முகத்தில் தெரியாத மனம்

முகத்தில் தெரியாத மனம்

மாலை 5 மணி இருக்கும், நானும் எனது தோழியும் எங்கள் வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் தூரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். எங்கள் தெரு நாய்கள் எல்லாம் அவரை சூழ்ந்து கொண்டு குரைக்க ஆரம்பித்தது , அவரோ திணற ஆரம்பித்தார். நானும் எனது தோழியும் ஓடிச்சென்று அவருக்கு உதவி செய்து அனுப்பிவைத்தோம். நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். பின்பு, ஒரு நாள் எதிர்பாராதவிதமாக அவரைப்பார்க்க நேரிட்டது. என்ன படிக்குற? இது போன்ற விஷயங்களை பேசினார், அப்போது எனது தந்தைக்கும் அவருக்கும் ஒரே வயது தான் என்பதை புரிந்து கொண்டேன். அதனால் அவரிடம் தயக்கமின்றி பேசினேன், அப்போதுதான் அவர் தானொரு ஓய்வு பெற்ற இராணுவவீரர் என்பதையும், தன் குடும்பம் அடுத்த ஊரில் இருப்பதையும் சொன்னார். ஒரு நாள் என் தந்தையையும் பார்த்து பேசும் சந்தர்ப்பம் அவருக்கு அமைந்தது. இன்னும் ஒரு நாள் நானும் எனது தோழியும் அவரை பெருந்தினுள் சந்தித்தோம், எங்களை பார்த்ததும் எங்களிடமும் வந்தவர் வாங்க என்னோட வீடு அடுத்த பஸ் நிறுத்தத்தில் தன இருக்கிறது, எங்க வீட்டுக்கு வந்துட்டு போங்களேன் என்றார். நானோ, இல்லை இன்று வர முடியாது, நாங்கள் அவசர வேலையாக போய்க்கொண்டிருக்கிறோம், இன்னொரு நாள் என் தந்தையிடம் கேட்டு அனுமதி வாங்கிவிட்டு வருகிறோம் என்றேன். சரி என்று போய்விட்டார். இதன்பின் பல சமயங்கள்,என்னைத்தேடி எங்க வீட்டுக்கு வர ஆரம்பித்தார்.நான் எங்கே என்று என் அக்காவின் கணவரிடம் கேட்டதாக சொன்னார்கள், எனக்கென்னவோ அவரின் வருகையும், பேச்சும் கண்ணியமாகவே படவில்லை. சந்தர்ப்பத்திற்கு உதவி செய்தோம், பேசவேண்டிய சூழலில் பேசினோம், அவ்வளவு தான். மறுபடியும், மறுபடியும் வந்தால் அதற்க்கு என்ன அர்த்தம்? எனக்குப் புரியவில்லை, எரிச்சலாகவே வந்தது. இனிமேல் வந்தால், நறுக்கென்று நாலு வார்த்தையால் திட்டிவிடவேண்டுமென்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். பின்பு, சில மாதங்கள் பார்க்கவே இல்லை, அப்பாடா.....! சனியன் தொலைந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். திடீரென ஒரு நாள் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன், என் பெயரைச் சொல்லி யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது, திரும்பி பார்த்தேன் கூப்பிட்டது அந்த ஆசாமி தான். நின்ற இடத்திலிருந்தே என்ன சார்? என்றேன், இல்லை இதுதான் எங்க வீடு,வீட்டுக்கு வந்துட்டு போயேன்... என்றார். அப்போது நேரம் காலை 8.30, இல்லை சார் எனக்கு இப்பவே நேரம் ஆகிடுச்சு என்றேன். அவர் மறுபடியும் ஒரு 10 நிமிஷம் தான் வந்துட்டு போயேன் என்றார்...எனக்கு கோபமாக வந்தது. கோபத்தை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை, நான் கிளம்புறேன் என்றபடி கொஞ்சம் வேகமாகவே நடக்க ஆரம்பித்தேன். என்னை பிடிக்கவேண்டும் என்பது போல அவரும் வேகமாகவே ஓடி வந்தார், அவ்வளவு தான் என் கால்களில் இருந்த செருப்பைக் கழட்டிவிட்டு ஓட ஆரம்பித்தேன். அந்த தெருவில் யாருமே இல்லை, திரும்பி பார்த்தேன் துரத்திக்கொண்டே வந்தார்.என் முழு பலத்தையும் பிரயோகித்து அடுத்த தெருவுக்குள் ஓட ஆரம்பித்தேன். எத்தனை தமிழ் சினிமா பார்த்திருப்போம், இதுகூடவா நமக்குத் தெரியாது. கண்களைப் பார்த்து பேச தடுமாறுகிற எவனும் கள்வனே... “ பெண்கள் எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே இருக்க வேண்டும்” என்ற என் தந்தையின் வார்த்தைகள் என் காதுக்குள் ரீங்காரம் செய்தன. இதுவும் ஒருவகை விழிப்புணர்வு தான்.


முற்றும்....

எழுதியவர் : Ranjeni K (31-May-20, 3:35 pm)
சேர்த்தது : Ranjeni K
பார்வை : 120

மேலே