வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும் – நாலடியார் 399

நேரிசை வெண்பா
(’ங்’ ‘ம்’ மெல்லின எதுகை)

முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலுமென்
தீம்பாவை செய்த குறி. 399

– காமநுதலியல், நாலடியார்

பொருளுரை:

நேற்று என்மகள் தன்னுடைய முலைக்காம்பும் முத்துவடமும் அழுந்தும்படி என் உடம்பு முழுமையும் அணைத்துக்கொண்ட உண்மையை யான் சிறிதும் அறியாமற் போனேன்;

அது மான்கூட்டங்கள் வேங்கைக்கு அஞ்சிச் சிதறும் காட்டு வழியில் இன்று பிரிந்து செல்லுதற்குப் போலும் அழகிய பாவை போல்வாளான என்மகள் அவ்வாறு செய்த அடையாளம்!

கருத்து:

தாயின் அன்பினையும் மறக்கும் ஆழ்ந்த காதலன்பினால் காமம் இன்பப் பேறுடைய தாகின்றது.

விளக்கம்: இது, மகள் போக்கிய தாய் வருந்திக் கூறியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Nov-24, 11:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே