கொரோனா வைரசு Covid 19 பதற்றத்தினை எவ்வாறு எதிர்கொள்வது ஓர் உளவியல் சார்ந்த தயார்படுத்தல்……
தினச் செய்திகளை கேட்கும் போது கொரோனா குறித்த விடயங்கள் முக்கிய இடத்தினை வகிக்கும் நிலையில் இது எமது பிரதேசத்தினை தாக்கினால்? என்ற மனதில் தோன்றிய குறித்த வினாவுக்குப் பதிலாக தற்போது எமது மனங்களில் எழும் கேள்வி என்னவென்றால் இந்த வைரசு எம்மை எப்போது தாக்கப்போகின்றது? என்பதேயாகும். அந்தளவிற்கு கொரோனா வைரசு மிக வேகமாக உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றது.
தினமும் புதிதாக பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற செய்திகள் இவ் வைரசானது ஓர் சமூகத் தொற்றின் (community spreading) விளைவு என்பதனை எடுத்தியம்புகின்றது. எனவே இது இலங்கையர்களாகிய எமக்கு எதனை உணர்த்துகின்றது? எவ்வாறான தயார்படுத்தல்களை கோரி நிற்கின்றது?
மருத்துவ துறைக்கு அப்பால் உள ரீதியாகவூம் பலமாக இருக்கவேண்டிய அவசியத்தினை இது சுட்டி நிற்கின்றது. இந்நோய் மட்டுமல்லாமல் எமக்கு ஏற்படும் எந்தவித நோய்களுக்கும் வழங்கப்படும் மருந்துகளினால் விளையும் குணமாதல்கள் விரைவாகவும் வினைத்திறனாகவும் எய்தப்பட மனரீதியான நம்பிக்கைகளும், உறுதிப்பாடுகளும் அவசியம் என்பதனை யாராலும் மறுக்க முடியாது.
ஹாவாட் பல்கலைகழகத்தின் தொற்றுநோயியல் பிரிவின் பேராசிரியர் மார்க் லிப்ஸிட்ச் என்பவர் கொவிட்-19 வைரசானது உலகெங்கும் 40% - 70 %ஆன மக்களை தொற்றக்கூடும் என எதிர்வுகூறியுள்ளார். இது பலரும் மிதமான அளவுக்கேனும் நோய்த் தொற்றுக்குள்ளாவார்கள் என்பதனை அர்த்தம் கொள்கின்றது. அல்லது நோய் அறிகுறிகள் எதனையும் வெளிக்காட்டாமலே பலரும் கடந்து செல்லக்கூடும்.
தற்போது வரைக்குமான நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கையில் கொவிட்-19 ஆனது உயர்தொற்றுவீதம் உள்ள அதே வேளை இதனால் உண்டான இறப்புகளின் சதவீதம் குறைவாகவே காணப்படுகின்றது. கொவிட்-19 தொற்றுக்களினால் விளைந்த இறப்புவீதம் அண்ணளவாக 3 % மட்டுமே. அதே வேளை 2002 களில் தாக்கிய சார்ஸ் (SARS) வைரசினால் விளைந்த இறப்புவீதம் 9% - 12 % ஆக இருந்தது. இன்னொரு விதத்தில் கூறப்போவதானால் இது குறித்து தேவையற்ற அளவிற்கு நாம் அச்சம் கொள்ளதேவையில்லை. மாறாக எம் மத்தியிலுள்ள ஏனைய நோய்களைப்போன்று இதுவும் ஆராயப்படவேண்டிய ஒன்றே.
இன்றைய மருத்துவ கண்டுபிடிப்புகளின் பிரகாரம் இவ் வைரசின் தாக்கத்தினால் உருவாகும் நோய் அறிகுறிகள் 2-14 நாட்களில் வெளிப்படுகின்றது. இது பிரதானமாக சுவாசத்தொகுதியின் ஊடாகவே தொற்றலடைகின்றது. காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமங்கள் போன்றவை நோய் அறிகுறிகளாக இனங்காணப்பட்டுள்ளன. மற்றைய நோய்களைப் போன்றே வயதானவர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்நோய்க்கும் இலகுவில் இலக்காக முடியும்.
இவ் வைரசு தொற்றின் மீதான உளவியலின் பிரயோகங்கள்
நீங்கள் கொவிட்-19 பற்றி உங்கள் நண்பர்களுடன் உரையாடினால் அவர்களிடமிருந்து பல தரப்பட்ட பதில்களையும் பெறமுடியும். சிலர் முகக்கவசங்களை வாங்கி தயாராக வைத்துள்ளதாகவும் வேறு சிலர் தங்கள் பயணங்களை தவிர்த்துகொண்டுள்ளதாகவும் இன்னும் சிலர் இது குறித்து நாங்கள் எதுவும் தயார்படுத்தவில்லை எனவும் கூறுவார்கள்.
