ஈத்துண்பான் தேவாதி தேவனாத் தேறு – ஏலாதி 32

இருவிகற்ப நேரிசை வெண்பா

உரையான் குலன்குடிமை யூனம் பிறரை
உரையான் பொருளொடுவாழ் வாயுள் - உரையானாய்ப்
பூவாதி வண்டுதேர்ந் துண்குழலா யீத்துண்பான்
தேவாதி தேவனாய்த் தேறு. 32

- ஏலாதி

பொருளுரை:

மலர் முதலியவற்றை வண்டுகள் மொய்த்து உண்கின்ற கூந்தலையுடைய பெண்ணே!

தன் குலத்தின் உயர்வையும் குடிப்பிறப்பின் உயர்வையும் சொல்லாமல், அவ்விரண்டும் இல்லாத மற்றவர் மேல் குற்றங் கூறாமல், தனது பொருளின் அளவோடு அனுபவிக்கும் செல்வத்தையும் ஆயுளையும் வெளிப்படுத்தானாகி, இரப்பவர்க்குக் கொடுத்துத் தானும் உண்டு அனுபவிப்பவனைத் தேவர்களிற் சிறந்த தேவனாகத் தெளிந்து அறிந்து கொள்..

கருத்து:

தன்னுயர்வு கருதிப் பிறரை இழித்துரையாமலும் தன் உடைமையான செல்வப் பெருமையை பெரிதுபடுத்திச் சொல்லாமலும் நடந்து, வறியார்க்கு இட்டுண்பவன் தேவர் தலைவனாவான்.

ஆயு - ஆயுள்; கடைக்குறை. பூவாதி - மலரும் மருவும் முதலாயின. உண்பானென்பது நுகர்தன்மேலது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Dec-24, 1:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே