மத்தகத்தையுடைய யானையை உரித்துப் போர்த்த சிவபெருமான் மீதாக மதனன் போரிட்டு சென்று அழிந்ததான செய்தியை அறிவினை யுடைய தாமரை மலராளான திருமகள் தன் காது பொருந்தக் கேட்டாள்; கேட்டதும், மயங்கி விழுந்தாள்; மனம் நொந்து தளர்வுற்றாள்; அழுதாள் ஓங்கித் தன் கைத்தலமாகிய மலரினாலே தன் மார்புறப் புடைத்துக் கொள்ளலையும் செய்தாள்; அப்போது அவள் மார்பிற் பூசியிருந்த சிந்தூரக் கலவைச் சாந்தின் செந்தூளானது சிதறி மேலே எழுவதாயிற்று.

'வித்தகக் கமலை என்றது அவள் பேரறிவு உடையவளாயிருந்தும், புத்திர சோகத்தின் காரணமாகப் பாசப் பற்றினாலே அறியாமை வயப்பட்டு, அப்படி மார்பிலே அறைந்து கொண்டு புலம்பினாள் என்பதற்காம். மும்மதங் கொண்ட யானையைக் கொன்று உரித்த சிவனை ஒரு மதன் சென்று பொருதினான் என்று கூறும் நயத்தை உணர்க, அதனால் அழிவை எதிர்நோக்கியே அவன் சென்றான் என்பதும் புலப்பட வைத்தனர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-20, 2:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 154

சிறந்த கட்டுரைகள்

மேலே