குழந்தையடி நீ எனக்கு

குழந்தையடி நீ எனக்கு

குமரி பருவம் எய்தயிலும்

ஆசை அரும்பாய் மலர்ந்த போது

அள்ளி தான் கட்ட விளைந்தேன்

நெய்யும் தறி நூலை போலே

நேசத்தோடே நெருங்கி பிணைத்தேன்

மையல் இது போதாதென

மஞ்சத்தில் இடம் கொடுத்தேன்

மாதம் பத்து செல்லதான் - என்

மாமன் வீடு நீ சென்றாய்

மங்கை திரு மேனியெல்லாம்

மாற்றத்தால் நிரம்ப கண்டேன்

வேல் விழியாள் விழி தன்னில்

வேதனை தான் அரும்ப கண்டேன்

உயிர் நாடி ஒடுங்குதடி - உன்

உயிர் கூச்சல் கேட்கையிலே

வீரமடி தான் உனக்கு

பெரும் வேதனைகள் தாங்கையிலே.

பாரமடி தான் எனக்கு

படும் பாட்டை நான் பார்க்கையிலே.

உலகத்தின் சப்தம் எல்லாம்
ஒரு நொடியில் ஒடுங்கியது

நிம்மதியாய் நிசப்தம் தான்
நிலையாய் குடி கொண்டது

வேல் விழியாள் விழி திறக்க

வேதனைகள் தான் மறக்க

காந்தள் மலரே - நம்

காதல் உயிர் தான் தன்னை - என்

கையில் நான் ஏந்தி நின்றேன்

கண்மணியாள் கண் திறக்க

காதலோடு எனை பார்க்க

குழந்தையடி நீ எனக்கு - நம்

குழந்தை அவள் தவழும் போதும்.......

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (3-May-20, 8:58 pm)
பார்வை : 332

மேலே