மீனுக்கும் பேனுக்கும்

நேரிசை வெண்பா

மன்னீரி லேபிறக்கும் மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரியா மே. 56

- கவி காளமேகம்

பொருளுரை:

தேன் பாய்கின்ற சோலைகளைக் கொண்ட திருமலைராயனின் மலையில்,

மீன்:

நிலைபெற்ற நீரிலே தோன்றும், அந்த நீர் அலைகளிடத்தே மேய்ந்து கொண்டிருக்கும், நீந்தும் பொழுது பின்தொடர்ந்து குத்துகின்ற இயல்பும் உடையதாயிருக்கும்;

பேன்.

தலையில் நிலைத்த பேன் முட்டையிடத்திலிருந்து தோன்றும்; அடர்த்தியான தலைமயிரிலே திரிந்து செல்லும், பின் பெண்களால்எடுத்து 'ஈச்’ என்னும் ஒலியுடனே குத்தவும் படும்.

இப்படியான பெருமைகளால் மீனும் பேனும் தம்முள் ஒப்படையன என்று யான் சொன்னேன்; இதனைக் கேட்பாயாக என்றார் கவி காளமேகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Mar-20, 10:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே