செருப்பு - விளக்குமாறு

ஒரு புலவருக்குக் கவிஞரை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம். “செருப்பு என்று தொடங்கி, விளக்குமாறு என்று முடித்து ஒரு வெண்பாவைப் பாடமுடியுமா?" என்றார்.

அவருடைய கருத்தின் தன்மையைப் புரிந்து கொண்டார் கவிஞர். அந்தச் சொற்களையே அமைத்துப் பாடினும் அதனாற் பொருட்சுவை மிக்கதாகத் தம் செய்யுளை அமைத்து அவரைத் திகைப்படையச் செய்கிறார்.

முருகப் பெருமானின் மீது காதல் கொண்ட ஒரு நங்கையானவள், பொய்கையிடத்துத் தாமரையிலே வந்து படிந்திருக்கும் வண்டிடத்தே, முருகனிடம் செல்லுவதற்கான வழியினை வினவி அறிவதுபோல அமைந்துள்ளது வெண்பா.

நேரிசை வெண்பா

செருப்புக்கு வீர(ர்)களைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்குத்
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமா றே. 40

– கவி காளமேகம்

பொருளுரை:

போர்க்களத்திடையே புகுந்து சென்று எதிர்த்த பகைவீரர்களைச் சிதறடிக்கின்றவனாகிய வேலனை, குறிஞ்சி நிலத்துக்கு உரிய தலைவனை யான் தழுவும் பொருட்டாக குளிர்ந்த தேனைப் பொழிந்த அழகிய தாமரை மலரின்மேலே தங்கியிருக்கின்ற வண்டே! உரியதோர் வழியினை எனக்கு விளக்கிக் கூறுவாயாக!

ஆறு என்பதற்கு அவனை அடையும் வழி எனவும் அவனிடத்தே செல்லும்வழி எனவும் பொருள் உரைக்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-20, 1:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே