குமரேச சதகம் - காப்பு

காப்பு
நேரிசை வெண்பா

பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசர்மேல்
தேமே வியசதகம் செப்பவே - கோமேவிக்
காக்கும் சரணவத்தான் கம்பகும்பத் தைந்துகரக்
காக்குஞ் சரவணத்தான் காப்பு.

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

புவியிலே சிறப்புற்ற திருப்புல்வயலில் எழுந்தருளிய குமரக் கடவுள்பால், இனிமை பொருந்திய சதகத்தைக் கூறத் தலைமையாக இருந்து காப்பாற்றும் சரவணத்திலே தோன்றிய முருகனும், (அடியவருடைய அன்பாகிய) கட்டுத்தறியிலே பிணிப்புண்ட குடம் போன்ற மத்தகத்தினையும் ஐந்து திருக்கைகளையும் உடைய, காட்டில் உறையும் யானையின் வடிவத்தையுடைய மூத்த பிள்ளையாரும் காவலாகும்.

விளக்கவுரை:

புல்லை - திருப்புல் வயல் (மரூஉ). ஒரு சொல் தன் வடிவம் திரிந்து மருவி வருவது மரூஉ.

மருவுதல்- பல நாள் பழகி வருதல்.

கருத்து:

குமரேச சதகத்தினைப் பாடுதற்கு மூத்த பிள்ளையாரும் (விநாயகரும்), முருகனும் அருள் புரிவார்கள்.

குமரன் - இளையோன், ஈசன் - தலைவன், சரவணம் - நாணல். குஞ்சரம் - யானை, வணம் (வர்ணம்) - வடிவு (அழகு)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Mar-20, 7:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே