215 கரு அழித்தல் துன்பம் களையாமை கொலையே – கொலை 2
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)
கருவினை யழிக்குதல் கயமிங் கேனையார்
மருவிட விரும்புதல் மற்றன் னோரிடர்
ஒருவிட வகைசெயா தொழிதல் வெவ்விடஞ்
சருவினி லிடல்கொடுஞ் சமர்க்கு டன்படல். 2
– கொலை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கருவை அழிப்பது (abortion), பிறர் கெட்டுப்போக வேண்டுமென்று ஆசைப் படுவது, அவர்க்கு ஏற்படும் துன்பம் நீங்க உதவி செய்யாது இருப்பது, சோற்றில் கொடிய நஞ்சினை இடுவது, கடுமையான சண்டைக்குச் சம்மதிப்பது (பெரும்பாலும் கொலையிலேயே முடியும்) முதலிய அனைத்தும் கொலையே” என்கிறார் இப்பாடலாசிரியர்.
கயம் - கேடு. ஒருவிட - நீங்க. வகை – உதவி, சரு - சோறு. சமர் - சண்டை.