தகர வருக்கப் பாட்டு
"முற்றவும் தகரவருக்க எழுத்துக்களே அமைந்து வருமாறு இயற்றுக’ என்று கேட்ட ஒருவருக்குச் சொல்லியது இச்செய்யுள்,
இன்னிசை வெண்பா
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது? 71
- கவி காளமேகம்
பொருளுரை:
வண்டே! தாவிச் சென்று பூந்தாதினை ஊதி உண்ணுகின்றாய்; பூந்தாதினை ஊதி உண்ட பின்னர் மீளவும் தாவி எங்கோ செல்லுகின்றாய்; துத்தி என ரீங்கார ஒலி எழுப்பியபடியே மற்றொரு பூவினை நெருங்குகின்றாய்; அப் பூவினை அணுகி அதனிடத்துப் பூந்தாதினையும் ஊதி உண்ணுகின்றாய்.
நினக்கு இனிப்பாயிருந்த பூ எதுவோ? இனித்திருந்தது எதன் மகரந்தமோ? இதழாக அழகியதும் எப்பூவோ?
துதைந்து என்ற சொல் துதைத்து என விகாரமாயிற்று. தாது - பூந்தாது, பூவிதழ், பூ என மூன்றையும் குறிப்பதாம்.