நாம் கேள்விப்படும் தகவல்களுக்கு அப்பால் மனிதர்களில் இதன் தாக்கத்தினை உண்மையாக மதிப்பிடுவதில் பிரச்சினைகள் உள்ளது. ஏனெனில் கேள்விப்படும் அந்த தகவல்களே பலருக்கும் இவ் வைரசின் தாக்கத்தினை தீர்மானிக்கும் ஓர் அளவுகோலாய் காணப்படுகின்றது. மக்கள் தங்கள் உணர்வுகளையேயன்றி தர்க்க ரீதியான விளைவுகளையும் பின்புலங்களையும் மதிப்பாய்வு செய்வதில்லை. இவ்வாறான நோய் குறித்த சிந்தனைகள் அதன் தொற்றுதலின் உண்மையான நிலையினை விட அதிகரித்த விளைவினையும்,பேரழிவையம் சுட்டிநிற்பதாக சித்தரிக்கும் என அமெரிக்காவின் அனுமதி பெற்ற உளவியலாளர் ஜூலி கொல்ஸெட் (Dr. Juli Kolzet Ph.D) கூறுகின்றார்.
நோய் குறித்த தகவல் ஒன்றினைப் பெறும் போது அது எந்த நம்பகத்தன்மையான இடத்திலிருந்து வந்தது? அதன் உண்மைத்தன்மை என்ன? போன்ற விடயங்களை ஆராயும் போது வீணான பதற்ற நிலையினை குறைத்துக்கொள்ள முடியும். அத்துடன் உண்மையில்லாத பயனற்ற ஒரு தகவலை நம்பிக்கொண்டிருப்பதனால் என்ன இலாபம்? என உங்களுக்குள்ளே வினவிக்கொள்ளுங்கள்.
எவ்வாறு பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும்?
1. கைகளை நன்கு கழுவிக்கொள்ளல்.
சவர்க்காரம் கொண்டு குறைந்தது இருபது செக்கன்கள் அல்லது உயர்செறிவுள்ள (60%) மதுசார கலவைகளால் தொற்று நீக்கிக்கொள்ளல், கழுவிக்கொள்ளல்.
கழிப்பறைகளுக்கு சென்ற பின்னர் , சாப்பிட முன்னர், இருமல், தும்மல் போன்ற செயற்பாடுகளுக்கு பின்னர் கண்டிப்பாக கைகளை மேற்சொன்ன வகையில் கழுவிக்கொள்ளுதல் வேண்டும்.
2. இருமும் போது அல்லது தும்மும் போது நன்றாக மூடிக்கொள்ளுங்கள். இந்நிலையில் கண்கள், வாய், மூக்கு போன்ற பாகங்களை தொடுவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். பாவித்த ரிசு கடதாசிகளை முறையாக அகற்றிவிடுங்கள்.
3. உடல் நலகுறைவாக உணர்ந்தால் வீட்டில் தரித்திருங்கள். உங்களுக்கு வைரசு தொற்றியிருக்கக்கூடும் என நீங்கள் சந்தேகப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்.
4. உங்கள் வீட்டுச்சூழலை சுத்தமாக பேணுங்கள்.
தொற்றுநீக்கி திரவங்கள் அல்லது மதுசாரத்தினை பாவித்து பலராலும் தொடுகை அடையக் கூடிய பொருட்களான மின்சார ஆளிகள், கதவு கைபிடிகள், தொலைபேசி, ரிமோட் போன்ற பொருட்களை அடிக்கடி துடைத்து விடுங்கள்.
5. நோயாளிகளிடமிருந்து விலகி இருங்கள்.
இவ் வைரசானது உயர்தொற்றுகை வீதம் உள்ளதனால் இவ்வாறு விலகியிருத்தல் எம்மை தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்.
6. முகக்கவசமொன்றினை உடனடியாக வாங்கி அணிய வேண்டிய அவசியமில்லை.
ஏனெனில் நீங்கள் ஓர் நோயாளி இல்லை என்பதனாலும், சுகாதார துறையை சார்ந்த சேவகர் இல்லை என்பதனாலும் மேலும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஒருவரினை பராமரிக்கும் பொறுப்பில் இல்லை என்பதனாலும் முகக்கவசம் அணிதல் அவசியமில்லை.
அத்துடன் கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருக்கும் ஒருவர் தன்னிலிருந்து மற்றவர்களுக்கு இவ் வைரசு பரவுவதனை தவிர்ப்பதற்காக கண்டிப்பாக முகக்கவசம் ஒன்றினை அணிதல் வேண்டும்.
இவற்றிற்கு மேலதிகமாக சில பகுதிகளுக்கு அல்லது நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனால் அவசியமற்ற, அவசரமற்ற பயணங்களை தவிர்த்துக்கொண்டு பாதுகாப்பான வலயத்தில் தரித்திருத்தல் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள போதுமாகும்.
மேற்கூறிய விதப்புரைகளை பின்பற்றிக்கொண்டு விழிப்பாக இருந்தால் நோய் குறித்து வீணாண பதற்றத்தினை தவிர்த்துக்கொண்டு உடல் ,உள ரீதியான பலத்துடன் தொற்றுக்களிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள அல்லது வெற்றிகரமாக அதனை எதிர்கொள்ள முடியும் என்பது மடடும் நிதர்சனம்.
S.Raguvaran
Department of Psychology & Counselling
OUSL
2020.03.10