214 கொல்ல நினைத்தலும் கொடுமொழியும் கொலையே – கொலை 1
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)
உயிரினை வதைத்திடல் வதைக்க வுன்னுதல்
அயிலெனக் கொடியசொல் அறைத லெற்றல்வெண்
தயிருடை மத்தெனத் தாபம் பல்புரிந்(து)
அயலவர் ஆயுள்நாட் கழிவுண் டாக்குதல். 1
– கொலை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஓர் உயிரைக் கொல்வது, கொல்ல நினைப்பது, கூரிய கணை போன்ற கொடிய சொற்களைச் சொல்வது, அடிப்பது, வெண்மையான தயிரைக் கடையும் மத்துப் போன்று பல துன்பம் செய்து மற்றவர் வாழ்நாளுக்கு அழிவை ஏற்படுத்துவது அனைத்தும் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
வதைத்தல் - கொல்லுதல். உன்னல் - நினைத்தல். அயில் - கணை. எற்றல் - அடித்தல்.