ஆடாரோ அவர்

திருவாரூரிலே தியாகராசப் பெருமானின் திருநடனத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தார் கவி காளமேகம். எவ்வளவு அரிய நடனம்! பெருமான்; எவ்வாறு ஆடுகின்றார்! என்று போற்றினார் ஒருவர். அப்போது, 'ஏனய்யா அவர் ஆட மாட்டார்?' என்ற பாடிய நிந்தாஸ்துதி இது.

நேரிசை வெண்பா

ஆடாரோ பின்னையவ ரன்பரெல்லாம் பார்த்திருக்க
நீடாரூர் வீதியிலே நின்றுதான் - தோடாரும்
மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர்
கைக்கே பணமிருந்தக் கால். 111

- கவி காளமேகம்

பொருளுரை:

“கையிலே பணமிருந்த தென்றால் அவன் ஏனய்யா வீதியில் ஆட்டம் போடமாட்டான்?" என்று எக்காளமாகக் கேட்கிறார் கவிஞர்.

காதுகளிலே பொருந்தியிருக்கும் தோடுகளும், உடலிடத்தே கமழ்கின்ற வாசனைப் பொருள்களின் மணமும் உடையவர் இத் தியாகேசர், அவர் கையிடனில் பணம் இருந்ததென்றால், (பணம் - பாம்பும் ஆம்) அவர் தம் அடியவர்கள் அனைவரும் கண்டு இன்புற்றிருக்க, திருவாரூர்த் தெருவிலே நின்று இப்படி ஆடமாட்டாரோ?

‘கையிலே பணமிருந்தால் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவான்', என்ற உலகியற் கருத்தை வைத்து இப்படிக் கூறுகிறார்.

பணம் - பாம்புப் படமும், பணமும் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-20, 6:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே