கற்றும் செறிவின்றி உள்ளம் செருக்கல் - கல்விச் செருக்கு, தருமதீபிகை 582

நேரிசை வெண்பா

அறிவை வளர்க்கும் அருங்கல்வி கற்றும்
செறிவின்றி உள்ளம் செருக்கல் - நெறிநின்று
காணுகின்ற கண்பெற்றும் காட்சிநலம் துய்க்காமல்
வீணே கெடுத்த விதம். 582

- கல்விச் செருக்கு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்ல அறிவை வளர்த்தருளுகின்ற அரிய கல்வியைக் கற்றும் அடக்கமின்றி அகம் செருக்கி நிற்றல் காட்சியின்பங்களைக் கண்டு மகிழ உரிய கண்களை வீணே கெடுத்துக் குருடாக்கிக் கொண்டது போல் கொடிய துயரமாம் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது உள்விழியின் ஒளி நிலையை உணர்த்துகிறது.

இயல்பாகவே மனிதன் அறிவுடையவன். எதையும் பகுத்துப் பார்க்கிறான்; தொகுத்து நோக்குகிறான். முன்னும் பின்னும் எண்ணி அறியும் திறம் மிருகங்களுக்கு இல்லை; மனிதனுக்கு உண்டு. இந்த மனவுணர்வினாலேதான் மனிதன் மாண்பு அடைந்துள்ளான். தன்னை மகிமைப் படுத்தியுள்ள இயற்கை அறிவைக் கல்வியால் விருத்தி செய்து கொண்டவன் உயர்ந்த மதிமானாய்ச் சிறந்து விளங்குகிறான். கல்லாத அறிவு புல்லிதாய் இழிந்து படுவதால் அதனையுடையவன் புல்லியனாய்ப் புன்மையுறுகின்றான். கலை தோய்ந்த மதி கதி தோய்ந்து மிளிர்கிறது.

உரிய அறிவை வளர்த்து அரிய மதிப்புகளை விளைத்துப் பெரிய இன்பங்களை நல்கி வருதலால் கல்வி ஆருயிர்க்கு அமுதம் என வந்தது. உயிர் அமிர்து உயர் பேரின்பமாய்ச் சுவை சுரந்துள்ளது.

அருள்நிறைந்(து) அமைந்த கல்வியர் உளம்எனத்
தேக்கிய தேனுடன் இறால்மதி கிடக்கும். - கல்லாடம்

நல்ல கல்விமான்களுடைய உள்ளத்தைக் கல்லாடர் இவ்வாறு காட்டியிருக்கிறார். இனிய தேன் நிறைந்த மதுக்குடம் போல் அரிய கல்வியாளர் மனம் கருணை சுரந்து இருக்கும் என்றதனால் கல்வியின் பயனும் நயனும் காணலாகும்.

அறிவை வளர்க்கும் அருங்கல்வி என்றது அறிவுக்கும் கல்விக்கும் உள்ள உறவுரிமையை ஓர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது. உடல் உணவால் உரம் பெற்று வருதல் போல் அறிவு கல்வியால் வளம் பெற்று வருகிறது. ஊன உடலை வளர்க்கும் உணவினும் ஞான உடலை வளர்க்கும் கல்வி மனிதனுக்கு மிகவும் அவசியமானது. அதனை இழந்து இருப்பவன் இருகால் மிருகமாய்த் தளர்ந்து நிற்கின்றான். கலை நிலை தலை நிலையாய்த் தழைத்து நிற்கிறது; கல்லாமை பொல்லாமையாய்ப் புன்மையுறுகின்றது.

யாண்டும் அதிசய மேன்மைகளை அருளிவருகிற கல்வியை அடைந்தும் அதனை நல்லவகையில் பயன்படுத்தாமல் மோசம் போவது நீசமாகின்றது.

உள்ளத்திற்கு அமைதியையும் அறிவுக்குத் தெளிவையும் உறுதியாக உதவி வருவதே கல்வியாம். அரிய பல அறிவின்பங்களை இனிமையாக அனுபவிக்கவுரிய கல்வியைச் செருக்கு வறிதே பாழாக்கி விடுவதால் அச்செருக்கன் வீணனாய் இழிந்துபடுகின்றான்.

செருக்கு என்னும் சொல் அகங்காரம், ஆணவம், மமதை, இறுமாப்பு, இடம்பம், களிப்பு முதலிய இழி நிலைகளைக் குறித்து வருதலால் அதன் பழி நிலையும் பாவமும் அறியலாகும்.

உயர்நலங்களை யெல்லாம் ஒருங்கே ஒழித்து எவ்வழியும் துயரங்களை விளைத்து நிற்றலால் செருக்கு ஒரு கொடிய தீமை என மேலோர் முடிவு செய்துள்ளனர். இந்த இழிதீமை இல்லாதவரே விழுமிய நல்லோராய் விளங்கி நிற்கின்றனர்.

செறிவு - அடக்கம், நிறைவு. சிறந்த அறிவுக்கு அடையாளம் நிறைந்த அடக்கம். உள்ளம் நெறியோடு அடங்கிய பொழுது அங்கே அதிசய மேன்மைகள் வெள்ளமாய் விரிந்து நிறைந்து நிற்கின்றன.

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 121 அடக்கமுடைமை

அடக்கம் உடையவன் தேவனாய் உயர்கின்றான்; அஃது இல்லாதவன் பாவியாய் நரகத்தை அடைகின்றான் என்னுமிது ஈண்டு எண்ணி உணரவுரியது. அடக்கத்தின் பெருமையும் அடங்காமையின் சிறுமையும் இதனால் நன்கு தெரிய வந்தன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா)

கற்றறிவு குலமேன்மை கருணைபெரும் புகழ்செல்வம்
கைம்மா(று) எண்ணா(து)
உற்றுதவு கொடைசீர்மை ஒழுக்கமருந் தவம்நியமம்
உறவின் கேண்மை
மற்றெதிரி லாத்திண்மை வாய்மைமிகுந் தூய்மைகுணம்
வனப்பு யாவும்
பெற்றிடினும் அடக்கமிலாப் பெருமிதத்தால் அத்தனைக்கும்
பிழையுண் டாமால். - மெய்ஞ்ஞான விளக்கம்

அடக்கமின்றிச் செருக்குவதால் விளையும் அழிகேடுகளை இது விழிதெரிய விளக்கியுள்ளது. செருக்கு உள்ளம் புகின் அரிய பல நன்மைகள் அழிந்து போகும் என்றதனால் அதன் இழிதீமையை அறிந்து கொள்ளலாம்.

ஒளி அமைந்த கண்ணால் உலகக் காட்சிகளை நோக்கி உவகையுறாமல் அதனைக் குருடாக்கிக் கண்ணிழந்த கபோதியாயிழிந்து கிடப்பது எவ்வளவு துயரம்! கல்வியறிவால் அரிய பல உணர்வின்பங்களை அனுபவியாமல் வீணே செருக்கி விளிதல் விழியைப் பழுதுபடுத்திய முழுமூடம் போல் அவ்வளவு துன்பமாம். ஆணவத் திமிர்கள் அழிவுகளையே தருகின்றன. செருக்கு பழிதுயரங்களை விளைப்பதால் அதனை ஒழித்து ஒழுக வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-20, 8:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 108

சிறந்த கட்டுரைகள்

மேலே